இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம், புறக்கணித்த திமுக, ஆம் ஆத்மி
ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் கூடியது. தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு காங்கிரஸ் தவெக பக்கம் சாய்ந்ததால், இந்தக் கூட்டத்தை திமுக புறக்கணித்த நிலையில், டெல்லி, ஹரியானா தேர்தல்களில் தங்களை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் இருக்கும் இடத்தில் தாங்கள் எப்படி இருக்க முடியும் என்று கூறி ஆம் ஆத்மியும் பின்வாங்கியது.
எப்போது உருவானது இந்தியா கூட்டணி?
2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இந்தியா முழுவதுமுள்ள, பாஜக எதிர்ப்பு நிலைப்பாடு கொண்ட கட்சிகளை ஒருங்கிணைத்து கட்டமைக்கப்பட்டது தான் இந்தியா கூட்டணி. காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் உட்பட நாடு முழுவதுமுள்ள பலம் வாய்ந்த மாநில கட்சிகளை ஓரணியில் திரட்டி வலுவான கூட்டணியை உருவாக்கியதன் விளைவாய், 2024 மக்களவை தேர்தலில் 234 தொகுதிகளை கைப்பற்றி அசைக்க முடியாத எதிர்க்கட்சியாக உருவெடுத்தது இந்தியா கூட்டணி.
5 மாநில தேர்தலுக்கு பிறகு...
இப்படிப்பட்ட இந்தியா கூட்டணி, 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுக்கு பின் ஏற்பட்ட விரிசல் காரணமாக ஆட்டம் காண ஆரம்பித்திருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் மாபெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்த தவெகவுடன் கைகோர்த்த காங்கிரஸ், முறையாக சொல்லிக் கொள்ளாமல் கூட திமுக உடன் கூட்டணியை முறித்துக் கொண்டு தவெக உடன் ஐக்கியமாகி அமைச்சரவையிலும் இடம்பெற்றது. இதன் மூலம் திமுக உடனான நீண்ட கால கூட்டணி முடிவுக்கு வந்ததோடு, தேசிய அளவிலும் இந்த மனக்கசப்பு எதிரொலிக்கும் சூழல் உருவானது.
ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த திமுக
இந்த நிலையில் தான் மீண்டும் கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில் டெல்லியில் கூடியது இந்தியா கூட்டணி கட்சிகளின் ஐந்தாம் கட்ட ஆலோசனைக் கூட்டம். இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என திமுக ஏற்கெனவே அறிவித்த நிலையில், காங்கிரஸ் மீதான அதிருப்தி காரணமாக ஆம் ஆத்மி கட்சியும் இந்தக் கூட்டத்தை புறக்கணித்தது.
வைகோ, திருமாவளவன் பங்கேற்பு
டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், மம்தா பானர்ஜி, எம்.பி சுப்ரியா சுலே, ஃப்ரூக் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உட்பட 23 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். சிவசேனா கட்சியின் உத்தவ் பிரிவு தலைவர் உத்தவ் தாக்கரே இணையவழியாக கூட்டத்தில் பங்கேற்றார். தமிழ்நாட்டில் இருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தவெகவுக்கு அழைப்பு இல்லை
தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருக்கும் தவெக சார்பில், இந்தக் கூட்டத்தில் யாரும் பங்கேற்காதது பேசுபொருளாக மாறியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கும் கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதாக காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்து வந்த முக்கிய கட்சியான திமுகவை பகைத்துக் கொள்ள விரும்பாததும், திமுகவை மீண்டும் இந்தியா கூட்டணிக்கு இழுக்கும் முயற்சி காரணமாகவே, தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
தலைவர்களின் விமர்சனங்கள் அடங்கிய பேனர்
இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்துக்கு மத்தியில், காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து, டெல்லி முழுவதும் இந்தியில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. உதாரணத்திற்கு, காங்கிரஸ் முதுகில் குத்தியதாக உதயநிதி விமர்சித்தது போன்ற பல்வேறு இந்தியா கூட்டணி தலைவர்கள் காங்கிரசை சாடிய வாசகங்கள் அடங்கி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்ன?
மனமாச்சர்யங்களை கடந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்கொள்ளத் தேவைப்படும் நடவடிக்கை குறித்தும், 2029 மக்களவை தேர்தலை எவ்வாறு ஒற்றுமையுடன் எதிர்கொள்வது, குறிப்பாக கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து தேச நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படுவது குறித்தும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், பொருளாதார சீரற்ற நிலை, நீட் உள்ளிட்ட தேர்வு முறைகளில் நிலவும் மோசமான நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
கூட்டத்துக்கு பின் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைமையில் எந்தவிதமான சிறு கருத்து வேறுபாடுகளுக்கும் இடம் கொடுக்காமல் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

