நாலா பக்கமும் தண்ணீர்.. வெள்ளத்தில் மூழ்கிய கார்
குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட காரின் மேற்கூரையில் தம்பதிகள் இருவர் சிக்கிய வீடியோ ஒன்று வெளியாகி அனைவரது கதி கலங்க வைத்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டோடியது. பெரும்பாலான ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக அதிகரித்தது. இந்நிலையில், குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட காரின் மேற்கூரையில் தம்பதிகள் இருவர் சிக்கித் தவித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
கரோல் நதியில் வெள்ளம் கரைபுரண்டோடிக் கொண்டிருந்த போது, ஆபத்தை உணராமல் அவ்வழியாக வந்த தம்பதிகளின் கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனையடுத்து தம்பதிகள் பதுகாப்பாக இருக்க தங்கள் காரின் மேற்கூரையில் உட்கார்ந்து கொண்டனர்.
நாலா பக்கமும் வேகமாக ஓடும் தண்ணீரால் கார் சிக்கி இருந்தாலும், தம்பதியினர் எந்தவித பதற்றமும் இல்லாமல் அமைதியாக மீட்புபடை வரும் வரை 2 மணி நேரமாகவே அங்கேயே காத்திருந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற மீட்புப்படையினர் காரின் மேற்கூரையில் சிக்கியிருந்த இருவரையும் பத்திரமாக மீட்டனர்.
சபர்கந்தா மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட காரின் மேற்கூரையில் அமர்ந்து இருந்த தம்பதிகள் இருவர் எந்தவொரு பதற்றமும் இல்லாமல் இருக்கும் வீடியோவுக்கு தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

