திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். சுமார் 50 திருமணங்கள் நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பொது மற்றும் ரூ.100 கட்டண தரிசன வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராட பக்தர்கள் சுமார் 3 மணி காத்திருந்து வருகின்றனர். இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் கோவில் வளாகத்தில் பல்வேறு இடங்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது. போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.