’வசனம் பேசிய முதலமைச்சர் எங்கே?’ 
news

"சிங்கப்பெண் படை எங்கே?" என உதயநிதி ஸ்டாலின் கேள்வி

அரசுப்பள்ளி மாணவி பட்டப்பகலில் கடத்தி, கூட்டுப்பாலியல் வன்கொடுமை என உதயநிதி குற்றம் சாட்டி உள்ளார்.

Azhagiri Arumugam

அரசுப்பள்ளி மாணவி பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் இருந்தே கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப்பாலியல் வன்கொடுமை என உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். சிங்கப்பெண் படை எங்கே? பெண்கள் பாதுகாப்பில் அண்ணனா இருப்பேன் - அரணா இருப்பேன் என்று வசனம் பேசிய முதலமைச்சர் எங்கே? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

அரசுப்பள்ளி மாணவியை...
இதுதொடர்பாக, எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருப்பாதவது;
சிங்கப்பெண் படை எங்கே? பெண்கள் பாதுகாப்பில் அண்ணனா இருப்பேன், அரணா இருப்பேன் என்று வாய்கிழிய வசனம் பேசிய முதலமைச்சர் எங்கே?
சென்னை வண்டலூர் அருகே அரசுப்பள்ளி மாணவியை மர்ம நபர்கள் சிலர் பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் இருந்தே கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பாதுகாப்பு இல்லை
பெண்கள் பாதுகாப்பில் No compromise என்று சொல்லிக்கொள்ளும் டம்மி முதலமைச்சரின் சர்க்கஸ் ஆட்சியில், அரசுப்பள்ளி வளாகத்திலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வெட்கக்கேடு.

பாம்புக்கடி என மடைமாற்றம்...
மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக முதலமைச்சர் வருகிறார் என்று சொல்லி, இந்த சம்பவத்தை காவல்துறையும் அதிகாரிகளும் மூடி மறைக்க முயற்சி செய்வதும் பாம்புக்கடி என்று மடைமாற்றுவதும், தமிழ்நாடு எவ்வளவு மோசமானவர்கள் கைகளில் சிக்கி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

போலீஸ் மிரட்டல்
குற்றவாளிகளைப் பிடிக்க வக்கின்றி பாதிக்கப்பட்ட பெற்றோரின் செல்போன்களை கைப்பற்றி இந்த சம்பவம் குறித்து பொது வெளியில் பேசக்கூடாது என்று போலீஸ் தரப்பில் மிரட்டல் விடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த ரீல்ஸ் ஆட்சியாளர்களின் அராஜகப் போக்கு, குற்றவாளிகளுக்கு கூடுதல் தைரியத்தை அளிப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களை மேலும் சித்திரவதை செய்வது போல் இருக்கிறது.

முகத்தில் கரியை பூசுவது உறுதி
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு அவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப்பள்ளி உட்பட அனைத்துப்பள்ளி வளாகங்களிலும் பிள்ளைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். இடைத்தேர்தல் வருகிறது என்று இந்த கொடுமையை மூடி மறைக்க முயற்சித்தால், மக்கள் இந்த ஆட்சியாளர்கள் முகத்தில் கரியை பூசுவது உறுதி.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.