Also Watch
Read this
ராமநாதபுரத்தில், லேத் பட்டறையில் உயர்ரக போதைப்பொருள் தயாரித்து விற்பனை செய்த 9 பேர் கொண்ட கும்பலை கைது செய்த காவல்துறையினர் 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைனையும் பறிமுதல் செய்துள்ளனர். போதைப்பொருள் தயாரிப்புக்கு மூளையாக இருந்த நபர் மலேசியாவில் அதன் செய்முறையை கற்றுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் மேலும் பலர் சிக்குவார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஒன்பது பேருக்கு பின்னால்...
ஆய்வகத்தில் பயன்படுத்தப்படும் கண்ணாடி குடுவைகளுடன் சயின்டிஸ்ட் செட்டப்பில், மெத்தபெட்டமைன் தயாரித்து விற்பனை செய்த 9 பேருக்கு பின்னால் பெரிய நெட்வொர்க்கே இயங்கி கொண்டிருக்கிறதாம்.

கன்னியாகுமரி மாவட்டம், செட்டிச்சார்விளை பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஜெபிஸ், ராமநாதபுரத்தில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறார். அவரிடம் இருந்து 1 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்த போலீசார், யாரிடம் இருந்து போதைப்பொருள் கிடைத்தது? என விசாரணை நடத்தினர். அதில், காரிக்கூட்டம் பகுதியை சேர்ந்த இருவரது பெயரை அவர்கூற அந்த இருவரது வீடுகளிலும் போதைப்பொருள் தடுப்புக்குழுவினர் சோதனை நடத்தினர்.

தொடர் விசாரணை...
அப்போது, 8 கிராம் மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதில், இளையான்குடி பகுதியை சேர்ந்த ஷேக் முகமதுவிடம் இருந்து போதைப்பொருள் வாங்கியது தெரியவந்தது.. அடுத்து ஷேக் முகமதுவை மடக்கி பிடித்து, 120 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து ஹபீபுர் ரகுமான், சிக்கந்தர் பாதுஷா, ஜமால் முகைதீன் ஆகிய 3 பேர் சிக்கினர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில்தான் முக்கியப் புள்ளியான சாகுல் ஹமீது சிக்கினார்.

மலேசியாவில் கற்று...
சென்னையில், தோல் பொருள் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த சாகுல் ஹமீது அது சம்மந்தமான பல கெமிக்கல்களை அடிக்கடி வாங்கி உள்ளார். அப்படி வாங்கும்போது மெத்தபெட்டமைன் தயாரிப்பதற்காக மூலப்பொருட்கள் என்னென்ன? அதனை எப்படி தயாரிக்க வேண்டும்? என்பது குறித்து தெரிந்து கொண்டார்.

அதோடு, வேலை சம்மந்தமாக மலேசியாவுக்கும் சென்று வந்த சாகுல் ஹமீது போதைப்பொருள் தயாரிக்கும் முறையை அங்கு சிலரிடம் கற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. அப்படி கற்றுகொண்ட வித்தையை வைத்து இளையான்குடியில் உள்ள தனது நண்பர் ஜாகீர் உசேனுக்கு சொந்தமான லேத் பட்டறையில் மெத்தபெட்டமைன் தயாரித்துள்ளார் சாகுல் ஹமீது.

ஒன்பது பேர் கைது
இந்த ஆய்வத்தில் ஆய்வு செய்த போதைப்பொருள் தடுப்புக்குழுவினர் 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான 670 கிராம் பெத்தபெட்டமைன், 1.9 கிலோ சிவப்பு பாஸ்பரஸ், தின்னர் மற்றும் சில மூலப்பொருட்களையும் கைப்பற்றி உள்ளனர்.

சாகுல் ஹமீது, ஜாகீர் உசேன், ஜெபிஸ், அஸ்லான், முகமது ஜெமி, ஷேக் முகமது, சிக்கந்தர் பாஷா, ஹபீபுர் ரகுமான், ஜலால் முகைதீன் என 9 பேர் கூண்டோடு கைது செய்யப்பட்டு உள்ளனர். மெத்தபெட்டமைன் தயாரித்தவர், தயாரிக்க இடம் கொடுத்தவர், விற்றவர், வாங்கியவர் என பிடிபட்ட இந்த 9 பேருக்கு பின்னால் சென்னை, கேரளா, கன்னியாகுமரியை சேர்ந்த பெரிய நெட்வொர்க்கே இருப்பதாகவும் அவர்கள் கூடிய விரைவில் சிக்க வாய்ப்பிருப்பதகாவும் காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved