

விசாரணையில் இறங்கி உள்ள சிபிசிஐடி அதிகாரிகள் குற்றப்பின்னணி கொண்டவர்கள் மற்றும் பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு வட்டம்போட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஆலம்பூண்டி கிராமத்தில்...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமம் குளக்கரை தெருவை சேர்ந்த வடிவேலு-பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா கடந்த 11ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடிய மறுநாளே விடிந்தும் விடியாமலும் மாயமானர். ஊர் முழுக்க தேடி அலைந்த உறவினர்கள் அடுத்து சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
ஊரில் உள்ள விவசாய கிணறு, வயல்வெளி, கரும்புத்தோட்டம், சிறுவாடி காப்புக்காடு, தண்ணீர் தொட்டி, மாட்டுச்சாணி கொட்டி வைக்கும் இடங்கள், குப்பைத்தொட்டி, ஊரைச்சுற்றி உள்ள மலைக்குன்று என ஒரு இடத்தையும் விடாமல் போலீசார் அலசி ஆராயந்தனர். சம்பவம் நடந்த அன்று மட்டுமே 60 கிணறுகளை அலசிய தீயணைப்பு வீரர்கள், மழை பெய்து வருவதை தொடர்ந்து மீண்டும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
600 பேரிடம் விசாரணை
அதேபோல், சிறுமியின் வீட்டருகே உள்ள செல்போன் கோபுரத்தில் பதிவான எண்களைக் கண்டறிந்து, அந்த எண்களின் உரிமையாளர்களின் முகவரிகளையும் திரட்டினர். இதன் அடிப்படையில் 600 பேர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். சம்பவத்தன்று சிறுமியுடன் தூங்கிய அவரது தாய், பாட்டி, தந்தையிடம் ஒருபக்கம் விசாரணை நடந்து வரும் நிலையில் சிறுமி வழக்கமாக விளையாட செல்லும் வீடுகள், சிறுமியுடன் விளையாடும் சிறுமிகள், பிறந்த நாளன்று சிறுமி சிவன் கோவிலுக்கு சென்றதாக கூறப்படும் நிலையில், அந்த கோவிலுக்கு வந்தவர்கள் மற்றும் சிறுமியுடன் கோவிலுக்கு சென்றவர்கள், அக்கம்பக்கத்தினர், பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இருந்தவர்களிடமும் மறுபுறம் விசாரணை நடந்து வருகிறது.
அதேபோல், சிறுமியின் வீட்டில் இருந்து புதுச்சேரி-கிருஷ்ணகிரி பைபாஸ் சாலை 1 கிலோமீட்டர் தூரத்திலேயே உள்ளதால் அவ்வழியாக சென்ற வாகனங்களையும் சிசிடிவி கேமராக்களில் ஆராய்ந்தனர். அதோடு, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 600க்கும் மேற்பட்ட கேமரா பதிவுகளும் ஆராயப்பட்டது.
ரூ.2 லட்சம் பரிசு
இதனிடையே, சிறுமியைக் கண்டுபிடித்துத் தருவோருக்கு ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டு அதுதொடர்பான போஸ்டர்களும் செஞ்சி பகுதியில் ஒட்டப்பட்டன. அதுமட்டுமல்லாது, மலையனூர் கோவிலுக்கு மனைவியுடன் சென்றுவிட்டு தஞ்சாவூருக்கு திரும்பி கொண்டிருந்த சாமியார் சரவணனும் விசாரணைக்குள் வந்தார்.
அவரது செல்போன் சிறுமியின் வீட்டிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் தான் ஸ்விட்ச ஆப் ஆனது என்பதாலும், ஒருவேளை நரபலி கொடுப்பதற்காக ஏதேனும் சூழ்ச்சி நடந்துள்ளதா? என்ற அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், சார்ஜ் இல்லாமல்தான் ஸ்விட்ச் ஆப் ஆனதாக வாக்குமூலம் அளித்துள்ளார் அந்த சாமியார்.
சிபிசிஐடி விசாரணை
கடந்த 10 நாட்களுக்கு மேலாக, காவல்துறையும் உண்ணாமல், உறங்காமல் வெயில் மழை பாராமல் தேடாத இடமில்லை, விசாரிக்காத ஆட்கள் இல்லை. ஆனாலும், சிறுமியை பற்றிய சிறு தகவல்கூட கிடைக்கவில்லை.
அடுத்து, இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவிட்டார். அதன்பிறகு, விசாரணையை கையில் எடுத்த சிபிசிஐடி அதிகாரிகள், முதல் நாளில் கிராமத்தையே விசாரணையால் சல்லடை போட்டனர். 2ஆவது நாளாகவும் விசாரணையை முன்னெடுத்துள்ள சிபிசிஐடி போலீசார், உள்ளூர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் குற்றப் பின்னணி கொண்டவர்கள், போக்சோ வழக்குகளில் தொடர்புடையவர்களை வட்டம் போட்டு விசாரிக்கும்பணியில் இறங்கி உள்ளனர்.
நம்பிக்கையுடன் தாய்
இதுஒருபுறமிருக்க, ஏற்கெனவே சோறு தண்ணீர் இல்லாமல் வாடிக்கிடக்கும் தங்கள் மீது மேலும் சேற்றை வாரி இறைப்பதுபோல் பிள்ளையை நாங்களே விற்றுவிட்டோம் என பழியை போடுவது நியாயமா? என கலங்கிய சிறுமியின் தாய், தனது மகள் கிடைத்து அந்த பழிச்சொல் நிச்சயம் நீங்கும் எனவும் கூறினார்.
அதேபோல், ஜாதகத்தையும் பெயர் ராசியையும் வைத்து உறவினர்கள் ஜோசியம் பார்த்ததாகவும், தனது மகளுக்கு ஆயுள் கெட்டி என ஜோசியர் கூறி உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தார் சிறுமியின் தாய் கௌசல்யா.
சிறுமி மாயமானதில் இருந்து இன்று வரை பரபரப்பிற்கு பஞ்சமில்லாத நிலையே நீடிக்கிறது. சிறுமியை பற்றிய மர்மம் எப்போது விலகும் என்ற எதிர்பார்ப்பில் தமிழகமே காத்திருக்கிறது.