தமிழ்நாடு

INDIA கூட்டணிக்கு பலம் சேர்ப்பீர்.. கவன சிதறல்களுக்கு இடமளிக்காதீர்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

பாஜக அரசின் ஊழல் முறைகேடுகள், ஜனநாயக விரோத செயல்பாடுகள், மாநில உரிமை பறிப்பு நடவடிக்கைகள், வெறுப்பு அரசியலின் தீமைகளைப் பற்றித் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு I.N.D.I.A கூட்டணிக்கு பலம் சேர்ப்பீர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொய் புரட்டு, திட்டமிட்ட அவதூறு என பாஜக வினர் செய்யும் திசைத்திருப்பும் தந்திரத்தை உணர்ந்து முறியடிப்பீர் எனவும் கவன சிதறல்களுக்கு இடம் தராதீர்கள் எனவும் திமுகவினரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரச்சனைகளை உள்நோக்கத்தோடு திரித்து, ஊடகங்களின் துணையோடு பூதாகரமாக ஆக்கி, நாட்டின் உண்மை பிரச்சினைகளை மறக்கடிக்கச் செய்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதில் பா.ஜ.க.வினர் வல்லவர்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாட்டில் பற்றி எரியும் பிரச்சினைகளுக்கு வாய்திறக்காதபிரதமர் மோடி, ‘சனாதனம் குறித்து தக்க பதில் சொல்லுங்கள்’ என மத்திய அமைச்சர்கள் அனைவருக்கும் உத்தரவு போடுவதாக குறிப்பிட்ட முதலமைச்சர், அதன் மூலம் பிரதமர் மோடி குளிர்காய நினைப்பதாகவும் சாடினார்.

2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி தேர்தலுக்கு முன்னால் கொடுத்த எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என விமர்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை முழுமையாக மீட்பேன் என வாக்களித்தாரே மீட்டாரா? மீட்கப்பட்ட கருப்புப் பணத்தை இந்திய மக்கள் அனைவருக்கும் 15 லட்சம் ரூபாயாகத் தருவேன் என்றாரே தந்தாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.

ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவேன் என வாக்களித்த பிரதமர் மோடி, எந்த வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரவில்லை எனவும் விமர்சித்தார்.

பாரத்மாலா திட்டம், துவாரகா விரைவுப் பாதைக் கட்டுமானத் திட்டம், சுங்கச் சாவடி கட்டணங்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டம், அயோத்தியா மேம்பாட்டுத் திட்டம், கிராமப்புர அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டம், எச்.ஏ.எல். விமான வடிவமைப்புத் திட்டம் என மத்திய அரசின் ஏழு திட்டங்களிலும் முறைகேடு மற்றும் விதிமீறல்கள் நடந்துள்ளதாகவும் நிதியைக் கையாள்வதில் மோசடிகள் அரங்கேறியுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ஏழரை லட்சம் கோடி ரூபாய் எனவும் சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்தியிருப்பதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் மகத்தான வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், பா.ஜ.க.வின் ஊழல், மதவாத எதேச்சாதிகார முகத்தை அம்பலப்படுத்தி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியைத் தோற்கடிப்பதன் மூலம், நாட்டையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பது என்ற உன்னதமான இலக்கில் வெற்றி பெற அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும் எனவும் எந்த ஒரு கவனச் சிதறலுக்கும் இடமளித்துவிடக் கூடாது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

00 Comments

Leave a comment