கோலாகலமாக நடைபெற்ற சென்னை பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அரங்கத்தில் அனுமதி அளிக்கப்படாததால் வாக்குவாதம் ஏற்பட்டது... குடியரசு தலைவர் பேசி கொண்டிருக்கும் போதே மாணவர்கள் வெளியேற அவர்களை காவல்துறையினர் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பல்கலைக்கழகத்தின் 165 வது பட்டமளிப்பு விழா, கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்று பட்டங்களை வழங்கினர்.
முன்னதாக நிகழ்வில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்று பாடினார் மகாகவி பாரதியார். அதற்கு எடுத்துக்காட்டாக இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் நாற்காலியில் அமர்ந்து கோலோச்சி வரும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களுக்கு எனது வணக்கங்களையும் வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
பல்கலைக்கழக மானியக் குழுவானது “சிறந்து விளங்கும் திறன்கொண்ட பல்கலைக்கழகம் என்ற சிறப்பு அடைமொழியினை சென்னைப் பல்கலைக்கழகத்துக்குத் தந்துள்ளது. இந்தியக் குடியரசுத் தலைவர்களாக இருந்த ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி, வெங்கட்ராமன், ஏ.பி.ஜே.அப்துல் கலாம் என ஏராளமான குடியரசுத் தலைவர்கள் படித்த பல்கலைக் கழகம் சென்னைப் பல்கலைக்கழகம். முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள் உட்பட பல தலைசிறந்த பெண் ஆளுமைகளை வழங்கிய பெருமை இந்தப் பல்கலைக்கழகத்திற்கு உண்டு.
தமிழ்நாட்டின் தலைமகன் அண்ணா இந்த பல்கலைக்கழகத்தில் தான் படித்தார். இன்று முதலமைச்சராக உங்கள் முன் உரையாற்றும் நானும் இதே பல்கலைக்கழகத்தை சார்ந்தவன் தான். அந்த வகையில் உங்கள் சீனியராகவும் நான் இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டுள்ளேன். தமிழ்நாடு என்பது இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக இருக்கிறது. இந்தியாவில் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டில் மட்டுமே 18 நிறுவனங்கள் உள்ளன.
கல்வியில் சிறந்த மாநிலமாக நாம் உயர்ந்து நிற்கிறோம். 100 ஆண்டுகளுக்கு முன்னால் நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் கல்விக்காக போட்ட விதைதான் இதற்குக் காரணம்.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு” உங்களின் அறிவு, தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போல தொடர்ந்து பெருகிக்கொண்டே இருக்கவேண்டும். பட்டம் வாங்குவதோடு உங்களது படிப்பு முடிந்து விடுவது இல்லை. ஒரே பட்டத்துடன் நிறுத்திவிடாதீர்கள். தொடர்ந்து படியுங்கள். தகுதியான வேலை கிடைத்த பிறகும் படிப்பதை நிறுத்திவிடாதீர்கள்.
யாராலும் பறிக்க முடியாத சொத்து என்பது கல்வியறிவு தான். நீங்கள் இன்று பட்டம் பெறுவதை பார்த்து உங்கள் பெற்றோர்கள் எத்தகைய மகிழ்ச்சியையும், பூரிப்பையும் அடைகிறார்களோ, அதே அளவு மகிழ்ச்சியை நானும் அடைகிறேன். முதலமைச்சராக மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தைச் சார்ந்த ஒருவனாக உங்களைப் பார்த்து பெருமைப்படுகிறேன்.
இன்று உங்கள் குடும்பத்திற்கும் பல்கலைக்கழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள நீங்கள், எதிர்காலத்தில் நமது தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இதேபோல பெருமைத்தேடித் தர வேண்டும், அதுதான் நான் உங்களுக்கு வைக்கக்கூடிய வேண்டுகோள். சென்னைப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் நிதி ஆதாரப் பெருக்கத்திற்கும் தமிழ்நாடு அரசும் உயர்கல்வித் துறையும் என்றென்றும் துணை நிற்கும்", என்றார்.
00 Comments
Leave a comment