தமிழ்நாடு

பதவி முக்கியம் பிகிலு..! கவுன்சிலர்களுக்கு கேரள இன்பச்சுற்றுலா..! சேலம் மேயரின் பக்கா பிளான் | Salem

சேலம் மேயர் ராமச்சந்திரன், கவுன்சிலர்கள் 40 பேரை அவர்களின் குடும்பத்துடன் கேரளாவிற்கு இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்று இருப்பது தான் மாநகர மக்களின் தற்போதையை ஹாட் நியூஸ். நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபனுடன் சேர்ந்து கொண்டு தனக்கு குடைச்சல் கொடுக்கும் கவுன்சிலர்களை சரிகட்ட 2 சொகுசு பேருந்துகளில் கேரளாவிற்கு இன்பச்சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் திமுகவில் கோஷ்டி பூசல் நாளுக்கு நாள் வீரியம் அடைந்து கொண்டே வருகிறது சேலம் மாவட்டத்தை கிழக்கு மேற்கு மத்திய மாவட்டம் என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தாலும் நான்காவதாக எஸ்ஆர். பார்த்திபன் எம்பி அவர் தலைமையில் ஒரு கோஷ்டி உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. எஸ்ஆர். பார்த்திபன் தனது பங்கிற்கு மாநகராட்சியில் உள்ள சில திமுக கவுன்சிலர்களை தனது வசம் வைத்துள்ளதாகவும் எந்த நேரத்திலும் அவர்கள் கொதித்து எழுந்தால் மேயரை மாற்ற வேண்டிய கோரிக்கை எழும் என்ற சூழ்நிலை உள்ளது. ஏற்கனவே மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரனை மாற்றவேண்டும் என அவருக்கு எதிராக தலைமைக்கு புகார் கடிதம் அனுப்பிய மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் சரவணன் மற்றும் ஜெயக்குமார் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று அதிருப்தியில் மேலும் பல கவுன்சிலர்கள் உள்ளனர். இந்தநிலையில், தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள மத்திய மாவட்ட செயலாளர் ஆலோசனைப்படி மேயர் இராமச்சந்திரன், மாநகராட்சியில் உள்ள திமுக கவுன்சிலர்களை சரிகட்ட புது வியூகம் வகுத்துள்ளார். அதன்படி திமுக கவுன்சிலர்கள் 40 பேரை கேரளாவுக்கு மூன்று நாள் இன்ப சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஒவ்வொரு கவுன்சிலரும் அவருடன் மூன்று பேரை அழைத்துவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதில் சில கவுன்சிலர்கள் தனது குடும்பத்தினரையும், சிலர் தனது நண்பர்களையும் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு சகல வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாவில் பங்கேற்க சில மூத்த திமுக கவுன்சிலர்கள் விருப்பம் இல்லாமல் விலகிக் கொண்டிருக்கிறார்கள். சேலம் மாநகராட்சிக்கு போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு திட்டப் பணிகளும் மேற்கொள்ள முடியாமல் உள்ளது. பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை குழி வெட்டப்பட்டு அது நிறைவு பெறாமல் மரண குழியாக காட்சியளிக்கின்றது. குடிநீர் பிரச்சனை, தெரு விளக்கு பிரச்சனை, மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்பள பிரச்சினை, தூய்மை பணியாளர்களுக்கு இடம் மாறுதல் பிரச்சனை என ஏராளமான பிரச்சனைகள் அன்றாடம் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும் நிலையில், மேயர் ராமச்சந்திரன் தனது பதவியை தற்காத்துக் கொள்ள கவுன்சிலர்களுடன் இன்ப சுற்றுலாவுக்கு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

00 Comments

Leave a comment