தமிழ்நாடு

ஏரியிலிருந்து தண்ணீர் உறிஞ்சிய மாஃபியா கும்பல் அம்பலப்படுத்திய நியூஸ் தமிழ்..! சில நிமிடங்களில் அதிரடி ஆக்சன். | Chennai

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அருகேயுள்ள கீழ்கட்டளை ஏரியில் 24 மணி நேரமும் ராட்சத பைப்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு டேங்கர் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தண்ணீர் மாஃபியாக்களின் அட்டூழியம் குறித்து நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள், முறையற்ற மின் இணைப்புகளை துண்டித்து அதிரடி ஆக்ஷனில் ஈடுபட்டனர்.

 

மக்களின் தாகம் தீர்ப்பதற்கே போதிய தண்ணீர் இல்லாமல் திண்டாடி வரும் நிலையில், ஏரியில் இருந்து தண்ணீரை எடுத்து விற்பனை செய்த தண்ணீர் மாஃபியாக்கள் குறித்து நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே சம்பவ இடத்திற்கு சென்று அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்திய காட்சிகள்தான் இவை.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் துரைபாக்கம் ரேடியல் சாலையின் இருபுறமும் கீழ்கட்டளை ஏரி உள்ளது. கீழ்கட்டளை ஏரி மற்றும் அருகில் உள்ள கிணறுகளில் இருந்து ராட்சத பைப்கள் மூலம் தினமும் பல்லாயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்பட்டு, டேங்கர் லாரிகள் மூலம் ஐ.டி. கம்பெனிகளுக்கும், அடுக்குமாடி குடியிருப்புகளும் கொள்ளை லாபத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.


கீழ்கட்டளை ஏரியையே தண்ணீர் மாஃபியா கைப்பற்றிவிட்டது என்று கூறும் அளவிற்கு இரவு, பகல் என 24 மணி நேரமும் தண்ணீர் எடுக்கப்படுவதால் ஏரியின் நீர்மட்டமே படிப்படியாக சரிவை நோக்கிச் சென்றது. சில மாதங்களுக்கு முன்பு திருட்டுத்தனமாக தண்ணீர் உறிஞ்சும் டேங்கர் லாரிகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்த நிலையில், தற்போது 50 முதல் 60 லாரிகளாக உயர்ந்தது. தண்ணீர் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் சாலையோரங்களில் அணிவகுத்து நிற்கப்படுவதாலும், சாலைகளில் அதிவேகமாக செல்வதாலும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.


அப்பகுதி மக்களின் அன்றாட தேவையை பூர்த்தி செய்வதற்கே போதுமான தண்ணீர் இல்லாமல் அல்லல்பட்டு வரும் நிலையில், ஏரிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரை எடுத்து விற்பனை செய்து வரும் தண்ணீர் மாஃபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பானது.

செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே சம்பவ இடத்திற்கு சென்ற தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, ஏரிகளில் இருந்து சட்ட விரோதமாக தண்ணீர் உறிஞ்சப் பயன்படுத்தப்பட்ட ராட்சத பைப்புகள் மற்றும் மோட்டார்களை அகற்ற உத்தரவிட்டார். அதனையடுத்து, வருவாய் துறை மற்றும் மின்சாரத் துறை ஊழியர்கள் அங்கிருந்த 16 போர்வெல் மற்றும் 34 மின் இணைப்புகளை துண்டித்தனர். மேலும், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், தாம்பரம் வட்டாட்சியர் கவிதா ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


ஏரிகளில் இருந்து சட்ட விரோதமாக தண்ணீர் உறிஞ்சப்படுவது குறித்து ஆதாரத்துடன் செய்தி வெளியிட்ட நியூஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர்.

00 Comments

Leave a comment