Also Watch
Read this
இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறிவைத்து, அலை அலையாய் ஏவுகணைகளை வீசி, ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.

19ஆவது நாள், போர்...
19ஆவது நாளை, போர் எட்டியிருக்கும் நிலையில் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தி உள்ளது. நேற்றிரவு ஜெருசலேம், டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய இடங்களை குறிவைத்து, கொத்து கொத்தாக ஏவுகணைகளை ஏவியது. இதனை, இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்தாலும், சில ஏவுகணைகள் குடியிருப்புகளை தாக்கின. இஸ்ரேலின் டெல் அவிவ் அருகே ஈரான் ஏவுகணைகள் சரமாரியாக தாக்கியதில், இருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். ரமத் கான் என்ற இடத்தில் தாக்குதல் தொடங்கிய உடன், நகரம் முழுவதும் அவசரகால வாகன சைரன்கள் ஒலிக்கப்பட்டு, பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குடியிருப்பு ஒன்றின், நான்காவது மாடியில் வசித்து வந்த முதிய தம்பதி பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் முன்பே தாக்குதலில் சிக்கி, உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிலர் காயமடைந்து உள்ளதாக கூறப்படும் நிலையில், அந்நகரில் உள்ள ரயில் நிலையத்தின் நடைமேடை சேதமடைந்து ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

அலி லர்ஜானி என்ன ஆனார்?
ஈரானின் மூத்த தலைவரும் அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் அணுசக்தி கொள்கைகளின் முக்கிய வடிவமைப்பாளருமான அலி லர்ஜானி, இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் உறுதிப்படுத்தி உள்ளது. தெஹ்ரானுக்கு அருகிலுள்ள அவரது மகளின் வீட்டில் நடைபெற்ற வான் வழித் தாக்குதலில், மகனுடன் சேர்த்து அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம், அந்நாட்டின் அரசியல் தலைமைக்கு ஒரு பெரும் பின்னடைவாக அமைந்து உள்ளது.

தக்க பதிலடி கொடுக்கப்படும்
மூத்த அரசியல் ஆளுமையான தேசிய பாதுகாப்பு செயலாளர் அலி லர்ஜானியின் கொலைக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று, ஈரான் சூளுரைத்து உள்ளது. இஸ்ரேல் படுகொலை செய்ததற்கு பதிலடியாக, cluster warheads எனப்படும் கொத்துத் தாக்குதல் வெடிகுண்டுகளைச் சுமந்து செல்லும் ஏவுகணைகளைக் கொண்டு டெல் அவிவ் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்து உள்ளது. இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறிவைத்து அலை அலையாய் ஏவுகணைகளை ஏவிய காட்சிகளும் வெளியாகி உள்ளது.

வீடியோ வெளியிட்டுள்ள இஸ்ரேல்
லெபானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவான தளங்கள் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலின் வீடியோவை இஸ்ரேல் வெளியிட்டு உள்ளது. இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை உறுதிபடுத்தியுள்ள லெபான் ராணுவம், நபாட்டியேவில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் மூன்று வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், இருவர் காயமடைந்ததாகவும் தெரிவித்து உள்ளது. மார்ச் 2ஆம் தேதி முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் மூலம் இதுவரை 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என்று லெபானின் சுகாதார அமைச்சம் தெரிவித்து உள்ளது.

அமெரிக்கா குண்டு வீச்சு
ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே உள்ள ஈரான் ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா, 2 ஆயிரத்து 200 கிலோ எடையுள்ள bunker buster குண்டுகளை வீசி உள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு நேரடி அச்சுறுத்தலாக இருந்த 'ஈரானின் கப்பல் எதிர்ப்பு குரூஸ் ஏவுகணைகளை' குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்து உள்ளது.

என்ன சொல்கிறார் டிரம்ப்?
ஈரான் உடனான மோதலில், நேட்டோ நாடுகள் உதவ முன்வராவிட்டாலும் உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை விரைவில் பாதுகாக்கப்படும் என்று, அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையை பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்குமாறு, ஆதரவு நாடுகளை டிரம்ப் வலியுறுத்தியிருந்த நிலையில், அமெரிக்க படைகளை அங்கு நிறுத்துவது மற்றொரு வியட்நாம் பாணி மோதலுக்கு வழிவகுக்கும் என்று ஈரான் விடுத்த எச்சரிக்கையை டிரம்ப் நிராகரித்ததாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், கடற்கரை பகுதிகளை தீவிரமாக தாக்கி வருவதாகவும், கடல் சார்ந்த பகுதியாக இருப்பதால், அதனை பாதுகாப்பதற்கு அதிக காலம் எடுக்காது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மீண்டும் வந்தார் பிரதமர்
தாம் இறந்து விட்டதாக, ஈரான் கூறியதை பொய் என நிரூபிக்கும் விதமாக மற்றொரு புதிய வீடியோவை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டு உள்ளார். காபி குடிப்பது போலவும் பொதுமக்களுடன் பேசுவது போலவும் முதலில் அவர் வெளியிட்ட வீடியோக்கள், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனால் இம்முறை, இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் உடன் பேசுவது போன்ற புதிய வீடியோவை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து உள்ளார்.

ஐ.நா. கவலை
மத்திய கிழக்கு நாடுகளில் நிகழும் போர் காரணமாக உலகளாவிய உணவுப் பற்றாக்குறை தலைவிரித்தாடும் என WPF (WORLD FOOD PROGRAMME) எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய உணவு திட்டம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வரும் ஈரான், ஹோர்மூஸ் நீரிணையும் மூடி உள்ளதால் உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் கடும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. 3ஆவது வாரமாக போர் நடைபெற்று வரும் நிலையில், உலக அளவில் உணவு மற்றும் எரிபொருள் விலை கடுமையாக உயரும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved