Also Watch
Read this

கடந்த 1986ஆம் ஆண்டு, ‘கலியுக பாண்டவுலு’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான நடிகை குஷ்பு சுந்தர், தென்னிந்திய திரையுலகில் 40 ஆண்டுகளை நிறைவு செய்தார். தன்னை அறிமுகப்படுத்திய டி.ராமா நாயுடு, கிருஷ்ணா ரெட்டி மற்றும் சுரேஷ் நாயுடுவுக்கு நன்றி தெரிவித்த நடிகை குஷ்பு, 40 ஆண்டுகளாக தன்னுடன் பயணிக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி பதிவிட்டுள்ளார்.

1986ஆம் ஆண்டில்...
இதுதொடர்பாக, நடிகை குஷ்பு கூறி இருப்பதாவது;
தென்னிந்தியத் திரையுலகில் நான் 40 ஆண்டுகளை நிறைவு செய்கிறேன். எனது முதல் தென்னிந்தியத் திரைப்படமான கலியுக பாண்டவுலு, 1986ஆம் ஆண்டு இதே நாளில் வெளியானது. தென்னிந்தியாவைப் பற்றி எந்தவித அறிவும் இல்லாத, 15 வயதுடைய ஒரு சாதாரணச் சிறுமியாக, நான் இங்கு அடியெடுத்து வைத்தேன். பின்னர், ஒரு சிறந்த தொழில் வாழ்க்கையையும், வாழ்வையும், குடும்பத்தையும் இங்கே அமைத்துக்கொண்டேன்.

நீங்கள் இல்லை என்றால்...
எனக்குத் துணையாக நின்றவர்கள், நிபந்தனையற்ற அன்பு செலுத்தியவர்கள், ஆதரவளித்தவர்கள் மற்றும் எனக்கு வழிகாட்டியாக இருந்தவர்கள் என ஒவ்வொருவருக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். என்னை ஏற்றுக்கொண்டு, என் வாழ்வின் ஒரு பகுதியாக மாறி, இந்தப் பயணத்தில் என்னுடன் பயணித்த என் ரசிகர்களுக்குக் கோடானுகோடி வணக்கங்கள். நீங்கள் இல்லையென்றால், இன்று நான் இருக்கும் இந்த நிலையை அடைந்திருக்க முடியாது.

நண்பா வெங்கி...
இந்தப் பயணத்தின் மிக அழகான அம்சம் என்னவென்றால், எனக்கு வாழ்நாள் நண்பராகக் கிடைத்த வெங்கடேஷ் தான். ஒரு நடிகராகத் தொடங்கி, பெரும் நட்சத்திரமாக உயர்ந்த பிறகும், அதே அற்புதமான மனிதராகத் தொடர்ந்து திகழும் அவரது பயணம் எனக்கு எப்போதும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக என் வாழ்வின் ஒரு பகுதியாக இருந்ததற்கு நன்றி வெங்கி. நண்பா, நாம் இன்னும் பல ஆண்டுகள் இணைந்து பயணிப்போம். உன் மீது நிபந்தனையற்ற அன்பு கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு நடிகை குஷ்பு கூறி உள்ளார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved