Also Watch
Read this
ஓணம் பண்டிகையையொட்டி, மலையாள மக்கள் புத்தாடை உடுத்தி, வீடுகள் தோறும் அத்தப்பூ கோலமிட்டு, சத்ய உணவு உண்டு மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். கேரளத்தில், வணிக நிறுவனங்கள், கட்டடங்கள், பூங்காக்கள் வண்ண விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கின்றன.

25,000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்ட பூக்கோலம்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள இருளம் கிராம மக்கள் ஒன்றிணைந்து 25 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்ட பூக்கோலத்தை ஒரே இரவில் உருவாக்கி அசத்தி உள்ளனர்.

அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் உருவாக்கப்பட்ட இந்த பிரம்மாண்டமான மலர் ஓவியத்திற்காக, கர்நாடகாவில் இருந்து சுமார் 10 ஆயிரம் கிலோ மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஓணம் கொண்டாட்டம்
ஓணத்தின் முதல் நாளான அஸ்தம் நட்சத்திரம் முதல், வீடுகளின் வாசலில் விதவிதமான வண்ணப் பூக்களால் அழகிய கோலமிட்டு மக்கள் மகாபலி மன்னனை வரவேற்கின்றனர்.
திருவோணத்தன்று வாழை இலையில் பாயசம், அவியல், கூட்டு, தோரன் உட்பட 20க்கும் மேற்பட்ட பாரம்பரிய சைவ உணவுகளுடன் "ஓண சத்யா" என்ற பிரம்மாண்ட அறுசுவை விருந்து பரிமாறப்படுகிறது.

கேரள மக்கள் பாரம்பரிய "கசவு" ஆடைகளை புத்தாடையாக உடுத்தி மகிழ்கின்றனர்.
புகழ்பெற்ற பாம்புப் படகுப் போட்டி, புலிக்காளி, கும்மட்டிகாளி மற்றும் திருவாதிரை நடனம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் கேரளா முழுவதும் உற்சாகமாக நடத்தப்படுகிறது.

ஓணம் வரலாறு...
இந்து புராணங்களின்படி, தாராள மனமும் நீதியான ஆட்சியும் கொண்ட அசுர மன்னனான மகாபலி சக்கரவர்த்தியின் கதையுடன் ஓணம் தொடர்புடையது. மகாபலியின் புகழைக் கண்டு அஞ்சிய தேவர்கள், விஷ்ணுவிடம் முறையிட்டனர். விஷ்ணு, வாமனர் அவதாரம் எடுத்து வந்து, மூன்றடி நிலம் தானமாகக் கேட்டார்.

விஸ்வரூபம் எடுத்த வாமனர், மண்ணையும் விண்ணையும் ஈரடிகளால் அளந்து, மூன்றாவது அடியை மகாபலியின் தலை மீது வைத்து அவரை பாதாள லோகத்திற்கு அனுப்பினார். எனினும், மகாபலியின் பக்தி மற்றும் நற்பண்புகளுக்காக, ஆண்டுதோறும் தன் நாட்டு மக்களை வந்து பார்க்க விஷ்ணு வரம் அளித்தார். அவ்வாறு மகாபலி மன்னன் தன் மக்களைக் காண பூலோகம் வரும் நாளே ஓணம் பண்டிகை ஆகும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved