Also Watch
Read this
சென்னை புறநகர் பகுதிகளில், ஒரே பாணியில் கேஸ் கட்டர் மூலம் ஏ.டி.எம்.களை அறுத்தெடுத்து 21 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசாரின் அதிரடியால் , இந்த கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் இருப்பது இந்தியாவின் அபாயகரமான மேவாட் கொள்ளை கும்பல் என்பது உறுதியாகி உள்ளது. சினிமா திரில்லர் படங்களையே மிஞ்சும் வகையில் அசுர வேகத்தில் மாஸ்டர் ஸ்கெட்ச் போடும் இந்த மேவாட் கொள்ளையர் யார்? இவர்களின் பகீர் பின்னணி என்ன?

சிசிடிவி ஆய்வில்...
கடந்த மாதம் 25, 26 ஆகிய தேதிகளில், சென்னை படப்பையை அடுத்த சோமங்கலம் மற்றும் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதிகளில், ஆள்நடமாட்டம் அற்ற நள்ளிரவில் ஏடிஎம் மையங்களுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அதிநவீன கேஸ் கட்டர்களை கொண்டு இரும்பு மிஷின்களை அறுத்து, மொத்தம் 21 லட்சத்தை சுருட்டி கொண்டு எஸ்கேப் ஆகியது.

கும்மிடிப்பூண்டியில் மட்டும் அடுத்தடுத்து 3 ஏடிஎம்களில் கைவரிசை காட்ட முயன்று, 12 லட்சத்தை அள்ளியிருக்கிறது இந்த கும்பல். உடனடியாக ஸ்பாட்டிற்கு விரைந்த தாம்பரம் மற்றும் திருவள்ளூர் தனிப்படை போலீசார், 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை இன்ச் பை இன்ச்சாக அலசி ஆராய்ந்தபோதுதான், அந்த பகீர் உண்மை அம்பலமானது.

முதல் தந்திரம்
சுங்கச்சாவடிகளில் இருந்து இந்த ஹைடெக் கொள்ளையை அரங்கேற்றியது, வடமாநிலங்களை சேர்ந்த இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் நெட்வொர்க்கான மேவாட் கொள்ளை கும்பல்தான் என்பது உறுதியானது.

ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் எல்லைகளை உள்ளடக்கிய சிற்றூர் பகுதிதான் மேவாட். இவர்களது, ஆப்ரேஷன் ஸ்டைலே அதிரடி ரகம். நகரத்தின் மையப்பகுதியை இவர்கள் தொடுவதே இல்லை. தேசிய நெடுஞ்சாலைகள் அல்லது மாநில எல்லைகளுக்கு மிக அருகில் இருக்கும் புறநகர் ஏடிஎம்-களை மட்டுமே குறிவைப்பார்கள். கொள்ளையடித்த அடுத்த சில நிமிடங்களில் கண்டெய்னர் லாரியில் ஏறி ஹைவேயில் தப்புவதுதான் இவர்களது முதல் தந்திரம்.

துல்லியமான நோட்டம்
பாதுகாப்பு காவலர்கள் இல்லாத, நள்ளிரவில் ஆள்நடமாட்டம் முற்றிலும் இல்லாத பகுதிகளை தேர்வு செய்யும் இந்த கும்பல், ஏடிஎம்-மில் சென்சார் அலாரம் இருக்கிறதா என்பதையும் முன்கூட்டியே நோட்டம் விடுவார்கள். ஒரே இடத்தில் 2 முதல் 3 ஏடிஎம்-கள் அருகருகே இருக்கும் பகுதிகளை தேர்ந்தெடுத்து, ஒரே நள்ளிரவில் 10 நிமிட இடைவெளியில் இரட்டிப்பு பணத்தை சுருட்டுவது இவர்களது பாணி. கொள்ளை சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பே, நீண்டதூரம் செல்லும் லாரி டிரைவர்கள் போலவோ, சுமை தூக்கும் தொழிலாளர்கள் போலவோ அந்த ஏரியாவுக்குள் ஊடுருவி வேவு பார்ப்பார்கள். சிசிடிவி கேமராக்களின் கோணம், போலீஸ் ரோந்து வரும் நேரம், பணப்பெட்டியை அறுக்க தேவையான கேஸ் கட்டர் அளவு வரை துல்லியமாக நோட்டம் விடுவார்கள்.

10 நிமிடத்தில் கொள்ளை
கூகுள் மேப் மூலம் சுங்கச்சாவடி இல்லாத கிராமப்புற மாற்று பாதைகளை முன்கூட்டியே பிளான் செய்வார்கள். சொந்த மாநிலத்திலிருந்து ஒரு பெரிய கண்டெய்னர் லாரியில் கிளம்பும் கும்பல், தமிழ்நாட்டுக்குள் நுழைந்ததும், ஏடிஎம் மையத்திற்கு செல்லும் வழியில் ஒரு சொகுசு காரையோ, ஜீப்பையோ திருடி அந்த கண்டெய்னருக்குள் ஏற்றி விடுவார்கள். கொள்ளையடித்த பிறகு, திரும்பி செல்லும் வழியிலேயே கண்டெய்னர் லாரியை பாதியில் விட்டுவிட்டு கடத்தி வந்த காரில் கூலாக சொந்த ஊருக்கு சென்று விடுவார்கள். இப்படி எந்தவித தடயமும் சிக்காத அளவுக்கு ஹைடெக் ஸ்கெட்ச் போட்டுத்தான், சென்னையின் புறநகர் பகுதியிலும் வெறும் 10 நிமிடத்தில் 21 லட்சத்தை அள்ளிக்கொண்டு தப்பியிருக்கிறது இந்த மேவாட் கேங்.

2024ல் என்கவுன்டர்
சோழவரத்தில் ஒரு ஜீப்பை திருடி கும்மிடிப்பூண்டியில் கைவரிசை காட்டிய இந்த கும்பல், ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் வடகால் கிராமத்தில் உள்ள ஒரு தாபா அருகே ராஜஸ்தான் பதிவெண் கொண்ட தங்களது கண்டெய்னர் லாரியை நிறுத்திவிட்டு, திருடிய காரிலேயே ஆந்திரா வழியாக ஹரியானாவுக்கு தப்பியிருக்கிறார்கள்.

மேவாட் கொள்ளையர்கள் தமிழ்நாட்டுக்கு புதியவர்கள் அல்ல, ஏற்கனவே திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்-களில் 70 லட்சத்துக்கும் மேல் கொள்ளையடித்தது, நாமக்கல் ஏடிஎம் திருட்டு என மாநிலம் முழுவதும் இவர்கள் மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த 2024ஆம் ஆண்டு கேரளத்தில் ஏடிஎம் கொள்ளையை முடித்துவிட்டு தப்பியபோது, நாமக்கல் அருகே தமிழக போலீசார் அவர்களை சினிமா பாணியில் சேஸிங் செய்து சுட்டு பிடித்தது நாடறிந்த விஷயம். அப்படிப்பட்ட அதிரடி என்கவுன்டருக்கு பிறகும், மீண்டும் தமிழகத்திற்குள், அதுவும் சென்னைக்கே வந்து மேவாட் கேங் கைவரிசை காட்டியிருப்பது தமிழக காவல்துறையை அலர்ட் ஆக்கியுள்ளது.

தனிப்படை போலீசார் தீவிரம்
தற்போது, ஹரியானாவில் வேறு ஒரு வழக்கில் ஜெய்ப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்ட பவன்குமார் என்ற கொள்ளையன்தான், சென்னை ஏடிஎம் கொள்ளையிலும் ஈடுபட்டவன் என்பது தெரியவந்திருக்கிறது. அவனை தட்டித்தூக்க, தாம்பரம் தனிப்படை போலீசார் ஹரியானா விரைந்துள்ளனர். அவனோடு வந்த மற்ற 4 கூட்டாளிகளை இரு மாநில போலீசாரும் வலைவீசி தேடி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved