Also Watch
Read this
ஆந்திராவை சேர்ந்த இளம் ஃபைனான்சியரை மிரட்டி பணம் பறித்த புகாரில், பிக்பாஸ் பிரபலம் வர்ஷினி வெங்கட்டை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். குறும்படத்தில் முதலீடு செய்ய பணம் கேட்டும் கிடைக்காததால், கடைசியில் மிரட்டல் ஆயுதத்தை வர்ஷினி கையில் எடுத்ததாக கூறப்படும் நிலையில் அவருடன் சேர்ந்து 3 பேர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.

பிக்பாஸ் பிரபலம்...
பிக்பாஸ் தமிழ் 8ஆவது சீசனில் வைல்ட் கார்டு போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் வர்ஷினி வெங்கட்.சிங்கர், மாடல், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’கண்ணான கண்ணே’ என்ற சீரியலில் காவல்துறை அதிகாரியாக ஆக்டிங் என திரைத்துறைக்குள் நுழைய அச்சாரம் போட்டாலும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 8ல் வைல்ட் கார்டாக என்ட்ரியாகி பாப்புலர் ஆனவர்தான் வர்ஷினி வெங்கட்.

தன் STRATEGY-யே வேறுமாதிரி இருக்கும் என பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிக்குள் ஃபயராக சென்ற வர்ஷினியை அந்த சீசனில் இருந்த ஹவுஸ்மேட்ஸ் மூன்றே வாரங்களிலேயே நாமினேஷனில் நாக்அவுட் செய்ய, சிரித்தபடியே வெளியே வந்தவர், தொகுப்பாளர் விஜய் சேதுபதியிடம் ஒரு பழமொழியை தன்பாணியில்கூறி அரங்கையே பரபரப்பாக்கினார். பொறுத்தார் பூமி ஆழ்வார் பொறுக்காதவர் பொறுக்கியாவார் என கூறிவிட்டுச் சென்றார்.

அதேவேகம் கொஞ்சமும் குறையாமல், சந்தானம் நடிப்பில் வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் சொகுசு கப்பலில் கவர்ச்சியை வாரி இறைத்து தாராளம் காட்டி இருந்தார் வர்ஷினி வெங்கட். அதேபோல், கடந்த ஆண்டு வெளியான ’சொட்ட சொட்ட’ என்ற படத்திலும் லீட் ரோலில் நடித்து தன்னை பிசியாகவே வைத்துக்கொண்டார். நொடிக்கு நொடி போட்டோக்களை பதிவிட்டு இளைஞர்களின் பார்வையை தன்பக்கமே வைத்துக்கொள்ளும் வர்ஷினி, சமீபத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்த வீடியோவை வெளியிட்டும் சோஷியல் மீடியாக்களின் ஃபோகஸை தன்னைவிட்டு விலகாமல் பார்த்துக் கொண்டார்.

இதனிடையே, அரசியல் களத்தில் குதித்து தவெக ஆட்சியை பிடிக்க அக்கட்சியின் துண்டை கழுத்தில் அணிந்தபடி ஆதரவுக்குரல் வீடியோக்களையும் பதிவிட்டார். இப்படி ஏதோ ஒருவழியில் ”உள்ளேன் ஐயா” என்பதை காட்டிக் கொண்டே இருந்த வர்ஷினி, தற்போது புழலில் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஆந்திராவை சேர்ந்த தருண் என்ற 26 வயது இளைஞர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் நிஷாந்த் என்பவர் மூலம் தருணுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வர்ஷினியின் அறிமுகம் கிடைத்துள்ளது. அடிக்கடி செல்போனிலும், நேரிலும் ஃபைனான்சியர் தருணிடம் பேசிவந்த வர்ஷினி, ஷார்ட் ஃபிலிம் எடுப்பதற்கு பணம் முதலீடு செய்யுமாறு அவரிடம் கேட்டு வந்ததாக தெரிகிறது. அதற்கு தருண் பெரிதாக ஈடுபாடு காட்டாத நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கி இருந்தார். இந்நிலையில், சஞ்சய் உள்ளிட்ட 3 பேருடன் வர்ஷினி வெங்கட் அங்கு சென்றதாகவும், தருணிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில், வர்ஷினி உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து ஃபைனான்சியரை தாக்கி 2 செல்போன்கள் மற்றும் ரூ.50 ஆயிரத்தை பறித்ததாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாது, தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக பொய் சொல்லி உள்ளே தள்ளிவிடுவேன் என மிரட்டி தருணின் வங்கி கணக்கில் இருந்தும் வர்ஷினி வெங்கட் ரூ.5 லட்சத்தை கறந்ததாக கூறப்படுகிறது.

மேலும், கூடுதலாக 27 லட்சம் ரூபாய் தராவிட்டால் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுவோம் என 4 பேரும் மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து, கிண்டி காவல் நிலையத்தில் தருண் அளித்த புகாரின்பேரில் சஞ்சய் உள்ளிட்ட 4 பேர் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், வர்ஷினியை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.



© Copyright Newstamil 24x7 2026. All rights reserved