Also Watch
Read this
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தவெக அரசின் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

இப்பயணத்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சி தருணங்களை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

மதுரை குலுங்க...
மதுரையே குலுங்கும் அளவுக்கு அன்பு கடலில் தத்தளித்து சென்ற முதலமைச்சர் விஜய், உன்னதமான தாய்மாமன் பொறுப்பிலிருந்து பிஞ்சு குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்து அழகு பார்த்தார்.

தவெக வாக்குறுதிகளில் மிகவும் எதிர்பார்ப்பை எகிற வைத்த திட்டங்களில் ஒன்று தான் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம். ரத்தத்தின் ரத்தமாக, சொந்தத்தின் சொந்தமாக தாயின் உடன்பிறப்பாக இருந்து சேய்க்கு தங்க மோதிரத்தை அணிவிக்கும் இத்திட்டம் முதலமைச்சர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

குவிந்த மக்கள்
அன்றைய தினத்திலிருந்து அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும். அந்த தங்க மோதிர திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்த முதலமைச்சர் விஜய், மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு ரோடு ஷோ சென்றார்.

விஜயை காண மதுரை மட்டுமில்லாமல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்களும் மதுரை நோக்கி படையெடுத்த நிலையில், இரு மருங்கிலும் காத்திருந்து அவரது முகத்தை கண்குளிர கண்டு ரசித்தனர்.

மீனாட்சியம்மன் வேடத்தில்...
வழிநெடுகிலும் மக்களை கண்டு கையசைத்ததோடு, அவர்கள் வாரி கொடுத்த அன்பை புதையலாக பெற்றுக்கொண்ட விஜய்,

மதுரையின் முக்கிய முகமாக திகழும் மீனாட்சியம்மன் வேடத்தில் தரித்த குழந்தையை தூக்கி கொஞ்சினார்.

அதனை தொடர்ந்து மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர் தாய்மாமனாவே மாறி விழா மேடையில் மண்டியிட்டு குழந்தைகளுக்கு மோதிரத்தை அணிவித்து மகிழ்ந்தார்.

கவனம் ஈர்த்த...
விஜயின் முகத்திலிருந்து தனது பார்வையை நகர்த்தமால் பார்த்துக் கொண்டிருந்த குழந்தைக்கு hi fi கொடுத்து மகிழ்ந்தார்.

அதோடு சில குழந்தைகளுக்கும் பெயரை சூட்டி பெற்றோரை மகிழ்வித்ததோடு, தனது கரங்களால் குழந்தைகளை தூக்கி கொஞ்சினார். அப்போது குழந்தைக்கு முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினார். அதனை தொடர்ந்து திட்டத்தின் பயனாளிகளான தாய் - சேய்களின் நடுவில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட விஜய் தனது மடியில் இரு குழந்தைகளை அமர வைத்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

விஜயிடமிருந்து தனது குழந்தைக்கு தாய்மாமன் மோதிரம் கிடைத்ததால் உணர்ச்சிப்பெருக்கில் தாய் ஒருவர் கண்ணீரில் ததும்பினார். தனது தம்பி இல்லாத குறையை தீர்த்துவிட்டதாக அப்பெண்மணி உணர்ச்சி வசப்பப்பட்டார்.

காந்தி மியூசியத்தில்...
அதனை தொடர்ந்து, 10 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட காந்தி மியூசத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைக்க மீண்டும் ரோடு ஷோ சென்றார்.

அப்போது அந்த வழியில் காத்திருந்த மூதாட்டி ஒருவர், தனது செல்லராசாவை, தங்கத்தை காண வந்ததாக அன்பை கொட்டினார்.

பெருங்கூட்டத்தின் மத்தியில்...
சிறுமிகள் மூவர் மீனாட்சி அம்மன் வேடத்தில் விஜயை காண காத்திருந்தனர்.

தவெகவின் துண்டை கழுத்தில் அணிந்திருந்த விஜயை கண்டதும் இருமருங்கிலும் காத்திருந்த மக்கள் காதை கிழிக்கும் அளவுக்கு கத்தி ஆராவாரம் செய்தனர்.


காந்தி மியூசியத்தை சென்றடைந்த முதலமைச்சர் விஜய், காந்தி சிலைக்கு மாலை அணிவித்ததோடு, அவர் பயன்படுத்திய பொருட்களை பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து மகாத்மா காந்தியின் ஆவணப்படத்தை முதலமைச்சர் கண்டு ரசித்ததோடு, தனது வருகையை பதிவேட்டில் கையெழுத்திட்டு பதிவு செய்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved