Also Watch
Read this
கொளத்தூர் தொகுதியில், S.I.R.ஆல் தான் மு.க.ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டதாக வி.சி.க. தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டினார். பாஜகவை எதிர்க்கும் தலைவர்களுக்கு எதிரான சதி குறித்து மு.க.ஸ்டாலினிடம் நேரிலேயே எச்சரித்ததாகவும் பரபரப்பாக கூறி உள்ளார்.

ஜனநாயகம் காப்போம்...
இந்தியா கூட்டணி கட்சிகள் நடத்திய, “ஜனநாயகம் காப்போம்” கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூரில் இன்று அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற்றது. இதில், அமைச்சர் ராஜ்மோகன், பெ.சண்முகம், வைகோ, மாணிக்கம்தாக்கூர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

திருமாவளவன் பேச்சு
இந்த கூட்டத்தில், விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது;
சென்னை, கொளத்தூர் தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. தேர்தலுக்கு முன்பே இந்த தகவல் கிடைத்து முன்னாள் முதல்வரின் கவனத்திற்கு இதை எடுத்துச் சென்றேன். முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிடம் எடுத்துச் சொன்னேன். யாரோ ஒரு பெண்மணி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘சதி நடக்கிறது கொளத்தூரிலே முதலமைச்சர் வெற்றி பெறுவது கடினம்,’ என்றார்.

நான் முதலில் அதை அலட்சியப்படுத்தினேன். இரண்டாவது முறை, மூன்றாவது முறை சொல்லும்போது, ’இதை நான் நேரடியாக சிஎம் கிட்ட சொல்ல முடியாது. நான் ஒருவரை அறிமுகம் செய்து வைக்கிறேன். நீங்கள் வேண்டுமானால் அவரிடம் பேசுங்கள்,’ என்று சேகர்பாபுவோடு பேச வைத்தேன்.

மு.க.ஸ்டாலினிடம் கூறினேன்...
அன்றைய முதலமைச்சரை சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் சொன்னேன். ’கொளத்தூரிலே இந்த மாதிரி ஒரு பிரச்சனை உள்ளது என்று சொல்கின்றனர். நீங்கள் ஏன் தொகுதி மாறி நிற்கக்கூடாது?’ என்று கேட்டேன்.
அவர், ‘அதெல்லாம் ஒன்றும் இல்லை. கரெக்டாக எல்லாம் செய்து கொண்டு இருக்கிறோம். அப்படி எதுவும் நடக்கவில்லை,’ என்று கூறிவிட்டார்.

எச்சரிக்கை செய்வதற்காக...
தேர்தல் நடப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பே இந்த எச்சரிக்கை நமது கவனத்திற்கு வந்தது, அதைச் சொல்வதற்காக கூறினேன். யார் மீதும் குற்றச்சாட்டு சொல்வதற்காக அல்ல. குற்றச்சாட்டு நோக்கில் சொல்லவில்லை. எச்சரிக்கை செய்வதற்காக அன்றைய முதலமைச்சரிடம் நேரிலே சொன்னேன்.

மீண்டும் சேகர்பாபுவிடம்...
சேகர்பாபுவை மறுபடியும் பார்த்துக் கூறினேன். அவர், ‘முழுமையாக சரி பார்க்கப்பட்டது. எந்த பிரச்சினையும் இல்லை,’ என்று கூறினார். ஆனால், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொளத்தூரில் நீக்கப்பட்டு இருந்தனர். அதிலே இறந்து போனவர்கள் 20,000 பேர். எஞ்சியவர்கள் ’ஷிப்டெட்’ என்கிற பெயரிலே நீக்கம் செய்யப்பட்டனர். டூப்ளிகேஷன் என நீக்கப்பட்டனர்.
‘டார்கெட்’ செய்து குறிவைக்கப்பட்டனர். எல்லா மாநிலங்களிலும் இது நடந்திருக்கிறது.

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
இந்தியாவிலேயே மிக அதிகமாக நீக்கம் செய்யப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. 97 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டனர். மேற்கு வங்கத்தை விட அதிகம். இதை நாம் ஆய்வு செய்ய வேண்டுமா, வேண்டாமா?
இதிலே கவனம் செலுத்த வேண்டுமா வேண்டாமா?
குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு எதிரான நடவடிக்கையா இது? இது தேசத்திற்கு எதிரான சதி அல்லவா? ஜனநாயகத்திற்கு எதிரான சதி அல்லவா? ஜனநாயகத்தை எப்படி பாதுகாக்க முடியும்?

வெற்றியை திருடும் போக்கு...
ஈவிஎம்யைப் பயன்படுத்தி, எஸ்.ஐ.ஆர்.ஐ பயன்படுத்தி தேர்தல் வெற்றிகளை திருடுகிற போக்கு எவ்வளவு ஆபத்தானது? எதிர்க்கட்சிகளை வீழ்த்துகிற போக்கு எவ்வளவு ஆபத்தானது? இந்த வயிற்றெரிச்சலோடு தான் இன்றைக்கு காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் கைகோர்த்து நிற்கிறோம்.
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved