news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பரம எதிரியான பாசமலர், சிட்டிங் MLA தாஜா
tv

Also Watch

tv

Read this

பரம எதிரியான பாசமலர், சிட்டிங் MLA தாஜா

வாக்காளப் பெருமக்களே... தேர்தல்-2026

34

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் எம்.எல்.ஏ. சீட்டு வாங்க திமுகவிலேயே நான்கு பேர் முட்டி மோதி அடித்துக் கொள்வது அனலை கிளப்பியிருக்கிறது. ஒரு பக்கம் அண்ணனுக்கு எதிராக சொந்த தங்கையே காய் நகர்த்தி வர, இன்னொரு பக்கம் சிட்டிங் எம்.எல்.ஏ. டி.ஜே.கோவிந்தராஜன் மிக முக்கிய பவர் சென்டரை சந்தித்து தாஜா செய்ய, குறுக்கே உதயநிதியின் அனுதாபி ஒருவரும் கோதாவில் குதித்து இருப்பதால், அறிவாலய அருள் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முதலிடத்தில் இருப்பது கும்மிடிப்பூண்டி
தமிழ்நாட்டின் தொகுதி வரிசை பட்டியலில் முதலிடத்தில் இருப்பது கும்மிடிப்பூண்டி தான். இந்த தொகுதியை யார் கைப்பற்றுவது? என திமுகவிலேயே நான்கு முனை போட்டி எழுந்து கள நிலவரம் தற்போதே களேபரமாகி கிடக்கிறது.
கும்மிடிப்பூண்டி என்றாலே எல்லாருக்கும் நினைவுக்கு வருவது திமுகவின் கி.வேணு தான். இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த கி.வேணு, கும்மிடிப்பூண்டி தொகுதியை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் கி.வேணு உயிரிழந்த நிலையில், அவருடைய வாரிசுகள் இருவரும் எம்.எல்.ஏ. சீட்டுக்காக போட்டா போட்டி போட்டு வருவது தான் கும்மிடிப்பூண்டி தொகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.


சொந்த தங்கையே அண்ணனுக்கு எதிராக...
அப்பா கி.வேணுவின் நிழலில் இருந்து அரசியல் கற்றுக் கொண்ட அவரது மகன் ஆனந்த குமார், சிட்டிங் எம்.எல்.ஏ. டி.ஜே.கோவிந்தராஜனையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு சுறுசுறுப்பாக இயங்கி வருகிறாராம். அப்பாவின் அரசியல் வாரிசு, தாம் தான் என அடையாளப்படுத்திக் கொள்ள தனது பெயரை வேணு ஆனந்த் என மாற்றியிருக்கிறார்.

அடிக்கடி கட்சி நிகழ்ச்சி நடத்துவது, நிர்வாகிகளை மனங் கோணாமல் செழிப்பாக கவனித்துக் கொள்வது என ஆனந்துக்கு கும்மிடிப்பூண்டி தொகுதியில் பெரிய ஆதரவு வட்டமே உருவாகி இருக்கிறது என்கிறார்கள். இந்த ஆதரவு வட்டத்தை வைத்து வருகிற தேர்தலில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் போட்டியிட வேணு ஆனந்த் முயற்சித்து வரும் நிலையில், சொந்த தங்கையே அண்ணனுக்கு எதிராக காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது.

கிச்சன் கேபினெட் மூலமாக...
தனது தந்தை காலத்து கட்சிக்காரர்களான ஆர்.எஸ்.பாரதி, கே.என்.நேரு, டி.ஆர்.பாலு ஆகியோரை சிபாரிசு பிடித்து சீட்டுக்காக ஆனந்த் முயற்சி செய்து வரும் நிலையில், அவரது தங்கையான உமா மகேஸ்வரியும் விடாப்பிடியாக சீட்டு வாங்க முரண்டு பிடிக்கிறாராம். இரண்டாம் கட்ட தலைவர்கள் சிபாரிசு எடுபடாது என யோசித்து நேரடியாக திமுகவின் கிச்சன் கேபினெட் மூலமாக உமா மகேஸ்வரி துண்டு போட்டு வைத்திருக்கிறாராம். அடிக்கடி நேரில் சந்திப்பு நடத்தி, தேவையானவற்றை செய்து கொடுத்து கிச்சன் கேபினெட்டின் குட்புக்கில் இருக்கும் உமா மகேஸ்வரி, அண்ணனுக்கு போட்டியாகவே உருவெடுத்திருப்பது கும்மிடிப்பூண்டி மக்களுக்கு அரசியல் பொழுது போக்காக மாறியுள்ளது. தலைமைக்கு நெருக்கமான இடத்தில் உமா மகேஸ்வரிக்கு செல்வாக்கு இருந்தாலும், தொகுதி மக்கள் மத்தியிலும், கட்சியினர் மத்தியிலும் கூட நல்ல அபிப்ராயம் இல்லை என பேசிக் கொள்ளப்படுகிறது.

சிட்டிங் எம்எல்ஏ... சீட் கிடைக்குமா?
ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணனும், தங்கையும் ஒரே தொகுதிக்கு மல்லுக்கட்டி வரும் நிலையில், சிட்டிங் எம்.எல்.ஏ.வான டி.ஜே.கோவிந்தராஜன், மீண்டும் எம்.எல்.ஏ. சீட்டு வேண்டும் என்பதற்காக தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்காத குறையாக இருந்து வருகிறாராம். ஆனால், டி.ஜே.கோவிந்தராஜனுக்கு சீட்டு கிடைக்க வாய்ப்பில்லை என உடன்பிறப்புகள் மத்தியில் பேசிக் கொள்ளப்படுகிறது. அதற்கு முக்கிய காரணமே டி.ஜே.கோவிந்தராஜனின் செயல்பாடுகள் தான். கும்மிடிப்பூண்டி தொகுதியில் எந்த டெண்டர் வந்தாலும் தனது குடும்பத்து சொந்தங்களுக்கே கொடுக்கும் கோவிந்தராஜனை பார்த்து சொந்த கட்சியினரே ஏகத்திற்கும் கடுப்பில் இருக்கிறார்கள்.

காய் நகர்த்தும் டிஜே...
சில நாட்களுக்கு முன்பு கூட ங்கல் விழாவில் சக கட்சி நிர்வாகியை கன்னத்தில் அறைந்து சர்ச்சையில் சிக்கிய டி.ஜே.கோவிந்தராஜன் மீது, ஏற்கனவே ஏகப்பட்ட புகார்கள் தலைமைக்கு ரிப்போர்ட் அனுப்பப்பட்டு இருக்கிறது. இதன் விளைவாக சில மாதங்களுக்கு முன்பு கோவிந்தராஜன் கை வசம் இருந்த திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் டி.ஜே.கோவிந்தராஜனிடம் இருந்து பறிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பதவி ரமேஷ் என்பவருக்கு வழங்கப்பட்ட நிலையில், அவருடைய புகைப்படம் இல்லாமலே பேனர் அடிப்பது, போஸ்டர் அடிப்பது என ராஜ்ஜியம் செய்து வந்திருக்கிறார். இதனால், பொங்கல் பண்டிகைக்கு முதலமைச்சருக்கு வாழ்த்து கூற சென்ற போது கூட டி.ஜே.கோவிந்தராஜனுக்கு டோஸ் விழுந்திருக்கிறது. இருப்பினும் கூட அசராமல் திமுகவின் முக்கிய பவர் செண்டராக இருக்கும் நபரை சந்தித்து சீட்டுக்காக மன்றாட தொடங்கியிருக்கிறாராம்.



துணை முதலமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சிபாரிசு
கோவிந்தராஜனுக்கு அடுத்தபடியாக எம்.எல்.ஏ. சீட்டுக்கான ரேஸில் சி.ஹெச்.சேகரும் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. தேமுதிகவில் இருந்து திமுகவுக்கு வந்த சி.ஹெச்.சேகர், உதயநிதியின் குட்புக்கில் இடம் பெற்றவர் என்பதால் வருகிற தேர்தலில் சேகருக்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக சொல்கிறார்கள். அவ்வளவு ஏன், துணை முதலமைச்சர் உதயநிதியின் சொந்த சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியின் பொறுப்பாளர்களில் சி.ஹெச்.சேகரும் ஒருவராவார்.

2011ல் தேமுதிகவில் எம்.எல்.ஏ.வாக இருந்த சி.ஹெச்.சேகர், 2016 தேர்தலில் திமுகவில் சீட்டு கிடைத்தும் தோற்றுப் போனார். ஆகையால், வருகிற தேர்தலில் துணை முதலமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் சிபாரிசு மூலமாக சீட்டு வாங்க தீவிரமாக முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

கை உயர்த்தும் காங்கிரஸ்
இதனிடையே, கும்மிடிப்பூண்டி தொகுதியை காங்கிரசும் குறி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு திமுக கூட்டணியில் திருவள்ளூரில் பொன்னேரி தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் பொன்னேரி தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருவதால், பொன்னேரி போகட்டும், கும்மிடிப்பூண்டியை கொடுங்கள் என்ற குரலும் திருவள்ளூர் காங்கிரஸில் எழ தொடங்கியுள்ளது. கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு திமுகவிலேயே குழாயடி சண்டை நடக்கும் நிலையில், காங்கிரஸும் கையை உயர்த்தி வருகிறது. இதனால்,
கும்மிடிப்பூண்டியில் கொடி நாட்டுவது யார்? என்பது வேட்பாளர் பட்டியல் வெளியாகும் போது தான் தெரியவரும்.

Related Link
கூட்டணி ஆட்சியா? ஒரு கட்சி ஆட்சியா?

கூட்டணி ஆட்சியா? ஒரு கட்சி ஆட்சியா?

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி எச்சரிக்கை

1
1 hr 7 mins agoshare
உலக செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved