Also Watch
Read this
தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின் வாரியத்தை சுற்றி ஏகப்பட்ட புகார்கள் வட்டமடித்து வந்த நிலையில், தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு கூடுதல் விலையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவது, உடன்குடி அனல் மின் நிலையத்தில் தனியாரின் பங்களிப்பு என சர்ச்சைகள் வரிசை கட்டி தலைசுற்ற வைத்துள்ளன.
மின்வாரியத்தில் நடப்பது என்ன? மின் வாரியத்தை கையாளத் தெரியாமல் திணறுகிறதா தவெக அரசு?

மின் வெட்டு விவகாரம்
தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மின்சாரத் துறை குறித்து எழும் புகார் மீட்டர் தான் கிறுகிறுவென ஏறிக் கொண்டே இருக்கிறது. தவெக ஆட்சி அமைந்த சில நாட்களிலேயே தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத
பல மணி நேர மின்வெட்டு நிகழ தொடங்கியது.
ஆங்காங்கே டிரான்ஸ்பார்மர் பிரச்சனை, மின்சாரம் துண்டிப்பு என மக்கள் வீதிகளில் இறங்கி இரவு பகலாக போராடும் அளவுக்கு சென்றது.

மின் கட்டண உயர்வு
பின்னர், மின்சார கட்டணம் உயர்வு என்ற சர்ச்சை தலைதூக்கியது. ஏற்கெனவே 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற திட்டம் இருக்கும் சூழலில், 500 யூனிட்டுக்குள் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற புதிய திட்டமும் தவெக ஆட்சியில் அமலுக்கு வந்தது.
இருப்பினும் மின் கட்டணம் கண்டபடி உயர்ந்து மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

சவால் ஆன விவகாரம்
கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக, மின் பயன்பாடு உயர்ந்து மின் கட்டணம் உயர்ந்திருக்கும் என சமாதானம் சொன்னாலும், பல இடங்களில் தவறான மின் கணக்கீடு போன்ற பிரச்சனைகள் தவெக ஆட்சி மீது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்த காரணமாக அமைந்தன. புதிதாக ஆட்சிக்கு வந்த தவெகவுக்கு மின் வெட்டு விவகாரம் சவாலாக மாற, அதனை எதிர்க்கட்சிகள் சாதகமாக பயன்படுத்தி விமர்சனக் கணைகளை வீசி வந்தன.
இந்த சூழலில் தான், இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரம் 37 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவது பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது.

ஒரு யூனிட் மின்சாரம்
அதாவது, அக்டோபர் மாத மின் தேவையை சமாளிக்க 4,500 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டது. இதில், 1500 மெகா வாட் மின்சாரத்தை ஒரு யூனிட் 31 ரூபாய் முதல் 35 ரூபாய் வரையிலும், மாலை பீக் நேரத்திற்கு தேவையான 2000 மெகா வாட் மின்சாரத்தை ஒரு யூனிட் 33 ரூபாய் முதல் 37 ரூபாய் வரையிலும் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
அண்டை மாநிலமான ஆந்திரா, ஒரு யூனிட் 16 ரூபாய் முதல் 20 ரூபாய்க்குள் முடித்து விட்ட நிலையில், தமிழக அரசு இதுவரை இல்லாத அளவில் அதிக விலை கொடுத்து வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு ஒரு யூனிட் மின்சாரம் 20 ரூபாய்க்கு திமுக அரசு கொள்முதல் செய்ததே அதிக விலையாக இருந்தது என்ற நிலையில், தற்போது தவெக அரசு ஒரு படி மேலாக 37 ரூபாய்க்கு கொள்முதல் செய்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அலட்சியம் என குற்றச்சாட்டு
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மின் தேவை எக்கச்சக்கமாக அதிகரித்திருக்கிறது என்றாலும், கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதற்கு இன்னும் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.
அக்டோபர் மாத மின் தேவைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் டெண்டர் விடப்பட்டிருக்கிறது என்ற நிலையில், கடைசி நேரத்தில் டெண்டர் விட்டதால் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்க வேண்டிய சுமார் 1800 மெகா வாட் மின்சாரமும் கிடைக்காத சூழலில், வேறு வழியில்லாமல் அவசர அவசரமாக அதிரி புதிரியாக அதிக விலைக்கு வாங்கும் நிர்பந்தம் உருவாகியிருக்கிறது.

அமைச்சருக்கு எதிராக...
முன்கூட்டியே திட்டமிட்டு டெண்டர் விட்டிருந்தால் இவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது எனக் கூறப்படும் நிலையில், துறையின் அமைச்சர் நிர்மல்குமாருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. அமைச்சர் நிர்மல்குமாருக்கு எதிராக
எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றன.
இது ஒரு பக்கம் இருக்க, உடன்குடி அனல் மின் நிலையத்தை தனியாருக்கு கொடுக்கும் முடிவும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. உடன்குடி அனல்மின் நிலையத்தில் மொத்தமாக 3,200 மெகா
வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்க திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பங்களிப்புடன் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியாரிடம் இருந்து...
விரிவாக்க பணிகளுக்கு மொத்தமாக 32 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்ற நிலையில், தனியார் பங்களிப்பு மூலம் தற்போதைக்கு அரசுக்கு செலவு மிச்சமாகும். ஆனால், தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்க வேண்டிய சூழல் வரும். அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கினால், அது நுகர்வோரின் மின் கட்டணத்திலும் எதிரொலிக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
குறிப்பாக, அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்படும் என்பதோடு மின்சார தேவைக்கு தனியாரையே நம்பியிருக்கும் சூழல் வரும் என்பதால் மின்வாரியத்தின் இந்த முடிவுக்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மின்வாரிய தலைவர் மாற்றம்
ஏற்கெனவே, மின்சார வாரியம் அதிக கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு முந்தைய ஆட்சிக் காலத்தில் மின் தேவையை சமாளிக்க நீண்ட கால திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படாத சூழலில், தற்போது வரை குளறுபடிகளும், குழப்பங்களும் மட்டும் நீண்டு கொண்டே செல்கிறது.
இதனிடையே, மின்வாரியத்தின் தலைவராக இருந்த IAS அதிகாரி அருண்ராய் மாற்றப்பட்டு, ஏற்கெனவே தலைவராக இருந்த ராஜேஷ் லக்கானிக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த போது மின்வாரியத்தின் தலைவராக இருந்த ராஜேஷ் லக்கானியின் பெயர், டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேட்டில் அடிபட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சர்ச்சையில் சிக்கிய அதிகாரிக்கு மீண்டும் அதே பொறுப்பு கொடுக்கப்பட்டிருப்பதும் விமர்சனத்தை தேடி தந்துள்ளது.
மின்வாரியம் மக்களுடன் நேரடியாக சம்பந்தப்பட்ட நிறுவனம் என்பதால், அந்த நிறுவனத்தை நேர்மையாக வெளிப்படையாக நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved