Big Stories

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் தற்போதைய தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் மீண்டும் வெற்றி

ஏழு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தற்போதைய தலைவர் மோகனகிருஷ்ணன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்கறிஞர் சங்கமாக சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு வந்தது.

கடைசியாக கடந்த 2016 நவம்பர் 23 தேதி தேர்தல் நடைபெற்றது. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 2018 ஆம் ஆண்டு முடிவடைந்தது.

இந்நிலையில், சங்க தேர்தல் தொடர்பாக அறிவிப்புக்கும், தேர்தல் புதிய விதிகளுக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் காரணமாக தேர்தல் தள்ளிப்போனது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தேர்தலை நடத்த மூத்த வழக்கறிஞர் கபீரை தேர்தல் அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டது.

அதன்படி, கடந்த ஜனவரி 9 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கபட்டது.

வாக்குப்பதிவு தொடங்கியவுடன் வழக்கறிஞர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தேர்தல் ரத்து செய்யபட்டது.

ரத்து செய்யப்பட்ட தேர்தல் 11 மாதத்திற்கு பிறகு நேற்று மீண்டும் நடைபெற்றது.

இந்த தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர், 6 மூத்த செயற்குழு உறுப்பினர்கள், 5 இளைய செயற்குழு உறுப்பினர்கள் என 16 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், எம். வேல்முருகன், முன்னாள் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ்,
சத்தியபால் உள்ளிட்ட 9 பேர் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கையில் ஆரம்ப முதலே ஜி.மோகன கிருஷ்ணன் மற்றும் R.C.பாலகனகராஜ் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

இறுதியில் தற்போதைய தலைவர் ஜி. மோகனகிருஷ்ணன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

அவர் 1,301 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில் R.C. பாலகனகராஜ் 1,134 வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார்.

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மற்றொரு வேட்பாளரான வேல்முருகன் 740 வாக்குகளுடன் மூன்றாம் இடம் பிடித்தார்.

தலைவர் பதவிக்கு வெற்றி பெற்ற ஜி.மோகனகிருஷ்ணன் அளித்த பேட்டியில், எந்த அரசியல் கட்சியின் பின்னணியும் இன்றி இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதாகவும், நீதிமன்றத்திற்குள் அரசியல் வரக்கூடாது என உறுதியாக இருப்பதாகவும், வழக்கறிஞர்களின் நலனுக்காக பாடுபடப்போவதாகவும் கூறினார்.

இதேபோல, செயலாளர் பதவிக்கு D. கிருஷ்ணகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதர பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 11 மணிக்கு தொடங்கவுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல்   தற்போதைய தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் மீண்டும் வெற்றி

00 Comments

Leave a comment