Also Watch
Read this
By: Fyrose Banu

சதுரகிரி கோயில் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு பணிக்கு சென்ற மண்டல துணை வட்டாட்சியரை காவலர் ஒருவர் அனுமதிக்காததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்ந்து காவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியராக சசிகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். வரும் 12 ஆம் தேதி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவிற்காக இன்று முதல் வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் துணை வட்டாட்சியர் சசிகுமார் சதுரகிரி கோயில் பணிக்கு செல்லும் பொழுது தற்காலிக பேருந்து நிலையம் அருகே சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் நின்றிருந்த காவலர் ஒருவர் சசிகுமாரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. 
சசிகுமார் அடையாள அட்டை மற்றும் தனது மொபைலில் இருந்த பணிக்கான உத்தரவு நகலை காண்பித்தும் காவலர் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. , இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது . மேலும் துணை வட்டாட்சியர் கையில் வைத்திருந்த அவரது மொபைல் போனை காவலர் கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காவலரின் இந்த செயலை கண்டித்தும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை அனைத்து அலுவலர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வட்டாட்சியர் அலுவலகம் நுழைவாயிலில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பணி புறக்கணிப்பு போராட்டத்தின் காரணமாக அலுவலகப் பணிகள்,சதுரகிரி கோயில் ஆடி அமாவாசை திருவிழாவிற்கான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved