Also Watch
Read this
By: Fyrose Banu

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த களம்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போளூர் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் 2026-2027ஆம் ஆண்டிற்கான தடகளப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை போளூர் சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக் தொடங்கி வைத்தார்.

இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட சுமார் 55 பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், தட்டெறிதல் உள்ளிட்ட 12 வகையான தடகளப் போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளாக பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக், களம்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மினி ஸ்டேடியம் அமைக்க வேண்டும் என்றும், போளூரில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்றும் மாணவர்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வருவதாக தெரிவித்தார். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று மினி ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போளூரில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved