Also Watch
Read this
By: Manigandan Raja

பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான மனநிலையே இதற்கு காரணம்
உத்தரகாண்டில், தாம் பேசி முடித்த பின்பு பொதுக்கூட்ட மேடை சுத்தம் செய்யப்பட்டதற்கு வேதனை தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான மனநிலையை கண்டு மனம் வெதும்புவதாக கூறினார்.
உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிறகு, ஸ்ரீ ராம் சேனா என்ற அமைப்பு அந்த இடத்தில் வேள்வி நடத்தியது. இது குறித்து மாநிலங்களவையில் பேசிய கார்கே, தாம் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே அந்தச் சடங்கு நடத்தப்பட்டதாகவும், சாதியின் பெயரால் சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.
கார்கேவுக்கு நிகழ்ந்த சம்பவம் மன்னிக்கவே முடியாத குற்றம் என மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த ஜே.பி. நட்டா, இந்தச் சம்பவம் ஏற்றுக்கொள்ளவே முடியாத கொடுஞ்செயல் என்று கூறியதுடன், இதில் பாஜக உறுப்பினர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றார்.
விரைவில் 2 ஆம் கட்ட போராட்டம் தொடங்கும் - CJP
டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தின் இரண்டாம் கட்டம் விரைவில் தொடங்கவுள்ளதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே அறிவித்துள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக 36 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தை அண்மையில் நிறைவு செய்த CJP அமைப்பு, கல்வி மற்றும் பொதுமக்களின் பல்வேறு பிரச்னைகளை மையமாக வைத்து அடுத்து போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

டெல்லியின் நரைனாவில் நடைபெறவிருந்த CJP தன்னார்வலர்கள் கூட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. ஆளும் பாஜகவின் அழுத்தம் காரணமாகவே மண்டப உரிமையாளர், கூட்டம் நடைபெற விருந்த மண்டபத்தின் முன் பதிவை ரத்து செய்ததாகவும் டிப்கே குற்றம் சாட்டினார்.
செங்கோட்டை தாக்குதல் - அல் கொய்தாவுக்கு தொடர்பு
2025 நவம்பரில் 11 பேரின் உயிர் பறிபோகக் காரணமான டெல்லி செங்கோட்டை பயங்கரவாத தாக்குதலுக்கு அல்-கொய்தாவின் கிளை பிரிவே காரணம் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்த அறிக்கையில், அந்த அமைப்பின் பிராந்திய வலைப்பின்னல் விரிவடைந்து வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு பெரிய அலகுகளாக இல்லாமல், சிறிய மற்றும் பரவலான தனித்தனி ரகசிய பிரிவுகள் மூலம் செயல்படத் தொடங்கியுள்ளதாகவும், தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் அது தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், செயல்பாட்டுக் குழுக்களை அமைப்பதற்காக வங்கதேசத்தைப் பயன்படுத்திக்கொள் ள முயன்று வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved