Also Watch
Read this
By: Fyrose Banu

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே சில தினங்களுக்கு முன்பு, சரக்கு வாகனம் ஒன்றில் தக்காளி கூடைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 97 கிலோ உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வாகனத்தை ஓட்டிவந்த ஒருவர் உடனடியாகக் கைது செய்யப்பட்ட நிலையில், உடன் வந்த இருவர் காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்று தலைமறைவாகினர்.

தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்க உடனடியாகத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர்கள் சென்னை அருகே பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அங்கு சென்ற தனிப்படை போலீசார், இருவரையும் சுற்றி வளைத்துக் கைது செய்து அழைத்து வந்தனர்.

போலீசாரின் விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி மற்றும் விஜயகுமார் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே பல பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாகப் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த இவர்கள் இருவரையும், போலீசார் குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து, இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved