Also Watch
Read this
By: Admin News Tamil

கோவை அருகே டன் கணக்கில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த கும்பலை பேரூர் போலீசார் அதிரடியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஒருவரைக் கைது செய்த போலீசார், ரூமில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 110 கிலோ குட்காவைப் பறிமுதல் செய்துள்ளனர். கோவை பேரூர் காவல் எல்லைக்குட்பட்ட காளம்பாளையம் பாலாஜி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், சட்டவிரோதமாகக் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு பேரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக பேரூர் காவல் ஆய்வாளர் திரு. நசீர் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், காவல் ஆய்வாளர் நசீர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சீதாராம் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் காளம்பாளையம் பாலாஜி நகரில் உள்ள குறிப்பிட்ட வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஓசூர் பகுதியில் இருந்து லாரிகள் மூலம் டன் கணக்கில் குட்கா புகையிலைப் பொருட்களை வாங்கி வந்து, வீட்டின் மேல்தளத்தில் உள்ள அறையில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து 110.100 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்தச் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட காளம்பாளையம் பாலாஜி நகரைச் சேர்ந்த கேஸ் விநியோகஸ்தர் சாரங்கபாண்டி (52) என்பவரைக் காவல் துறையினர் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய தீத்திப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இமானுவேல் (40) என்பவர் தலைமறைவாகியுள்ளார். வழக்குப் பதிவு செய்த பேரூர் போலீசார், கைது செய்யப்பட்ட சாரங்கபாண்டியனிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், தப்பியோடிய இமானுவேலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved