news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

வருமானத்தை தாண்டி வரி? அதிகாரிகள் கணக்கில் ஆயிரம் குளறுபடி

கேள்விகளால் துளைக்கும் வணிகர்கள்

21

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சேலம் மாநகராட்சியின் 4 மண்டலங்களில் சொத்து வரி நிலுவையில் உள்ள நிலையில் 400 பேரின் பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் அதிகாரிகள் கையூட்டு பெற்றுக்கொண்டு கண்டபடி வரியை தீட்டி வைத்திருப்பதாக வணிகர்கள் அடுக்கடுக்காக குற்றம்சாட்டி உள்ளனர். மாநகராட்சி விதித்துள்ள வரி உயர்வு விவரம் என்ன? அந்த வரி விதிப்பில் வணிகர்களுக்கு ஏன் உடன்பாடு இல்லை? அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் எவை?

வணிகர்கள் கொந்தளிப்பு
சேலம் மாநகராட்சியில் உள்ள சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய 4 மண்டலங்களில் அதிக சொத்துவரி நிலுவை வைத்துள்ள 400 நபர்களின் பட்டியல் கடந்த 24ஆம் தேதி மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியானது.

அந்த தரவுகள் சேலம் மாநகராட்சியில் ஒட்டுமொத்தமாக வரி செலுத்தும் 2.15 லட்சம் பேரையும் கிறுகிறுக்க வைத்துள்ளது. சூரமங்கலம் மண்டலத்தில் ரூ.11.38 கோடி, அஸ்தம்பட்டி மண்டலத்தில் ரூ.19.99 கோடி, அம்மாப்பேட்டை மண்டலத்தில் ரூ.6.10 கோடி, கொண்டலாம்பட்டி மண்டலத்தில் ரூ.12.35 கோடி என மொத்தமாக முதல் 400 பேர் 49.83 கோடி செலுத்தவில்லை என அந்த லிஸ்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் வருமானத்தை வைத்து வரியை கணக்கிட்டால் நியாயம் உள்ளது, சொத்து மதிப்பை வைத்து வரியை கணக்கிட்டால் என்ன நியாயம்? என மாநகராட்சியில் உள்ள வணிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

இது சாத்தியமா?
’மாநகராட்சி அதிகாரிகள் வரி விதிப்பிற்கு கையாண்டுள்ள கணக்கை கேட்டால் யாராக இருந்தாலும் தலைசுற்றும்,’ எனக்கூறிய வணிகர் சங்க தலைவர் ஜெயசீலன், வணிக கட்டிடங்களுக்கு ஒரு சதுர அடிக்கு ரூ.27க்கு மேல் 6 மாதத்திற்கு ஒருமுறை கட்ட வேண்டும், தரைதளம், முதல் தளம், 2ஆவது தளம் என அனைத்திற்கும் சேர்த்து ரூ.81 ஆயிரம் 6 மாதத்திற்கு ஒருமுறை கட்ட வேண்டுமென்றால், அது சாத்தியமா?

யார் பொறுப்பேற்பது?
சொத்து வரிவிதிப்பில் மற்ற மாநகராட்சிக்கும் சேலம் மாநகராட்சிக்கும் ஏன் ஏகப்பட்ட வித்தியாசம்? தொழிற்சாலை, வணிக கட்டிடங்கள் என எதையுமே பிரிக்காமல் ஒரே கேட்டகரியில் வரி போடுவது எந்த ஊர் நியாயம்? ரா மெட்டீரியல்ஸ் காய வைக்கும் காலி இடங்களை எல்லாம் கணக்கில் எடுத்து வரியை தீட்டினால் யார் பொறுப்பேற்பது? குறிப்பிட்ட வரியை செலுத்திதான் ஆக வேண்டும் இல்லாவிட்டால் சீல் வைப்போம் என மிரட்டுவது சரியா? என அடுக்கடுக்காக ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

எப்படி வரி விதிக்க முடியும்?
மேலும், மாநகராட்சிக்கு சொந்தமான 520 கடைகள் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறதே, அதன் மூலம் தடைபட்டு நிற்கும் ரூ.25 கோடிக்கு எந்த அதிகாரி பொறுப்பேற்பது? என கேள்வி எழுப்பிய ஜெயசீலன், மாநகராட்சி அதிகாரிகளுக்கு சொந்த வணிக கட்டிடங்கள் உள்ளதா? அதனை வாடகைக்கு விட்டுள்ளார்கள் என்றால் அவர்கள் கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை சதவீத வரி கட்டி உள்ளனர்? தற்போது அவர்களுக்கான வரி உயர்வு என்ன? அந்த பட்டியலை அவர்கள் காட்டுவார்களா? அரசு கட்டிடத்திற்குள் இருக்கும் வரைதான் அவர்கள் அதிகாரிகள், வெளியில் வந்தால் அவர்களும் பொதுமக்களில் ஒருவர்தானே? அரசாணையை மீறி மாநகராட்சி எப்படி வரி விதிக்க முடியும்? என கேள்விக்குமேல் கேள்வி எழுப்பினார்.

எந்த அடிப்படையில்?
’இதேபோல், வாராத குப்பைக்கு தனி வரி, இரும்புக்கடைக்கு குப்பை வரி ரூ.90 ஆயிரமாம்,’ என ஆத்திரப்பட்ட ஜெயசீலன், ஒரே தெருவில் எதிரெதிரில் உள்ள 8 ஆயிரம் சதுரஅடி கொண்ட ஒரு கட்டிடத்திற்கு ரூ.45 ஆயிரமும், 5 ஆயிரம் சதுரஅடி கொண்ட மற்றொரு கட்டிடத்திற்கு ரூ.2.15 லட்சமும் என எந்த அடிப்படையில் அதிகாரிகள் வரி விதித்துள்ளார்கள்? கடை கடையாக சென்று கையூட்டு பெற்றதின் விளைவுதான் இந்த வேறுபாடா? என குற்றம்சாட்டினார்.

பொது மக்கள் குமுறல்
தொடர்ந்து பேசிய சந்திரதாசன், வணிக கட்டிடத்தில் வரும் வாடகையை வைத்து பிழைத்து கொண்டிருக்கும் கணவனை இழந்த பெண்கள் சிலர் அதனையும் வரியாக கட்டிவிட்டால் அவர்களின் வாழ்வாதாராம் என்னவாகும்? அதிகபட்ச வரியே 30 சதவீதம்தான் என்கிறபோது அது எப்படி 56 சதவீதம் வரி விதிக்க முடியும்?

ஒரு இடத்தின் அரசு மதிப்பை வைத்து வரி விதிக்காமல் சந்தை மதிப்பை வைத்து வரி விதிப்பதா? முக்கிய சாலையில் உள்ள இடத்திற்கும் நகரத்தின் உட்புறத்தில் உள்ள இடத்திற்கும் ஒரே மாதிரியான வரி விதிப்பு என்பது சரியா? காவலாளிக்கு போட்டு வைத்திருக்கும் ஷெட்டுக்கெல்லாம் வரி விதிப்பதா? என தனது மனக்குமுறலை கொட்டினார்.

கடையடைப்பு போராட்டம், எச்சரிக்கை
சென்னையிலேயே ஒரு சதுர அடிக்கு ரூ.18 தான் அரையாண்டுக்கு வரி விதிப்பதாகவும் சேலத்தில் மட்டும் ரூ.27 விதிப்பதாகவும் கூறும் பிரதீப் ராஜ், சென்னையைவிடவா சேலம் பெரிய மாநகராட்சி? இதைக்கேட்டால் சென்னையில் வரி செலுத்துவோர் அதிகம் என சப்பைக்கட்டு கட்டுவதா? சேலத்தில் வரி செலுத்துவோர் குறைவு என்றால் அதனை தங்கள் தலையில் கட்டுவதா? என கேள்வி எழுப்பியதோடு 20 ஆண்டுகளாக மூடியே கிடக்கும் ஒரு மில்லுக்கு நிலுவை தொகையாக ரூ.7 லட்சம் விதித்திருப்பதாக குற்றம் சாட்டினார். மேலும், இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சேலம் நகர அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

நடுத்தெருவில் நிற்பதா?
மொத்தத்தில், வருமானத்தை வரியாக கட்டிவிட்டு நாங்கள் நடுத்தெருவில் நிற்பதா? என வணிகர்கள் கேள்வி எழுப்பும் நிலையில், அதற்கு அதிகாரிகள் தரப்பில் என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Link
கருகும் பயிர்கள், கண்ணீர் வடிக்கும் நாமக்கல் விவசாயிகள்

கருகும் பயிர்கள், கண்ணீர் வடிக்கும் நாமக்கல் விவசாயிகள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கனடாவில் இருந்து ஸ்பெயினுக்கு அனுப்பப்பட்ட திமிங்கலங்கள்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved