news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

பேராசிரியர் சாலமன் பாப்பையா காலமானார்

இறுதி மூச்சு வரை தமிழ்ப்பணி...

50

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பேராசிரியர் சாலமன் பாப்பையா, வயது முதிர்வால் காலமானார், அவருக்கு வயது 90.

மதுரை மைந்தன்...
பேராசிரியர் சாலமன் பாப்பையா, 1936ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி, மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் பிறந்தார். அவரது பெற்றோர் சுந்தரம் – பாக்கியம். 12 குழந்தைகள் கொண்ட குடும்பத்தில், 9ஆவது குழந்தையாக சாலமன் பாப்பையா பிறந்தார். அவரது தந்தை தொழிற்சாலையில் பணிபுரிந்தார். மிகப் பெரிய குடும்பம் என்பதால், பொருளாதார வசதி கொண்ட குழந்தைப் பருவம் அமையவில்லை. கல்வியை தொடர்வதற்கே போராட வேண்டிய நிலை. நண்பர்களின் உதவியுடனும் தனது முயற்சியுடனும் படிப்பைத் தொடர்ந்தார்.

சிறு வயதில் இருந்தே...
பள்ளியில் நடைபெற்ற பேச்சுப்பயிற்சி வகுப்புகளில் ஆசிரியர் எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து பேசுவார். நாடகங்களிலும் பங்கேற்றார். அமெரிக்கன் கல்லூரிப் பள்ளியில் திருவள்ளுவர் கழகத் தலைவராக இருந்தபோதும் மேடைகளில் பேசினார்.

வாரி அணைத்துக் கொண்ட தமிழ்
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற சாலமன் பாப்பையா, பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். தியாகராசர் கல்லூரியில் தொடங்கப்பட்ட முதல் எம்.ஏ. தமிழ் வகுப்பில் சேர்ந்தார். அவரது வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனை மீண்டும் அமெரிக்கன் கல்லூரியிலேயே ஏற்பட்டது. அங்கு, தமிழ்ப் பேராசிரியராக உயர்ந்தார். தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

கல்லூரிக்கு வெளியே இலக்கியம்...
வகுப்பறையில் மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியம் கற்பித்த பேராசிரியர், வகுப்பறைக்கு வெளியே அதே இலக்கியத்தை சாதாரண எளிய மக்களிடம் கொண்டு சென்ற பெருமை கொண்டவர்.

பட்டி தொட்டி எங்கும் பட்டிமன்றம்
இன்றைக்கு பட்டி தொட்டி எங்கும், பட்டிமன்றம் பிரபலமடைந்துள்ளது.
1960ஆம் ஆண்டுகளிலேயே இவரது மேடைப் பயணம் தீவிரமானது. அமெரிக்கன் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தபோது பேச்சுக்கலை தொடர்பான பாடத்தை நடத்தினார். எட்டையபுரம் பாரதி விழா அவரது மேடைப்பேச்சு பயணத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியது. குன்றக்குடி அடிகளார் தலைமையிலான பாரதி விழா பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு மேடைகளில் பேசத் தொடங்கினார்.

தமிழ் இலக்கிய நிகழ்வுகளில்...
1970ஆம் ஆண்டுகளிலேயே தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளின் இலக்கிய நிகழ்ச்சிகளில், பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் பெயர் இடம் பெற்றது. அவருக்கு பட்டிமன்ற பேச்சாளராக இருப்பதில்தான் அதிக விருப்பம். ஆனால், நடுவர் பொறுப்பு அவரது அடையாளமாகவே மாறியது. தமிழகத்தில் வளமான பட்டிமன்ற மரபு இருந்தபோதும், அந்த வடிவத்தை சாமானிய மக்களிடம் கொண்டு சேர்த்ததில், இவரின் பங்கு அளப்பரியது.

குடும்பங்கள் கொண்டாடும் நிகழ்ச்சி
இலக்கிய விழாக்கள், கல்லூரிகள், தமிழ் அமைப்புகள் போன்றவற்றை மையமாகக் கொண்டிருந்த பட்டிமன்றம், தொலைக்காட்சி வளர்ச்சிக்குப் பிறகு குடும்ப நிகழ்ச்சியாக மாறியது. பண்டிகை காலங்களில், தொலைக்காட்சி வாயிலாக ஒவ்வொரு குடும்பத்தையும் ரசிக்க வைத்தது. இந்த மாற்றத்தின் முக்கிய முகமாக சாலமன் பாப்பையா இருந்தார்.

மதுரைக்கே பெருமை...
இவரது பேச்சு, மதுரைக்கே உரிய இயல்பான பேச்சுத்தமிழும் நகைச்சுவையும் கலந்து வரும். இலக்கியம் படிக்காதவர்களும் இவர் சொல்லும் இலக்கியக் கருத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை வகுப்பறைகளுக்குள் இருந்த தமிழை, தமிழகத்தின் கடைக்கோடி மக்களிடம் அறிமுகப்படுத்தியவர் சாலமன் பாப்பையா.

சிரிக்க வைத்து, சிந்திக்க வைத்து...
சாலமன் பாப்பையாவின் பட்டிமன்ற தலைப்புகளும், இளம்தலைமுறை காலத்துடன் ஒன்றிப்போயின. இலக்கியம் சார்ந்த தலைப்புகளை கடந்து, குடும்பம், கணவன்–மனைவி, பெற்றோர்–குழந்தை, கல்வி, பணம், காதல், திருமணம், நவீன வாழ்க்கை, தொழில்நுட்பம், தலைமுறை மாற்றம் போன்ற சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை உடன் தொடர்புடையதாக மாறின. இவரது பட்டிமன்றம் சிரிக்க வைத்தது, தீர்ப்புகளின் மூலம் சிந்திக்க வைத்தது.

திருக்குறளை நேசிக்க வைத்தவர்
பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் முக்கியமான தமிழ் இலக்கியப் பணிகளில் ஒன்று திருக்குறள் உரை. ‘திருக்குறள் உரையுடன்’ என்ற அவரது நூல் வெளியிடப்பட்டு உள்ளது. சமகால சமூக வாழ்க்கை மற்றும் நடைமுறை அனுபவங்களை இணைத்து திருக்குறளை எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் அவர் உரை எழுதினார். சாமானிய மக்களையும் திருக்குறளை நேசிக்க வைத்தவர்.

தமிழ்த் திரையுலகில்...
தமிழ் மேடையில் பெரும் அடையாளத்தைப் பெற்ற பிறகு தமிழ்த் திரைப்படங்களிலும் சாலமன் பாப்பையா தோன்றினார். இயக்குநர் ஷங்கரின் ‘பாய்ஸ்’ மற்றும் ரஜினிகாந்த் நடித்த ‘சிவாஜி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா
தமிழுக்கான அவரது நீண்டகாலப் பணிக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன. தமிழ்நாடு அரசு 2000ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கியது. 2010ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ விருதை வழங்கியது. 2021ஆம் ஆண்டு மத்திய அரசு சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

சிரிக்கவும் சிந்திக்கவும்
சாலமன் பாப்பையாவின் மனைவி ஜெயபாய். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். நீண்டகாலம் இவரது இலக்கிய மற்றும் மேடைப் பயணத்திற்கு குடும்பம் ஆதரவாக இருந்தது. ஜெயபாய் 2025 ஜனவரி 12ஆம் தேதி மதுரையில் காலமானார்.
நகைச்சுவையால் சிரிக்க வைத்துக்கொண்டே சமூகத்தைச் சிந்திக்கவும் வைக்க முடியும் என்பதை பல தசாப்தங்களாக நிரூபித்தவர் சாலமன்பாப்பையா.

ஆன்மா சாந்தியடையட்டும்...



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

9/11 தாக்குதலின் 25-வது ஆண்டு நினைவு தினம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved