Also Watch
Read this
சென்னை, ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் விசாரணை என்கிற பெயரில் பெண்களை அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக அழைத்துச் சென்றவர்களை பார்க்கச் சென்றபோது நேர்ந்த இந்த சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

விசாரணை என்ற பெயரில்...
சென்னை, கொருக்குபேட்டையை சேர்ந்த அஜித்குமார், ராஜேஷ், மணிகண்டன் மற்றும் ஜெகதீஷ்வரன் ஆகியோரை ஆர்.கே.நகர் போலீஸார் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். இவர்களை பார்ப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த வள்ளி, அவரது மகன் திருமலை உள்ளிட்ட சிலர் சென்றுள்ளனர். அப்போது, வள்ளியையும், அவரது மகன் திருமலையையும் போலீஸார் தாக்கி லாக்கப்பில் அடைத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

பொய் வழக்கு...
இதனை அங்கிருந்த வழக்கறிஞர் ஜெயந்தி, வள்ளியின் மகள் மீனா ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த போலீஸார் ஜெயந்தியை தாக்கி, தரதரவென காவல் நிலையத்துக்குள் இழுத்துச் சென்றுள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தையும் வள்ளியின் மகள் மீனா தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதைக் கண்ட போலீஸார், மீனாவை தாக்கி அவரது செல்போனையும் பிடுங்கி வீசி எறிந்துள்ளனர். இதில், மீனாவின் கையில் சீராய்ப்புக் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய மீனா, ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் போலீஸாரின் அராஜகம் அதிகமாக இருப்பதாகவும், பலர் மீதும் பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளுவதை வாடிக்கையாக வைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

மிரட்டும் போலீசார்...
மேலும், அராஜகமாக செயல்படும் போலீஸார் மீது முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் ஜெயந்தி கூறுகையில், தனது தாய் உள்ளிட்டோரை சேலையை பிடித்து இழுத்துச் சென்று அநாகரிகமாக நடந்து கொள்வதாகவும், தன் மீதும், தனது கணவர் மீதும் பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிடுவதாக கூறி மிரட்டுவதாகவும் தெரிவித்தார். மேலும், 2 கேங்க்-க்கு இடையே போலீஸாரே வேண்டுமென்றே மோதலை தூண்டி விடுவதாகவும், கொ* செய்வதற்கு தூண்டுவதாகவும் குற்றம் சாட்டினார்.

கனிமொழி கண்டனம்
இதுகுறித்து போலீஸ் தரப்பில் விளக்கம் கேட்டதற்கு தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்கச் சென்றால், குறுக்கே வந்து தடுப்பதாக சிம்பிளாகக் கூறி முடித்துக் கொண்டனர்.

இதனிடையே, இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்பியுமான கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், பெரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறும் இடமாக தமிழ்நாடு மாறி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், பெண்களை காவல் நிலையத்திலேயே வைத்து இதுபோன்று துன்புறுத்துவதுதான் தவெக சொன்ன மாற்றங்களில் ஒன்றா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved