news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

பிரிக்ஸ் மாநாடு, இந்தியாவில் மையம் கொள்ளும் உலக அரசியல்

அரசியல் சக்தியாக மாறும் பொருளாதார கூட்டமைப்பு

29

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

உக்ரைன் போர் தொடர்கிறது. மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் மோதல் உலக அரசியலை உலுக்குகிறது. ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் எரிசக்தி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா போட்டி தீவிரமடைந்துள்ளது. இந்த சூழலில் டெல்லியில் நடைபெறும் 18ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாடு, “உலகம் எங்கே செல்கிறது?” என்ற கேள்விக்கு விடை தேடும் மாநாடாக மாறியுள்ளது.

அரசியல் சக்தியாக மாறும் பொருளாதார கூட்டமைப்பு
பிரிக்ஸ்... ஆரம்பத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நான்கு நாடுகளைக் கொண்டிருந்தது. பின்னர் தென்னாப்பிரிக்கா இணைந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் முழு உறுப்பினர்களாக இணைந்துள்ளன. தற்போது 11 உறுப்பினர் நாடுகளும் 10 கூட்டாளி நாடுகளும் கொண்ட பெரிய அமைப்பாக உருவெடுத்துள்ளது.

அதிகரிக்க அதிகரிக்க...
இந்த விரிவாக்கம் உலக மக்கள் தொகையில் சுமார் பாதியையும், உலகப் பொருளாதாரத்தில் கால் பங்கையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதுதான் பிரிக்ஸின் மிகப்பெரிய பலம். ஆனால் இதுவே அதன் மிகப்பெரிய பலவீனமும் கூட. ஏனெனில் உறுப்பினர்கள் அதிகரிக்க அதிகரிக்க, அவர்களின் அரசியல் நோக்கங்களும் வேறுபடுகின்றன. சீனா, அமெரிக்க ஆதிக்கத்திற்கு மாற்றான உலக அமைப்பை விரும்புகிறது. ரஷ்யா மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு மாற்றான அமைப்புகளை உருவாக்க விரும்புகிறது. ஈரான் அமெரிக்க அழுத்தத்தை எதிர்கொள்ள பிரிக்ஸை முக்கிய மேடையாகப் பார்க்கிறது.

இந்தியாவின் நிலைப்பாடு
இந்தியாவைப் பொறுத்தவரை, அமெரிக்காவுடனும் உறவு வேண்டும்; ரஷ்யாவுடனான பாரம்பரிய உறவு தொடர வேண்டும். சீனாவுடன் போட்டியும் இருக்கும், அதே நேரத்தில் உரையாடலும் தேவை. இதுதான் இந்தியாவின் சிக்கலான ஆனால், தனித்துவமான புவிசார் அரசியல் நிலைப்பாடு. இந்த நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இந்தியாவின் 2026 பிரிக்ஸ் தலைமைப் பதவியின் முக்கியமான கவனம் “resilience”, அதாவது நெருக்கடிகளைத் தாங்கும் திறன். உணவு பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, சுகாதாரம், பேரிடர் அபாயக் குறைப்பு, முக்கிய விநியோகச் சங்கிலிகள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் உள்ளது.

ஒரே மேடையில் மூன்று சக்திகள்
டெல்லி பிரிக்ஸ் மாநாட்டின் மிகப்பெரிய அரசியல் காட்சி, நரேந்திர மோடி, ஷி ஜின்பிங், விளாடிமிர் புதின் ஆகிய மூன்று தலைவர்களும் ஒரே மேடையில் இருப்பதுதான். குறிப்பாக ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஷி ஜின்பிங்கின் இந்திய வருகை முக்கியமானது. இந்தியா, சீனா எல்லைப் பிரச்சினை, வர்த்தக ஏற்றத்தாழ்வு மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான போட்டி உள்ளது. இந்தியா சீனாவுடன் உறவை முழுமையாக துண்டிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் சீனாவின் ஆதிக்கத்தையும் ஏற்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக இந்தியா, சீனா உறவில் ஏற்பட்ட பதற்றத்துக்குப் பின்னர், இரு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தையை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்த பின்னணியிலும் பிரிக்ஸ் மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது.

ரஷ்யா உடனான உறவு
உக்ரைன் போர் தொடங்கிய பின்னரும், ரஷ்யாவுடனான எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளை இந்தியா கைவிடவில்லை. மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு இடையிலும் ரஷ்யா தனது வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகளின் உள்ளூர் நாணயங்களை அதிகமாகப் பயன்படுத்தி வருகிறது. ரஷ்ய அதிகாரிகளின் கூற்றுப்படி, பிரிக்ஸ் நாடுகளுடன் ரஷ்யாவின் பெரும்பாலான பணப் பரிவர்த்தனைகள் அந்தந்த நாடுகளின் தேசிய நாணயங்களிலேயே நடைபெறுகின்றன. அந்த வகையில், ரூபாய், ரூபிள் வர்த்தகம், எரிசக்தி இறக்குமதி, பாதுகாப்புத்துறை உற்பத்தி, அணுசக்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ரஷ்யாவுடனான உறவை இந்தியா மேலும் விரிவுபடுத்த முடியும்.

அமெரிக்காவுக்கு எதிரான கூட்டணியா பிரிக்ஸ் ?
இந்தியா, அமெரிக்காவுடன் குவாட் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் இணைந்து செயல்படுகிறது. பாதுகாப்பு, தொழில்நுட்பம், முதலீடு, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் அமெரிக்காவுடன் உறவை விரிவுபடுத்துகிறது. அதே நேரத்தில் பிரிக்ஸிலும் தலைமை வகிக்கிறது.

இந்நிலையில், அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைப்பது பற்றி பிரிக்ஸ் மாநாடுகளில் தொடர்ந்து பேசப்படுகிறது. ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் சர்வதேச வர்த்தகத்தில் டாலர் சார்பை குறைக்க விரும்புகின்றன. உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் செய்வது, மாற்று பணப்பரிவர்த்தனை அமைப்புகளை உருவாக்க முயற்சிக்கின்றன.

ஒரே குரல், கடினம்...
இந்த மாநாட்டின் மிக சிக்கலான புவிசார் அரசியல் பிரச்சினை மத்திய கிழக்கு போர். ஈரான் பிரிக்ஸின் முழு உறுப்பினராக உள்ளது. மறுபுறம் ஐக்கிய அரபு அமீரகமும் பிரிக்ஸ் உறுப்பினர். தற்போதைய அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் மோதல் இந்த நாடுகளின் நலன்களை நேரடியாக பாதிக்கிறது. மேலும் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பதற்றம் உலக எரிசக்தி சந்தையை பாதித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வானது உலகின் பணவீக்கம், போக்குவரத்து செலவு மற்றும் உணவுப்பொருள் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பிரிக்ஸ் மாநாட்டில் மத்திய கிழக்கு விவகாரத்தில் ஒரே குரலை உருவாக்குவது கடினமாக இருக்கலாம்.

Related Link
ஜிடிபி சர்ச்சை, மத்திய அரசு பொய் சொல்கிறதா?

ஜிடிபி சர்ச்சை, மத்திய அரசு பொய் சொல்கிறதா?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வார்னிங்கை மீறி காதல் திருமணம், மருமகனை அலற வைத்த மாமனார்

24
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved