Also Watch
Read this
இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அண்மையில் வெளியான GDP புள்ளி விவரங்களில் செய்யப்பட்ட திருத்தங்கள், பொருளாதார நிபுணர்கள் மத்தியில் புதிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளன.
மத்திய அரசின் விளக்கம்
முன்னாள் நிதிச் செயலாளர் சுபாஷ் சந்திர கார்க், ஜிடிபி கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைச் சுட்டிக்காட்டி, வளர்ச்சி விகிதம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளார். இதற்கு மத்திய அரசு என்ன விளக்கம் தருகிறது? பொருளாதார வளர்ச்சி உண்மையிலேயே வலுவாக இருக்கிறதா? அல்லது ஜிடிபி கணக்கீட்டு முறையில் ஏற்பட்ட மாற்றங்களே புள்ளிவிவரங்களில் பெரிய வேறுபாட்டை ஏற்படுத்துகிறதா?

பொருளாதார வளர்ச்சி உண்மையா?
இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் 7.8 சதவீதம் வளர்ந்து உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. எதிர்பார்ப்புகளைவிட அதிகமான இந்த வளர்ச்சி, இந்தியப் பொருளாதாரத்தின் வலிமையை எடுத்துக்காட்டுவதாக அரசு தரப்பு கூறுகிறது. முன்னாள் நிதிச் செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் உண்மையான வளர்ச்சி 7.8 சதவீதம் அல்ல; 2.6 சதவீதம் தான் என்கிறார்.

புள்ளிவிவர திருத்தங்களால் என்ன நடக்கிறது?
கடந்த நிதியாண்டின் ஏப்ரல்–ஜூன் காலாண்டுக்கான ஜிடிபி முதலில் சுமார் ₹86.05 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டது. ஆனால் புதிய ஜிடிபி தொடரின் அடிப்படையில் அதே காலாண்டின் மதிப்பு சுமார் ₹80 லட்சம் கோடியாகத் திருத்தப்பட்டது. இதில் தான் முழு சர்ச்சையின் மையப்புள்ளி இருக்கிறது. அரசு கடந்த ஆண்டின் ஜிடிபி மதிப்பை ₹86 லட்சம் கோடியிலிருந்து சுமார் ₹80 லட்சம் கோடியாகக் குறைத்து விட்டதால், இந்த ஆண்டின் வளர்ச்சி விகிதம் செயற்கையாக உயர்த்தப்பட்டதாக கார்க் கூறுகிறார்.

2.6 சதவீத வளர்ச்சி என்று கூறுவது தவறு
₹86.05 லட்சம் கோடி என்பது பழைய 2011-12 அடிப்படை ஆண்டு தொடரில் கணக்கிடப்பட்ட மதிப்பு. தற்போது இந்தியாவின் ஜிடிபி கணக்கீடு 2022-23 அடிப்படை ஆண்டை மையமாகக் கொண்ட புதிய தொடருக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே, பழைய தொடரின் ₹86.05 லட்சம் கோடியையும் புதிய தொடரின் ₹88.27 லட்சம் கோடியையும் நேரடியாக ஒப்பிட்டு 2.6 சதவீத வளர்ச்சி என்று கூறுவது தவறு என அரசு கூறுகிறது.

ஜிடிபி கணக்கீட்டில் அடிப்படை ஆண்டு மாற்றம் - ஏன் முக்கியம்?
ஜிடிபி கணக்கீட்டில், "அடிப்படை ஆண்டு" என்பது மிகவும் முக்கியமானது. முந்தைய ஜிடிபி தொடர் 2011-12ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டிருந்தது. புதிய தொடரில் 2022-23 அடிப்படை ஆண்டாக மாற்றப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் பொருளாதாரம் காலப்போக்கில் மாறுகிறது. ஒரு காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த தொழில்கள் பின்னர் குறையலாம். புதிய தொழில்கள் வேகமாக வளரலாம். நுகர்வு முறைகளும் மாறுகின்றன.

சேவைத் துறை, டிஜிட்டல் பொருளாதாரம், புதிய உற்பத்தித் துறைகள் போன்றவை பொருளாதாரத்தில் அதிக பங்களிப்பைச் செய்யத் தொடங்கலாம். எனவே, பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பொருளாதார அமைப்பை அடிப்படையாகக் கொண்டு இன்றைய பொருளாதார வளர்ச்சியை அளவிடுவது சில நேரங்களில் துல்லியமான புரிதலை தராமல் இருக்கலாம். இதனால் தான் அடிப்படை ஆண்டை மாற்றுவது புள்ளிவிவர அமைப்புகளில் வழக்கமான நடைமுறையாக இருக்கிறது.

முதலீடுகள் வருவதற்கு புள்ளிவிவரங்களின் மீது நம்பிக்கை முக்கியம்
பொருளாதார புள்ளிவிவரங்கள் அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் மட்டும் தேவையானவை அல்ல. முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள், வங்கிகள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அவை முக்கியமானவை.
ஒரு நாட்டின் வளர்ச்சி விகிதம் எவ்வளவு என்பதை அறிய முடியாவிட்டால், எதிர்கால முதலீட்டு முடிவுகளையும் கொள்கை முடிவுகளையும் எடுப்பது கடினமாகிவிடும். அதனால் ஜிடிபி கணக்கீட்டு முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டால், அவை ஏன் செய்யப்பட்டன, எந்த தரவுகள் சேர்க்கப்பட்டன, எந்த தரவுகள் நீக்கப்பட்டன, பழைய தொடருடன் புதிய தொடரை எவ்வாறு ஒப்பிட வேண்டும்? என்பன அனைத்தும் வெளிப்படையாக விளக்கப்படுவது அவசியம். புதிய அடிப்படை ஆண்டு மற்றும் புதிய கணக்கீட்டு முறையின் மூலம் புள்ளிவிவரங்கள் இன்னும் துல்லியமாகும் என்று அரசு கூறுகிறது. இனி பெரிய அளவிலான திருத்தங்கள் இருக்காது என்றும் புள்ளிவிவரத் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது உண்மையா? என்பதை வரும் காலாண்டுகளில் வெளியாகும் தரவுகளே தீர்மானிக்கும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved