Also Watch
Read this
கள்ளக்குறிச்சி அருகே, அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியர் கொடுத்த பாலியல் டார்ச்சரால், 10ஆம் வகுப்பு பள்ளி மாணவி தனது உயிரை மாய்த்திருக்கிறார். இறப்பிற்கு முன்பாக மாணவி கொடுத்த தகவலின் பேரில் போக்சோவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

அரசுப்பள்ளியில்...
மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற புகழ்பெற்ற முதுமொழியை நாம் கேட்டிருப்போம். அவ்வாறு தாய் தந்தைக்கு பின் குருவே போற்றுத்தலுக்கு உரியவர் என்ற நிலையில் இந்த கேடுகெட்ட ஆசிரியரோ படிக்கும் மாணவியிடம் சில்மிஷம் காட்டி உயிரை பறித்திருக்கிறார்.
கள்ளக்குறிச்சி அருகேவுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவி, இந்தாண்டு பொதுதேர்வெழுத தயாராகி வந்த நிலையில், திடீரென ஒருநாள் களைக்கொல்லி மருந்தை உட்கொண்டு மயக்கமடைந்திருக்கிறார். இதனை பார்த்து பதறிபோன குடும்பத்தினர் அவரை தூக்கிக் கொண்டு சின்னசேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து விசாரித்ததில், அறிவியல் ஆசிரியர் ஜெகதீஷன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக மாணவி கூறி அதிர வைத்திருக்கிறார்.

தனியாக அழைத்து...
தன்னை ஆசிரியர் அறைக்கு அழைத்துச் சென்ற அந்த அறிவியல் ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அதனை யாரிடம் சொல்வது என தெரியாமல் மனதில் போட்டுக்கொண்டு புழுங்கி கொண்டிருந்ததாகவும் கண்ணீர் விட்டதாக சொல்லப்படுகிறது. strict ஆன வாத்தியாராக பள்ளிக்குள் வலம் வந்த இந்த ஜெகதீஷன் அம்மாணவியை அடிக்கடி தனியாக அழைத்து பாடம் தொடர்பாக அவர் செய்த பிழையை சுட்டிக்காட்டி வந்ததாக சொல்லப்படுகிறது.

மாணவி உயிரிழப்பு
இதனை கேட்டு கொதித்து போன குடும்பத்தினர் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெகதீஷனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைதும் செய்தனர். இதனிடையே அம்மாணவியின் நிலைமை மோசமாகி கொண்டே வந்த நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரை விட்டிருக்கிறார்.

உணர வேண்டும்
பள்ளி பருவத்தில் குழந்தைகள் வீட்டில் இருப்பதை விட பள்ளியில் இருப்பதே அதிகம் என்ற நிலையில் அவர்களை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டு நல்லவர்களாய் வளர்க்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தங்களுக்கு உண்டு என்பதை ஜெகதீஷன் போன்ற ஆசிரியர்கள் உணர வேண்டும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved