Also Watch
Read this
வேலைக்காக வெளிநாடு செல்ல முயன்ற தன்னை, 5 லட்சம் பணம் பறித்துக் கொண்டு மாணவர் விசாவில் ரஷ்யா அனுப்பி வைத்த ஏஜென்ட், தனது அடையாளத்தை மாற்றி வலுக்கட்டாயமாக அந்நாட்டு ராணுவத்தில் சிக்க வைத்துவிட்டதாக வீடியோ வெளியிட்டுள்ள விருதுநகர் இளைஞர், தன்னை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மாணவர் விசாவில்...
வேலைக்காக மாணவர் விசாவில் சென்று ரஷ்ய ராணுவத்தில் சிக்க வைக்கப்பட்டதாக வீடியோ வெளியிட்டுள்ளார், விருதுநகர் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த அபினேஷ்குமார். இவரை பணியாளர் விசாவிற்கு பதிலாக மாணவர் விசாவில் ரஷ்யா அனுப்பி வைத்த திருச்சியை சேர்ந்த ஏஜென்ட் பகிரதன், விமானக் கட்டணம், தங்குமிடம், கல்லூரிக் கட்டணம் அனைத்தும் அடங்கும் எனக் கூறி 5 லட்சம் ரூபாயும் பெற்றுள்ளார்.

படிக்க சென்றவர்...
பகிரதன் கூறியதை நம்பி, ரஷ்யா சென்று இறங்கிய பிறகு தான் ஒவ்வொரு பூதமாக கிளம்ப தொடங்கியிருக்கிறது. செப்டம்பர் மாதம் துவங்கிய கல்லூரியில், அபினேஷ்குமாருக்கு ஏப்ரல் மாதத்தில் அட்மிஷன் போட்டு சேர்த்து விட்டிருக்கின்றனர்.

படிப்பு முடிய ஒரு மாதம் மட்டுமே இருப்பது தெரிய வந்ததால், பகிரதனை தொடர்பு கொண்டு கேட்ட போது, ஜூலையில் மீண்டும் அட்மிஷன் பெற்று தருவதாக கூறி, வேர் ஹவுஸ் ஒன்றில் வேலைக்கு சேர்த்து விட்டதாக கூறப்படுகிறது.

ரஷ்ய ராணுவத்தில்...
பின்னர் ஏமாற்றப்பட்டதை கூறியதும், உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என எச்சரிக்கை கடிதம் கொடுத்தும், அபராதம் விதித்தும் விடுவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து தலைநகருக்கு வெளியே புறநகர் பகுதியில் செக்யூரிட்டி வேலை பார்க்கலாம் என்றும், அங்கு போலீஸ் மற்றும் குடியேற்ற அதிகாரிகளின் தொல்லை இருக்காது எனவும் கூறி, மாஸ்கோவிலிருந்து 1000 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு சென்ற பிறகு தான் ரஷ்ய ராணுவத்தில் சேர்த்து விடப்பட்டது தெரியவந்திருக்கிறது.

தீர விசாரிக்காமல் சென்றால்...
வேறு வழியின்றி ராணுவ முகாமில் சிக்கியிருக்கும் அபினேஷ்குமார், தன்னுடன் உண்மையாகவே மருத்துவம் படிக்க வந்த மேலும் 3 பேரும் சிக்கி இருப்பதாக கூறி உள்ளார்.

படிப்பிற்காகவும், பணி புரிவதற்காகவும் வெளிநாடுகளுக்கு செல்வோர், இதுபோன்ற ஏஜெண்டுகளை நம்பி ஏமாறாமல், தீர விசாரித்து சட்டப்பூர்வமாக செல்வதே சாலச் சிறந்தது என்பதற்கு மேலும் ஒரு உதாரணமாக மாறியிருக்கிறது இந்த சம்பவம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved