Also Watch
Read this
Posted on: Mar 04, 2026 09:19 AM
By: Manigandan Raja
திருப்பூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, இரண்டரை கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு, போலியாக மாவட்ட ஆட்சியரின் கையெழுத்தை இட்டு பணி நியமன ஆணைகளை வழங்கி, கல்தா கொடுத்த நபர் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
3 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை
தேர்வே எழுதாமல் அரசு வேலை கிடைக்கிறதே என்ற ஆசையில், சிறுக சிறுக சேர்த்த பணத்தையும், கடன் வாங்கி கொடுத்த ரொக்கத்தையும் ஒரே அடியாக இழந்து விட்டு, நிர்கதி நிலைக்கு ஆளாகி கண்ணீர் வடிப்பவர்களைப் பார்த்து வருத்தப்படுவதா அல்லது ஆதங்கப்படுவதா என தெரியவில்லை.
திருப்பூர் மாவட்டம், அலங்கியம் காந்தி நகரை சேர்ந்தவர் அறிவானந்தம். 27 வயதான இவர், காசிலிங்கபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக மருத்துவ உதவியாளராக ஒப்பந்த அடிப்படையில் 2 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தேர்வின் அடிப்படையில் அல்லாமல் நேரடியாக நிரப்பப்பட உள்ளதாகவும், தமக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, வேலை வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி பலரிடம் 3 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை தவணை முறையில் அறிவானந்தம் பெற்றுக் கொண்டதாக தெரிகிறது.
அத்தனையும் போலி
ஒருநாள், பணம் கொடுத்தவர்கள் அனைவரையும் மாவட்ட ஆட்சியரகத்துக்கு அழைத்துச் சென்ற அறிவானந்தம், அவர்களை மூன்றாவது தளத்தில் அமர வைத்து விட்டு அவர் மட்டும் ஆறாவது தளம் சென்று, போலியான பணி நியமன ஆணைகளையும், போலி ஐடி கார்டுகளையும் வாங்கிக் கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது. அதனை பெற்றுக் கொண்ட அனைவரும் வீட்டிற்கு சென்று ஆராய்ந்து பார்த்ததில் அதில் ஏகப்பட்ட ஸ்பெல்லிங் மிஸ்டேக், ஆட்சியரின் கையெழுத்து மாறுபட்டு இருப்பதையும் கவனித்து அச்சமடைந்தனர். பின்னர் ஆட்சியரகத்திற்கே நேரில் சென்று விசாரித்த போது தான் அவை அத்தனையும் போலி என பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியவந்திருக்கிறது.
அறிவானந்தம் சுகபோக வாழ்க்கை
இதுதொடர்பாக, அறிவானந்தத்திடம் நேரில் சென்று தகராறில் ஈடுபட்டனர் பாதிக்கப்பட்ட தரப்பினர். இதையறிந்து போலீசார் விசாரணை நடத்தி, அறிவானந்தத்தின் அறையில் இருந்த போலி முத்திரை, ரப்பர் ஸ்டாம்ப், ஐடி கார்டு மற்றும் ஆணுறை, போதை ஊசிகளையும் பறிமுதல் செய்து அவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். சுமார் 60 பேர் வரை அறிவானந்தத்திடம் பணம் கொடுத்து ஏமாந்திருப்பதாக கூறப்படுவது, திடுக்கிட வைக்கிறது. மோசடி பணத்தில் இன்ப சுற்றுலா செல்வது, மனைவி பெயரில் சொத்துகளை வாங்கி குவித்தது என அறிவானந்தம் சுகபோக வாழ்க்கையை அனுபவித்து வந்ததாக புகார் கூறப்படுகிறது.
அரசு பணி மீதுள்ள மோகத்தால்...
அறிவானந்தத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர் என்ற செய்தியறிந்ததும் அங்கு விரைந்த பாதிக்கப்பட்டவர்களில் சிலர், கண்ணீரும் கதறலுமாக காவல் நிலைய வளாகத்தில் காத்திருந்தனர். எப்படியாவது தாங்கள் இழந்த பணத்தை மீட்டு தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அரசு பணி மீதுள்ள மோகத்தால் இத்தனை குடும்பங்கள் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்திருக்கும் சம்பவம் திருப்பூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
நியூஸ் தமிழ் செய்திகளுக்காக செய்தியாளர் காஜாமைதீன்...
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved