Also Watch
Read this
மதுரை மாவட்டம், கூடல் நகரில் 11ஆம் வகுப்பு மாணவர் மர்மமான முறையில் குட்டையில் சடலமாக மிதந்த நிலையில், சம்பவம் நடந்து ஒரு வாரமாகியும் ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டி காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சந்தேக வழக்காக மட்டுமே வைத்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், கொ*வழக்காக பதிவு செய்ய உறவினர்கள் வலியுறுத்தினர்.


காதல் விவகாரம்?
கடந்த 6ஆம் தேதி நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட சென்ற மதுரை மாவட்ட கூடல் நகரை சேர்ந்த மாணவர் தமிழ்ச்செல்வன் அடுத்த நாள் காலையில் குட்டையில் சடலமாக மிதந்த நிலையில், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு பின்னால் காதல் விவகாரம் இருப்பதாக பகீரை கிளப்பிய உறவினர்கள், அச்சிறுவன் காதலித்த சிறுமியின் தரப்பினர் கொ* செய்திருக்கலாம் என புகார்களை அடுக்கினர். அப்போதே விசாரணையில் போலீசார் சுணக்கம் காட்டியதாக குற்றம்சாட்டி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், வீட்டுக்கே சென்று குடும்பத்தினர், உறவினர்களிடம் போலீசார் விசாரித்திருக்கின்றனர்.

ஆணையர் அலுவலகம் முற்றுகை
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு பந்தோபஸ்து பணியினால் இச்சம்பவத்தை கண்டும் காணாமல் போலீசார் விட்டதாக சிறுவனின் உறவினர்கள் குற்றம் சாட்டி மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதோடு, 9 நாட்களாக உடலை பெறாமல் போராடி வருகின்றனர். சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் மட்டுமே வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருவதால் உறவினர்களிடையே நம்பிக்கையில்லாமல் இரண்டாவது முறையாக போராட்டத்தை கையிலெடுத்தனர்.

மரணத்திற்கு நீதி...
சந்தேக மரணத்தை கொ* வழக்காக மாற்ற வேண்டும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி மரணத்துக்கு நீதி வேண்டுமென முழக்கமிட்டனர்.

சாலையோரமாக நின்று கொண்டு முழக்கமிட்ட போராட்டக்காரர்கள் பின் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட செல்ல ஓடிய போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

போராட்டக்காரர்கள் கைது
முதலில் சாலையில் திடுதிடுவென ஓடிய பெண்ணை துரத்தி வந்த காவலர்கள் மடக்கி பிடித்த நிலையில், அப்பெண் சாலையிலேயே படுத்துக்கொண்டு பெண் காவலரின் காலை இறுக்கி பிடித்துக் கொண்டார்.

அப்போது அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். போலீசார் தங்களது பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல் விரைந்து உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்பதே அனைவரது எதிர்ப்பார்ப்பு.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved