Also Watch
Read this
"ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்றால், அதனை கூட்டணி கட்சிகள் ஒப்புக்கொள்ள வேண்டும்," என்று செல்வப்பெருந்தகை கூற, அதனை சொல்ல அவர் யார்? என்று மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி கேள்வி எழுப்ப, இதற்கு செல்வப்பெருந்தகை கடுமையாக விமர்சித்து பதிலடி கொடுத்துள்ளார். இருவரும் பேசியது என்ன? என்பதை பார்க்கலாம்.

பிரதமர் வேட்பாளர்...
தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை இழந்த பின், அரசியல் நிகழ்ச்சிகளில் பெயர் அளவுக்கு மட்டுமே பங்கேற்று வந்த செல்வப்பெருந்தகை பிரதமர் வேட்பாளர் விவகாரம் குறித்து பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்றால் அதனை கூட்டணி கட்சிகள் ஒப்புக்கொள்ள வேண்டும், அப்படியில்லை என்றால் இந்த கூட்டணியில் இருப்பதற்கான என்ன வாய்ப்பு உள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.

கூட்டணி எதற்கு? யார் அவர்?
ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்று கொள்ளாத கட்சியுடன் கூட்டணி எதற்கு? என்று செல்வப்பெருந்தகை பேசியது தொடர்பான கேள்விக்கு யாருங்க அவரு? என பதில் கேள்வி எழுப்பிய பிரவீன் சக்கரவர்த்தி, கடந்த காலங்களில் என்ன வேண்டுமானாலும் இருந்திருக்கலாம், இப்போது அவசியம் இல்லை என்று வெளிப்படையாக கூறினார். கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று விளக்கமளித்த பிரவீன் சக்கரவர்த்தி, ராகுல் காந்தியை சந்தித்து தமிழ்நாடு அரசியல் குறித்தும் பேசியதாகவும் தெரிவித்தார்.

உழைப்பது தான் கடினம்
இதற்கு, எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்த செல்வப்பெருந்தகை, பிரவீன் சக்கரவர்த்தியை வாண்டடாக வம்புக்கு இழுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. பதிவில், கூட்டணி பற்றி பேச செல்வப்பெருந்தகை யார்? எனக் கேட்கிறார் அறிவு ஜீவி என்று கூறிக்கொள்ளும் ஒருவர் என்றும், உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது, உழைத்து இயக்கத்தை வளர்ப்பதுதான் கடினம் என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் தான் பிரதமர் வேட்பாளர்...
மேலும், பதவியின் உயரம் ஒருவரின் அரசியல் உயரத்தைத் தீர்மானிப்பதில்லை என்றும், காலம் பலரை முன்னிறுத்தும்; அதே காலம் பலரை மறந்தும் போகும் என தெரிவித்துள்ளார். தற்போதைய தமிழ்நாட்டின் முதல்வர் தான் பிரதமர் வேட்பாளர் என்போர் பக்கம் நின்று கொண்டு, ராகுல் காந்தி தான் பிரதமர் எனச் சொல்லும் என் மீது கல்லெறிபவர் என்னை யார் என்று கேட்கிறார் என காட்டமாக விமர்சித்துள்ளார்.

பிரதமர் வேட்பாளர் விவகாரம் தவெக கூட்டணியில் சுற்றி சுழன்று வரும் நிலையில், இதற்கு எப்போது தான் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பலர் மத்தியில் எழுந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved