Also Watch
Read this
செல்வாக்கு மிக்க தொழிலதிபராக வலம் வந்த 'ஜெம் கிரானைட்' வீரமணி, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை விறுவிறுப்படைந்து உள்ளது. 'தமிழ்நாட்டின் எப்ஸ்டீன் வழக்கு' என்று அழைக்கப்படும் இந்த வழக்கு வெளிக்கொண்டு வந்துள்ள உண்மைகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜெம் என்ற பெயரில் உலாவந்த கேடுகெட்ட நபர்
'ஜெம் கிரானைட்' வீரமணி என்று அறியப்படும் 84 வயதான வீரமணி , இந்தியாவின் கிரானைட் தொழில்துறையின் சிற்பிகளில் ஒருவராக சித்தரிக்கப்பட்டவர். கிரானைட் சுரங்கம் மற்றும் சந்தைப்படுத்தலுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக மத்திய அரசால் கௌரவிக்கப்பட்டவர். தொண்டு நடவடிக்கைகளுக்காகவும் அறியப்பட்டவர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு தொழிலை உருவாக்கி, அரசியல்வாதிகள், பிரபலங்களை உள்ளடக்கிய ஒரு செல்வாக்கு வட்டத்தை கவனமாக வளர்த்தெடுத்து உள்ளார். இதன் பின்னணியில் இருந்த இருண்ட உலகம் தான் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

முதல் வெளிச்சப் புள்ளி
கடந்த ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி, சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த என்ஜிஓ சிறார் உரிமை ஆர்வலர் ஒருவர், விபச்சார தடுப்பு பிரிவு ஆய்வாளரிடம் அளித்த புகார் தான், இருண்ட உலகத்தை அம்பலப்படுத்திய முதல் வெளிச்சப் புள்ளி. வீரமணி, தனது கூட்டாளி சாந்தி என்பவருக்குச் சொந்தமான வீட்டில், ஒரு சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது பதிவு செய்யப்பட்டிருந்த பென் டிரைவ் தான் முக்கிய ஆதாரம். இந்த வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த காவல்துறை அதிகாரி, வீடியோவில் காட்டப்பட்ட வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், தவறு நடந்ததற்கான ஆதாரம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

அடையாளம் காண முடியவில்லை...
இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி, விபச்சார தடுப்பு பிரிவின் உதவி ஆணையர், மேல் நடவடிக்கையைக் கைவிடுமாறு பரிந்துரை செய்து, நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்தார். பென் டிரைவில் பதிவாகியிருந்த குற்றச்சம்பவம் 2019ல் நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட சைபர் ஃபாரன்சிக் எக்ஸ்பர்ட் உதவியுடன், சந்தேகத்திற்குரிய இடத்திலிருந்து ஒரு டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரை (DVR) காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இருப்பினும், அந்தச் சாதனத்திலிருந்து அசல் பதிவையோ அல்லது அது தொடர்பான வேறு எந்தக் காட்சிகளையோ மீட்க முடியவில்லை. வீடியோவில் உள்ள சிறுமியை காவல்துறையினரால் அடையாளம் காண முடியவில்லை, சிசிடிவி காட்சிகள் இல்லை, சாந்தியின் அண்டை வீட்டாரிடமிருந்து வாக்குமூலங்கள் கிடைக்கவில்லை, விசாரணையின் போது, வீடியோவில் காணப்பட்ட நபர் தான் இல்லை என்று வீரமணி மறுத்தார்.

மேல் விசாரணைக்கு உத்தரவு
இதேபோல, ‘பாதிக்கப்பட்ட சிறுமியை தனக்குத் தெரியாது, வீடியோவில் காட்டப்பட்ட இடம் தனது வீட்டின் ஒரு பகுதி அல்ல,’ என்று சாந்தி கூறினார், எனவே, இந்த வழக்கில் 'மேற்கொண்டு நடவடிக்கை கைவிடப்பட்டது' என வகைப்படுத்தப்பட்டு, அந்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதாவது அன்றைய காவல்துறையின் அறிக்கை அனைத்தையும் மண்ணைப் போட்டு மூட முயன்றுள்ளது. இருப்பினும், சிறப்பு நீதிமன்றம் அந்த அறிக்கையை நிராகரித்து, மேல் விசாரணைக்கு உத்தரவிட்டது.

அடையாளம் காணப்பட்ட வீரமணி
இதனைத் தொடர்ந்து, 2026 ஜூலையில் விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த புதிய விசாரணையின் போது, காவல்துறையினர் தேனாம்பேட்டையில் உள்ள சாந்தியின் இல்லத்தில் சோதனை நடத்தி, ஒரு மின்னணு சாதனத்திலிருந்து பாலியல் வன்கொடுமையின் அசல் வீடியோ பதிவு, சாந்தியால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் ஒரு கடிதம் மற்றும் மொபைல்போன் பதிவுகளை கைப்பற்றினர். ஆதாரங்களை அழிக்க முயன்றதற்கான அறிகுறிகளையும் விசாரணை அதிகாரிகள் கண்டறிந்தனர். ஆகஸ்ட் 29 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், பென் டிரைவ் வீடியோவில் காணப்படும் நபர் வீரமணி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

ஆதாரங்கள் மீட்பு
வீரமணி, தேனாம்பேட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திரன் சிம்ஹன் பொறுப்பில் ஒப்படைத்து உள்ளார். பல சிறுமிகள் இந்த வீட்டிற்கு அழைத்து வரப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் கூறி உள்ளனர். சந்தேகத்திற்குரிய நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, சம்பவங்களுடன் தொடர்புடைய சிறுமிகளின் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை காவல்துறை மீட்டெடுத்தது.

தமிழ்நாட்டின் எப்ஸ்டீன்
ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு என்பது, அரசியல் அதிகார வர்க்க செல்வாக்கோடு பிஞ்சுகளை குதறும் ஓநாய்களின் வலைப் பின்னலை வெளிக்கொண்டு வந்த, அமெரிக்காவை உலுக்கிய வழக்காகும். ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவன் சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளி பெரும் செல்வாக்கு மிக்க நபர்களுக்கு இரையாக்கி வந்துள்ளான். வீரமணி பல ஆண்டுகளாக 12 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளைக் குறிவைத்து பாலியல் வன்முறை நிகழ்த்தி வந்துள்ளார். சிறுமிகளை ஹோட்டல்களில் நடக்கும் விருந்துகளுக்கு அழைத்து, அவர்களை சொகுசு கார்களில் அழைத்துச் சென்று, பின்னர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வீரமணி – எப்ஸ்டீன்: அதிகாரத்தின் இருண்ட பக்கம்
முந்தைய ஆட்சியில் விபச்சாரத் தடுப்பு பிரிவுக்கு, பென்டிரைவ் ஆதாரத்துடன் புகார் அனுப்பப்பட்டு உள்ளது. ஆதாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்காமல் குற்றவாளியை அடையாளம் காண முடியவில்லை என்று வழக்கை முடித்துக் கொள்ளலாம் என்று நீதிமன்றத்திலே சொல்லி இருக்கிறது அன்றைய காவல்துறை. ஆனால் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பத்மா, இதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். இல்லாவிட்டால் இந்த பயங்கரம் வெளி உலகிற்கு தெரியாமலே போயிருக்கும்.

விரைவான நீதி...
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி மட்டுமல்ல அழிக்கப்பட்ட நீதி என்று குறிப்பிட்டார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.

தாமதமாக வெளிச்சத்திற்கு வந்துள்ள வீரமணி விவகாரத்தில், பாதிக்கப்பட்ட சிறுகளின் பாதுகாப்பும், சுதந்திரமான விசாரணையும், விரைவான நீதியும் கிடைக்க வேண்டும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved