Also Watch
Read this
பாலியல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீது புகார்கள் குவியும் நிலையில் அவரை வழக்கில் இருந்து விடுவிக்க பெரும் சூழ்ச்சுமமே நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விபச்சார தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கு கோடிகள் கை மாறியதாகவும், பல கோல்மால் வேலைகள் செய்து வழக்கை முடித்து வைக்க முயன்றதாகவும் கூறப்படும் நிலையில் அந்த கோல்மால் வேலைகள் என்ன? அது பலிக்காமல் போனது எப்படி?

வெளிச்சத்திற்கு வந்த அசிங்கம்
கடந்த ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி சென்னை விபச்சார தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு ஒரு Pen Drive மற்றும் புகார் கடிதம் கிடைக்கப் பெற்றது. தனது அடையாளத்தை குறிப்பிட விரும்பாத நபரால் வழங்கப்பட்ட அந்த Pen Drive தான் ஒருவர் கல்வித்தந்தை என்ற போர்வையில் இருந்துகொண்டு ஆண்டுக்கணக்கில் அசிங்க வேலையில் ஈடுபட்டதையே வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.

வீடியோவில் 84 வயதான முதியவர்
ஒரு சிறுமியை வலுக்கட்டாயமாக முதியவர் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை Pen Driveல் பார்த்த காவல்துறையினருக்கு சிறுமியின் முகத்தை சரியாக அடையாளம் காண முடியவில்லை. ஆனால், 84 வயதான பிரபல கிரானைட் தொழிலதிபரும், ஜெம் குழும தலைவருமான வீரமணி தான் வன்கொடுமையில் ஈடுபட்ட முதியவர் என்பதும் கொடுமை நடந்த வீடு தேனாம்பேட்டையில் உள்ளது என்பதையும் கண்டறிந்தனர். அந்த வீட்டில் இருந்த மகேந்திர சிம்ஹன், சாந்தி தம்பதியை போலீசார் விசாரித்தபோதுதான் பல அதிர்ச்சி தகவல் வெளியானது.

வழக்கை முடித்து வைக்க முயற்சி
ஜெம் வீரமணி பல சிறுமிகளை வேட்டையாடியதும், அதற்காகவே மாத வாடகை ரூ.2 லட்சத்தில் வசதி வாய்ப்புடன் கூடிய ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்ததும், அந்த வீட்டில் மகேந்திர சிம்ஹன்-சாந்தி தம்பதியை பணிக்கு அமர்த்தியதும் தெரியவந்தது. வீரமணி கொடுத்த கட்டுக்கட்டான காந்தி நோட்டுகளுக்கு விசுவாசத்தை காட்டிய தம்பதியும் சிறுமிகளை விருந்தாக்கினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் பாய்ந்து எடுப்பார்கள், ஜெம் குழும தலைவரையும், அவரது சாம்ராஜ்ஜியத்தையும் அடியோடு தகர்ப்பார்கள் என எதிர்பார்த்தால் போதிய ஆதராங்கள் இல்லையெனக்கூறி வழக்கையே முடித்து வைக்க முயன்றதாக தெரிகிறது.

பின்னால் இன்ஸ்பெக்டர்...
அதற்கு பின்னால், அப்போதைய விபச்சார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கண்ணசைத்தால் போதும் எந்த வழக்கையும் காணாமல்போகச் செய்யும் அளவுக்கு கடந்த ஆட்சியில் அரசியலில் பவர்ஃபுல்லாக இருந்த ஒரு முக்கியப்புள்ளியின் நண்பர் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமாரை அணுகியதாகவும், வீரமணியை வழக்கில் இருந்து விடுவிக்க பல கோடிகளை கை மாற்றியதாக கூறப்படுகிறது. அதனால், சிறுமியை அடையாளம் தெரியவில்லை, போதிய ஆதாரம் இல்லை, அதனால் வழக்கை முடித்துவிடலாம் என விபச்சார தடுப்பு பிரிவின் ஏசியான யாஸ்மினின் மூளையை மகேஷ்குமார் கழுவியதாக சொல்லப்படுகிறது.

வழக்கை முடிக்க...
இதனிடையே கடந்த ஜனவரி மாதம் விபச்சார தடுப்பு பிரிவிலிருந்து ஏர்போர்ட் காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர் மகேஷ் குமாரை மாற்ற டிரான்ஸ்பர் ஆர்டர் வந்துள்ளது. ஆனால், ஒருமாதகாலமாக ஏர்போர்ட் காவல் நிலையத்திற்கு செல்லாமல் வீரமணி வழக்கை முடிப்பதற்காகவே மகேஷ்குமார் விபச்சார தடுப்பு பிரிவிலேயே பணியை தொடர்ந்துள்ளார்.

சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் வழக்கை முடித்து வைப்பதற்காக மனுதாக்கல் செய்தபோது FIRல் வீரமணி பெயரை குறிப்பிட்டிருக்கும்போது வழக்கை எப்படி முடித்து வைக்க முடியும்? என கேள்விகளால் கேட்டைப்போட்ட நீதிபதிகளின் கண்ணில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளில் பல குழப்பங்கள் இருந்ததும் தென்பட்டது.

சிறப்பு நீதிமன்றம் அதிரடி
பொதுவாக ஒரு வழக்கை முடித்து வைக்க உதவி காவல் ஆணையர், துணை காவல் ஆணையர், இணை காவல் ஆணையர், கூடுதல் காவல் ஆணையர் என அத்தனைபேரும் அறிக்கையை பரிசீலித்து, ஒப்புதல் வழங்கி, பின்னர் வழக்கு கோப்பு சட்ட ஆலோசனைக்காக சம்பந்தப்பட்ட அரசு வழக்கறிஞர் அல்லது உதவி அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர்தான், சட்ட ஆலோசனையின் அடிப்படையில் உரிய அறிக்கை தயாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகார வரம்பிற்குட்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். ஆனால், அப்படி எந்த நடைமுறையும் பின்பற்றப்படவில்லை.

வீரமணி கைது
அதனால் வழக்கை மீண்டும் தூசிதட்டி வீரமணி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, புழல் மத்திய சிறை வளாகத்திலேயே வீரமணியை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. அதோடு, மகேந்திர சிம்ஹன், சாந்தியையும் கஸ்டடியில் எடுக்க காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுஒருபுறமிருக்க, வீரமணி விவகாரத்தில் மகேஷ்குமார் செய்த சூட்சுமத்தில் தான் தெரியாமல் சிக்கிவிட்டதாக யாஸ்மின் புலம்பிக் கொண்டிருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved