Also Watch
Read this
தமிழ்நாட்டில் தொடர்ந்து மின்வெட்டு புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத்தின் தலையகத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய முதலமைச்சர் விஜய், மின் தடைக்கான காரணம், எதிர்கால மின் தேவை, மின் உற்பத்தி உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மின்வெட்டு பிரச்னையால்...
தமிழ்நாட்டில் தவெக ஆட்சியமைந்ததற்கு பிறகு ஆங்காங்கே மின்வெட்டு பிரச்னையால் மக்கள் அவதியுற்று போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில், யாரையும் நம்பாமல் மாநிலத்தின் முதலமைச்சரே நேரடியாக மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு செய்தது பலரது புருவத்தையும் உயர்த்த வைத்திருக்கிறது.

அதிகாரிகள் அலுவலர்களுடன் தீவிர ஆலோசனை
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய், மின் வாரிய கூட்ட அரங்கில் மின்சாரத்துறை அமைச்சர், அதிகாரிகள் அலுவலர்களுடன் தீவிர ஆலோசனையை மேற்கொண்டார்.

மாநிலத்தின் தற்போதைய மின் தேவை, மின் உற்பத்தி, பற்றாக்குறை, மின்சாரத்தை பெறுவதில் உள்ள கட்டுப்பாடுகள், நிலக்கரி கிடைப்பதில் ஏற்படும் சவால்கள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் முதலமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.

வெப்பம் அதிகரிக்கும்...
எல் நினோ தாக்கத்தால் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு வரை வெப்பம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டிருப்பதால், அதற்கேற்றார் போல் மின் தேவையும் அதிகரிக்கும் என முதல்வர் கூறவும், அதுதொடர்பாகவும் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடுகளைப் பற்றி அதிகாரிகள் விளக்கினர்.

மக்களுக்கு தடையற்ற தரமான மற்றும் நம்பகமான மின்சார சேவையை வழங்குவதுடன், மின் நுகர்வோர் சேவையை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு
தொடர்ந்து கட்டுப்பாட்டு அறை மற்றும் முக்கிய மையங்களை நேரில் பார்வையிட்ட முதலமைச்சர், அதன் செயல்பாடுகள் குறித்த அதிகாரிகளின் விளக்கங்களை கூர்ந்து கவனித்தார்.

ஆய்வினை முடித்துவிட்டு வெளியே வந்த முதலமைச்சர் விஜய், தன்னை காண்பதற்காக கால்கடுக்க காத்திருந்த மக்களின் அருகில் சென்று கையசைத்து அவர்களை உற்சாகப்படுத்திவிட்டு புறப்பட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved