news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

சரித்திரம் படைத்த தமிழகத்தின் "தாய்மாமன்"

ஒரு பைசா டெண்டரின் பின்னணி

55

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சரித்திரம் படைத்த தமிழகத்தின் தாய்மாமன் ஜோசப் விஜய். லாபமே இல்லாத 1 பைசா டெண்டர் மூலம் மாஸ் பிராண்டிங் செய்யும் பிரபல நகை நிறுவனங்கள் குறித்து பார்க்கலாம்...

வெறும் ஒரு பைசா...
தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் தகுதியுடைய குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், இந்தத் திட்டத்தின் பின்னணியில் அனைவரையும் புருவம் உயர்த்த வைத்துள்ள ஒரு சுவாரஸ்யமான வணிக பின்னணி வெளியாகியுள்ளது. முன்னணி நகை நிறுவனங்களான ஜோய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் ஆகிய இரண்டும், எந்தவித செய்கூலி மற்றும் சேதாரமும் இன்றி, வெறும் 1 பைசா கட்டணத்தில் இந்த தங்க மோதிரங்களை தயாரித்து வழங்க ஒப்பந்தம் செய்துள்ளன.

வெளிப்படையான டெண்டர்
கோடிக்கணக்கில் வர்த்தகம் செய்யும் இந்த நிறுவனங்கள், எந்தவொரு நேரடி லாபமும் இல்லாமல் இந்த ஒப்பந்தத்திற்கு சம்மதித்தது எப்படி? இதன் பின்னணியில் உள்ள அதிநவீன பிராண்டிங் வியூகம், தமிழகத்தின் பிறப்பு விகித புள்ளிவிவரங்கள் மற்றும் நிறுவனங்களின் பொருளாதாரக் கணிப்புகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு 22 கேரட் தூய்மையிலான 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் இந்த பிரம்மாண்ட திட்டத்திற்காக, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகமான TNMSC சார்பில் ஆன்லைன் மூலமாக வெளிப்படையான டெண்டர் கோரப்பட்டது.

ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி
இதில், நாட்டின் முன்னணி 11 நகை நிறுவனங்கள் கலந்துகொண்டன. அரசு வழங்கும் தங்கத்திற்கான சந்தைத் தொகையைத் தவிர்த்து, மோதிரங்களை உருவாக்குவதற்கான செய்கூலி, சேதாரம், பி.ஐ.எஸ். ஹால்மார்க் முத்திரைக் கட்டணம், காப்பீடு மற்றும் பேக்கிங் செலவுகள் என அனைத்திற்கும் சேர்த்து ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் வெறும் 1 பைசா மட்டுமே கட்டணமாகக் குறிப்பிட்டு முதலிடத்தைப் பிடித்தது.
தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்ட விதிகளின்படி, கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனமும் இந்த நிபந்தனைக்குச் சம்மதம் தெரிவிக்கவே, இரு நிறுவனங்களுக்கும் 70:30 என்ற விகிதத்தில் பணி ஆணை வழங்கப்பட்டது.

சமூக பொறுப்புணர்வு
முதற்கட்டமாக, முதலமைச்சரின் படம் மற்றும் அரசு முத்திரையுடன் கூடிய பிரத்யேக அட்டைகளில் 89,955 தங்க மோதிரங்கள் தயாரிக்கப்பட்டு, அதிக பிரசவங்கள் நிகழும் 107 தாய்சேய் நல மையங்களுக்கு விநியோகிக்க தயாராக உள்ளன. இந்தத் திட்டத்தில் தாங்கள் பங்கேற்றது வணிக லாபத்திற்காக அல்ல என்றும், ஏழை எளிய மக்களின் நலன் சார்ந்த சமூகப் பொறுப்புணர்வின் அடிப்படையில்தான் என்றும் ஜோய் ஆலுக்காஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமும் 2,400 குழந்தைகள்...
இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின் சந்தைப் பயன்பாட்டையும் இலக்கையும் புரிந்து கொள்ள தமிழகத்தின் விரிவான பிறப்பு தரவுகளை பார்ப்பது அவசியமாகிறது. தமிழக அரசின் பொது சுகாதாரத் துறையின் சுகாதார மேலாண்மை தகவல் முறைமை மற்றும் சிவில் பதிவு முறைமை தரவுகளின்படி, தமிழ்நாட்டில் ஆண்டிற்கு சராசரியாக 8.41 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இதன் அடிப்படையில் கணக்கிட்டால், மாநிலத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 2,300 முதல் 2,400 குழந்தைகள் பிறக்கின்றன.

அரசு மருத்துவமனைகளில்...
இதில் ஒட்டுமொத்த மருத்துவமனைப் பிரசவங்களில் சுமார் 60% முதல் 62% பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளிலும், மீதமுள்ள 38% முதல் 40% பிரசவங்கள் தனியார் மருத்துவமனைகளிலும் நிகழ்கின்றன. அதாவது நாளொன்றிற்கு அரசு மருத்துவமனைகளில் மட்டும் சுமார் 1,400 முதல் 1,500 குழந்தைகளும், தனியார் மருத்துவமனைகளில் 900 முதல் 1,000 குழந்தைகளும் பிறக்கின்றன. பாலினப் பிரிவின்படி, தினமும் சராசரியாக 1,190 முதல் 1,200 ஆண் குழந்தைகளும், 1,110 முதல் 1,120 பெண் குழந்தைகளும் பிறக்கின்றன.

சென்னையில்...
மாவட்ட வாரியாகப் பார்க்கும்போது, தலைநகரான சென்னை பெருநகரப் பகுதியில் நாளொன்றிற்கு அதிகபட்சமாக 240 முதல் 250 பிறப்புகள் பதிவாகின்றன. தொடர்ந்து கோவையில் 120-130, மதுரையில் 110-120, திருச்சியில் 100-110 மற்றும் சேலம் 90-100 குழந்தைகள் வீதம் என இந்த மாவட்டங்கள் அதிக பிறப்பு எண்ணிக்கையைக் கொண்டுள்ளன. அரியலூர், பெரம்பலூர் போன்ற சிறிய மாவட்டங்களில் நாளொன்றிற்கு 20 முதல் 30 பிறப்புகள் வரை நிகழ்கின்றன.

விளம்பரத்திற்கே ரூ.500 கோடி
வணிக ரீதியாக பார்த்தால், எந்தவொரு லாபமும் இன்றி 1 பைசாவிற்கு வேலை செய்து தருவது நஷ்டம் போலத் தோன்றினாலும், இது கார்ப்பரேட் உலகில் "லாஸ் லீடர் மார்க்கெட்டிங்" மற்றும் "லைஃப்டைம் கஸ்டமர் வேல்யூ" என அழைக்கப்படும் மாபெரும் பிராண்டிங் வியூகமாகும். பொதுவாக, இந்தியாவில் முன்னணி ரீடெய்ல் நகை பிராண்டுகள் தங்கள் விளம்பரம் மற்றும் பிராண்டிங்கிற்காக மொத்த வருவாயில் 2% முதல் 3.5% வரை செலவிடுகின்றன. இதன்படி கல்யாண் ஜூவல்லர்ஸ் மற்றும் ஜோய் ஆலுக்காஸ் ஆகிய நிறுவனங்கள் ஆண்டுதோறும் ₹300 கோடி முதல் ₹500 கோடிக்கும் அதிகமாக விளம்பரத்திற்காகச் செலவு செய்கின்றன.

ஆண்டுக்கு 5 லட்சம்...
இந்த அரசுத் திட்டத்தின் மூலம், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அட்டையில் முதலமைச்சரின் படத்தோடு இந்த நகை நிறுவனங்களின் பெயரும் அச்சிடப்பட்டு, நேரடியாக ஆண்டிற்கு சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் கைகளுக்குச் சென்று சேர்கிறது.
வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று அவர்களின் மன உணர்வுகளோடு கலக்கும் இந்த வகையான பிராண்டிங்கை வழக்கமான தொலைக்காட்சி அல்லது பேனர் விளம்பரங்களால் செய்ய முடியாது. இந்த அளவிலான மக்களிடம் சென்றடைதலை வழக்கமான விளம்பரங்கள் மூலம் அடைய வேண்டுமென்றால், இந்த நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் கூடுதலாக ₹60 கோடி முதல் ₹100 கோடி வரை செலவாகும்.

சில்லறை விற்பனை அதிகரிக்கும்
அரசுடன் கைகோர்த்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், அவ்வளவு பெரிய தொகை விளம்பரச் செலவில் அப்படியே சேமிக்கப்படுகிறது. மேலும், குழந்தையின் பிறப்பின் போது அரசு மற்றும் இந்த பிராண்டுகள் மீது உருவாகும் நன்மதிப்பு, பின்னாளில் அந்த குடும்பங்கள் நகை வாங்கும்போது இவர்களது ஷோரூம்களைத் தேடி வரச் செய்யும். இதன் மூலம் நிறுவனங்களின் சில்லறை விற்பனை 4% முதல் 6% வரை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது.

நிதி, தொழில்நுட்ப வலிமை
தங்கக் கையிருப்பு மற்றும் உற்பத்தி மேலாண்மையைப் பொறுத்தவரை, ஜோய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் ஆகிய இரு நிறுவனங்களுமே இந்திய அளவில் மாபெரும் புல்லியன்-தங்கக் கடன் வசதிகளை வைத்துள்ளன. இந்த நிறுவனங்களிடம் எப்போதும் பல நூறு கிலோ அளவிலான தங்கக் கையிருப்பும், சர்வதேச அளவில் தங்கத்தின் விலையேற்ற அபாயத்தைத் தடுக்கும் 'ஹெட்ஜிங்' உத்திகளும் புழக்கத்தில் உள்ளன. இதனால், சந்தையில் தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்தாலும், அரசால் நிர்ணயிக்கப்படும் அசல் தங்கத்திற்கான தொகையைப் பெற்றுக் கொண்டு, தங்களின் இருப்பு தங்கத்தைப் பயன்படுத்தி தடையின்றி 1 கிராம் மோதிரங்களைத் தயாரித்து வழங்கும் நிதி மற்றும் தொழில்நுட்ப வலிமை இவர்களிடம் உள்ளது.

ஆண்டுக்கு ரூ.55,000 கோடி
தமிழ்நாட்டின் மொத்த ஆபரணத் தங்கச் சந்தை ஆண்டிற்கு தோராயமாக ₹45,000 கோடி முதல் ₹55,000 கோடி வரை வர்த்தகமாகிறது. இதில் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டிற்கு சுமார் ₹4,000 கோடி முதல் ₹5,000 கோடியும், ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் சுமார் ₹3,000 கோடி முதல் ₹4,000 கோடியும் வருவாயாக ஈட்டுகின்றன. அக்சய திருதியை, தீபாவளி போன்ற பண்டிகை மற்றும் முகூர்த்த சீசன் காலங்களில் நாளொன்றுக்கு ₹25 கோடி முதல் ₹40 கோடி வரை விற்பனை நடக்கும் நிலையில், சாதாரண நாள், சீசன் காலங்களில் இது ₹8 கோடி முதல் ₹15 கோடியாகக் குறைகிறது.

வணிக சங்கிலி, ஸ்திரத்தன்மை
சீசன் இல்லாத மந்தமான காலங்களிலும், அரசு வழங்கும் இந்த 1 கிராம் தங்க மோதிர திட்டத்தின் மூலம் நிறுவனங்களின் உற்பத்தி ஆலைகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும். இது நிறுவனங்களின் நிலையான இயக்கச் செலவைக் குறைத்து, தொழிலாளர்களுக்குத் தொடர் வேலையையும், வணிகச் சங்கிலியில் ஒரு மிகப்பெரிய ஸ்திரத்தன்மையையும் வழங்குகிறது.

மிகச்சிறந்த மார்க்கெட்டிங்
வணிகப் போட்டியும் விளம்பரச் செலவுகளும் உச்சத்தில் இருக்கும் இன்றைய நவீன காலகட்டத்தில், அரசின் சமூக நலத் திட்டத்தோடு தங்களை இணைத்துக் கொண்டு, மக்கள் மனதையும் வென்று, அதே வேளையில் பல கோடிகளை பிராண்டிங் செலவில் சேமித்துள்ளன இந்த நகை நிறுவனங்கள். சமூகப் பொறுப்புணர்வு என்ற போர்வையில் சாதிக்கப்பட்ட இந்த சாதுரியமான வர்த்தக நகர்வு, இந்திய சில்லறை வணிக வரலாற்றில் ஒரு மிகச் சிறந்த மார்க்கெட்டிங் பாடமாகப் பார்க்கப்படுகிறது.

Related Link
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மலையேற்றத்தின்போது திடீர் பனிச்சரிவு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved