Also Watch
Read this

Caviar நிறுவனத்தின் புதிய Liquid Metal iPhone அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 925 Sterling Silver-ல் உருவாக்கப்பட்டுள்ள இந்த போன் உலகம் முழுவதும் 17 போன்கள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளதாகவும், இதன் விலை சுமாராக ரூ.18 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

புதிய சொகுசு ஐபோன்
ஆடம்பர ஸ்மார்ட்போன் நிறுவனமான Caviar, ஆப்பிளின் மடிக்கக்கூடிய ஐபோன் மாடலான 'iPhone Duo'வை அடிப்படையாகக் கொண்டு புதிய 'Liquid Metal' பதிப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. திரவ உலோகம் உறைந்து போனால் எப்படி இருக்குமோ, அத்தகைய பிரத்யேக வடிவமைப்பை இந்த போனின் பின்புறம் கொண்டுள்ளது.

முப்பரிமாண வடிவில்...
இந்த போனின் ஒட்டுமொத்த பின்புற பேனலும் உயர்தர 925 ஸ்டெர்லிங் சில்வர் உலோகம் கொண்டு முழுமையாக செதுக்கப்பட்டு உள்ளது. இதன் மெட்டல் பேனல் கண்ணாடி போல பாலிஷ் செய்யப்பட்டு, ஒளியின் கோணத்திற்கு ஏற்ப நகர்வது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்துகிறது. மடிக்கக்கூடிய ஐபோன் திறக்கப்பட்டு மூடப்படும் போது ஏற்படும் மாற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த வடிவம் கொடுக்கப்பட்டு உள்ளது. வழக்கமான ஆப்பிள் லோகோவிற்கு பதிலாக, ஸ்டெர்லிங் சில்வர் உலோகம் கொண்டு முப்பரிமாண வடிவில் 3D லோகோ பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு உள்ளது.

17 போன்கள் மட்டுமே
சாதாரண iPhone Duo மாடலே இந்தியாவில் சுமார் 2,99,900 ரூபாய் விலையில் விற்கப்படும் நிலையில், Caviar நிறுவனத்தின் இந்த பதிப்பு உலகளாவிய கோடீஸ்வரர்கள் மற்றும் சேகரிப்பாளர்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த சொகுசு போன் உலகம் முழுவதும் வெறும் 17 மட்டுமே தயாரிக்கப்படுகிறது.
விலை எவ்வளவு?
இந்திய சந்தையில், இதன் சேமிப்புத் திறனைப் பொறுத்து விலை மாறுபடுகிறது. 256 GB பதிப்பு இந்திய மதிப்பில் தோராயமாக 15.75 லட்சம் முதல் 18 லட்சம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2 TB பதிப்பு டாப் மாடல் வரி மற்றும் பிற கட்டணங்கள் தவிர்த்து, தோராயமாக 20 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved