Also Watch
Read this
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் முன்னெடுத்ததால் தான் பண்டைய நாளந்தா இன்று சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவைபோல மீண்டும் சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறது. கலாமின் கனவால் அசைக்க முடியாத விருட்சமாக உருவெடுத்துள்ள இந்த சர்வதேச கல்வி மையத்தின் சிறப்புகள் என்ன? அறிவுப்பசியில் உள்ள மாணவர்கள் நாளந்தாவால் அடையும் இலக்குகள் எவை? என்பது குறித்து இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.

தேசிய முக்கியத்துவம்
பீகார் மாநிலம், ராஜ்கிரில் அமைந்துள்ள புதிய நாளந்தா பல்கலைக்கழகம் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் புகழ்பெற்ற கல்வி மையமாக விளங்கிய பண்டைய நாளந்தாவின் அறிவுப் பாரம்பரியத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

பண்டைய நாளந்தாவில் இந்தியா மட்டுமின்றி சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்றனர். யுவான் சுவாங் உள்ளிட்ட புகழ்பெற்ற அறிஞர்களுடன் நாளந்தாவுக்கு வரலாற்றுத் தொடர்பு உள்ளது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த பண்டைய நாளந்தாவின் பெருமையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தை முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்தான் 2006ஆம் ஆண்டு முன்வைத்தார். அதன் விளைவாக 2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நாளந்தா பல்கலைக்கழக சட்டம் நிறைவேற்றப்பட்டு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக உருவாக்கப்பட்டது.

புதிய பல்கலைக்கழகம்
2014ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கையை தொடங்கிய புதிய நாளந்தா பல்கலைக்கழகம் வரலாறு மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட குறைந்த எண்ணிக்கையிலான பாடப்பிரிவுகளுடன் தொடங்கி தற்போது பல்வேறு முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்கும் சர்வதேச பல்கலைக்கழகமாக வளர்ந்துள்ளது.

சுமார் 455 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட நிரந்தர வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நாளந்தா பல்கலைக்கழகம் 2024 ஜூன் 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது.

தற்போது இந்த பல்கலைக்கழகத்தில் வரலாற்று ஆய்வு, புத்த மதம், தத்துவம் மற்றும் ஒப்பீட்டு மதங்கள், சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல், சர்வதேச உறவுகள் மற்றும் அமைதி ஆய்வு, மொழி மற்றும் இலக்கியம், மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு கல்விப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த...
அதேபோல், 2026ஆம் ஆண்டுக்கான சேர்க்கையில் தொல்லியல், பொருளாதாரம், கணிதம், இந்து ஆய்வு, உலக இலக்கியம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை ஆய்வு, டேட்டா சயின்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு, சமஸ்கிருதம் உள்ளிட்ட படிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

மேலும், முதுநிலை படிப்புகளுடன் Ph.D., Post-Doctoral மற்றும் குறுகிய கால படிப்புகளும் வழங்கப்படுகின்றன. புதிய நாளந்தாவின் மிகப்பெரிய சிறப்புகளில் ஒன்றே ஜப்பான், சீனா, இலங்கை, வங்காளதேசம், நேபாளம், பூடான், தென்கொரியா, பெரு, பிரேசில், வியட்நாம், நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருவது தான். இதனால் ஒரே வளாகத்தில் பல்வேறு நாடுகள், மொழிகள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றாக கல்வி கற்கும் சூழல் உருவாகியுள்ளது.

பசுமை வளாகம்
வகுப்பறை கல்வியுடன் ஆசிய வரலாறு, புத்த மதம், தத்துவம், சுற்றுச்சூழல், அமைதி ஆய்வு, சர்வதேச உறவுகள் மற்றும் வங்காள விரிகுடா தொடர்பான ஆய்வுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், புதிய வளாகத்தின் மற்றொரு சிறப்பு அதன் சுற்றுச்சூழல் நட்பு கட்டமைப்பு. வளாகத்தை Net Zero Energy, Net Zero Water, Net Zero Waste மற்றும் குறைந்த கார்பன் வெளியேற்றம் கொண்ட பசுமை வளாகமாக உருவாக்கும் நோக்கத்துடன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புத்துயிர் பெற்றது
நாளந்தாவை ஆசியாவையும் உலகின் பல்வேறு பகுதிகளையும் இணைக்கும் முக்கியமான சர்வதேச கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாக உருவாக்குவதே எதிர்கால இலக்கு. ஒரு காலத்தில் ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்களையும் அறிஞர்களையும் ஈர்த்த நாளந்தா, இன்று புதிய வடிவில் மீண்டும் சர்வதேச மாணவர்களை வரவேற்கிறது.

அப்துல்கலாமின் கனவில் தொடங்கிய இந்த முயற்சி, இன்று 30க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றாக கல்வி கற்கும் சர்வதேச அறிவு மையமாக ராஜ்கிரில் புதிய வரலாற்றை எழுதுகிறது. 1500 ஆண்டுகளுக்கு முன்பு அறிவின் ஒளியை உலகம் முழுவதும் பரப்பிய நாளந்தா, காலத்தின் சதியால் தனது பயணத்தை நிறுத்தியது. ஆனால், தமிழரான கலாமின் கனவும், முயற்சியும் இன்று நாளந்தாவுக்கு புதிய உயிர் கொடுத்துள்ளது.

எந்த சக்தியாலும்...
சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவை போல, நாளந்தா மீண்டும் சிறகடித்து பறக்கத் தொடங்கியுள்ளது. இந்த முறை முன்பைவிட பல மடங்கு வேகத்துடன், உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அறிவைப் பகிரும் மையமாக உருவெடுத்துள்ளது.

வேடந்தாங்கலில் பல்வேறு நாடுகளிலிருந்து பறவைகள் வந்து இளைப்பாறிச் செல்வதைப் போல, அறிவுப்பசியுடன் தேடி வரும் மாணவர்களுக்கு நாளந்தா அறிவை வாரி வழங்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

அறிவின் தாயகமாக மீண்டும் உயர்ந்து நிற்கும் நாளந்தாவின் இந்தப் பயணத்தை இனி எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே நிதர்சனம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved