news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news புத்தர் தியானம் செய்த போதி மரம், தானாக விழுந்தால் மட்டுமே இலைகூட நமக்கு
tv

Also Watch

புத்தர் தியானம் செய்த போதி மரம், தானாக விழுந்தால் மட்டுமே இலைகூட நமக்கு

மரத்தடியில் பக்தர்கள், ஆலயத்தின் அற்புதம்

28

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

உலகம் முழுவதும் உள்ள புத்த மதத்தினரால் புனித தலமாக போற்றப்படும் பீகார் மாநிலத்தின் புத்தகயாவில் அமைந்துள்ள மகாபோதி ஆலயம் மற்றும் அங்குள்ள போதி மரம் முதல் அதில் இருந்து உதிர்ந்துவிழும் இலைவரை எமது செய்தியாளர் ராஜேஷ்குமார் நேரில் விவரித்துள்ளார். ஆலயத்தின் அற்புதங்கள், கட்டடங்கள் மற்றும் சிலையின் தனித்தன்மை, போதி மர இலைக்கான சிறப்புகள் ஆகியவை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

தவம் இருக்கும்...
இது, சாதாரண அரச மரம் கிடையாது. புத்தருக்கு ஞானம் கொடுத்த போதி மரம். அதனால்தான் அதில் இருந்து ஒரு இலையாவது கீழே விழுந்து விடாதா? அதனை காலம் முழுக்க வணங்கி விடமாட்டோமா? போதி மரத்திற்கு அடியில் அமர்ந்து ஞானம் செய்யும் நமக்கும் கிடைத்து விடாதா? என பல நாட்டு மக்களும் தவம் கிடக்கின்றனர்.

போதிமரம்...
சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு அரண்மனை சுகங்களை அனுபவித்தவர் தான் இளவரசர் சித்தார்த்தர். மனித துயரங்களுக்கு என்ன காரணம்? என்ற கேள்வி அவரை உலுக்க, அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்த ஒரு துறவியை கண்டார்.

துன்பங்களில் இருந்தும், பிறவி பிணியிலிருந்தும் விடுபட துறவறமே வழி என்பது இளவரசருக்கு புரிந்தது.

தனது 29ஆவது வயதிலேயே அரண்மனை வாழ்க்கையைவிட்டு வெளியேறி பீகாரின் கயா பகுதியில் உள்ள ஒரு அரச மரத்தின் கீழ் கடுமையான தவம்புரிந்து, தனது 35ஆம் வயதில் ஞானம் பெற்றார்.

அதன்பிறகே அது போதி மரம் என்றானது. அவரும், புத்தர் என்று அழைக்கப்பட்டார்.

290 கிலோ தங்கத்தில்...
50 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் பிரதான கட்டமைப்பு கம்பீரமாக காட்சியளித்து ஆலயத்தின் அழகை கூட்டுகிறது என்றால் அதன் பிரம்மாண்ட சிகரமும் கண்களை எடுக்கவிடமுடியாத அளவுக்கு ஈர்க்கும் வகையிலேயே உள்ளது. அதிலும், தங்கத்தகடுகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ள ஆலயத்தின் உச்சிப்பகுதி ஜொலிஜொலித்து பக்தர்களை வெகுவாக கவர்கிறது. தாய்லாந்து அரச குடும்பம் மற்றும் பக்தர்களின் பங்களிப்புடன் சுமார் 290 கிலோ தங்கம் உச்சிப்பகுதிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூமியே சாட்சி
அதேபோல், ஆலயத்தின் கருவறையில் தங்க நிறத்தில் புத்தர் சிலையும், அவர் ஞானம் பெற்றதாக நம்பப்படும் போதி மரமும், வஜ்ராசனமும் அருகிலேயே அமைந்துள்ளன. அதில், புத்தர் தனது வலது கையால் பூமியைத் தொட்டபடி அமர்ந்திருக்கும் பூமிஸ்பர்ஷ முத்திரைதான் இந்த சிலையின் தனிச்சிறப்பே. புத்தர், தான் பெற்ற ஞானத்திற்கு பூமியையே சாட்சியாக அழைத்ததாகவும், அவர் ஞானம் பெற்ற பிறகு தொடர்ந்து 7 வாரங்கள் வெவ்வேறு இடங்களில் தங்கி தியானம் செய்ததாகவும் புத்த மத மரபு கூறுகிறது.


புத்தரின் ஆசிர்வாதம்...
புத்தரின் 7 வாரங்களுடன் தொடர்புடைய இந்த புனித இடங்களுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து வணங்கி செல்கின்றனர். மந்திரங்களை உச்சரித்தும், போதி மரத்தை சுற்றியும், தரையில் முழுமையாக விழுந்தும், மெழுகுவர்த்தியை ஏற்றியும், அமைதியாக தியானம் செய்தும் ஒவ்வொரு நாட்டு பக்தர்களும் ஒவ்வொரு வழியில் வணங்குகின்றனர். ஆனாலும், புத்தர் முதல் வாரம் தியானம் செய்த போதி மரம் மற்றும் அதில் இருந்து விழும் இலைக்கான மகத்துவமே தனித்துவம்தான். புத்த பகவானின் ஆசிர்வாதம் இந்த இலையில் இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

ஆண்டுக்கு 30 லட்சம் பக்தர்கள்
போதி மரத்தின் இதய வடிவ இலைகள், இதயத்திலிருந்து கிடைக்கும் அமைதி, ஞானம் மற்றும் மகிழ்ச்சியை குறிப்பிடுவதோடு விழிப்புணர்வின் புனிதச் சின்னமாக மதிக்கப்படுகிறது. இந்த இலைகள் கைக்கெட்டிய தூரத்திலேயே இருந்தாலும் பக்தர்களுக்கு பறிக்க அனுமதி கிடையாது. தானாக இலை விழுந்தால் மட்டுமே எடுத்துக் கொள்ளலாம்.
ஆண்டுதோறும் 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களை ஈர்க்கும் ஒரே மரம் இந்த போதி மரம்தான். சேதம் எதுவும் ஏற்படாமலிருக்க மொத்தம் 12 இரும்பு தூண்களால் மரம் தாங்கப்படுகிறது.

வாழ்வின் உண்மையான நோக்கம்
யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள மகாபோதி ஆலயத்தை வெறும் மத வழிபாட்டு தலம் என்ற குறுகிய வட்டத்திற்குள் அடைத்துவிட முடியாது. வரலாறு, கட்டிடக்கலை, ஆன்மீகம், தத்துவம் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைக்கும் இடம் என்பதே உண்மை. அதேபோல் புத்தகயா வருவதை வெறும் சுற்றுலா பயணம் என்று மட்டுமே சொல்லிவிட முடியாது. ஆசைகள், வாழ்க்கையின் உண்மையான நோக்கம், மன அமைதி ஆகியவை குறித்து நம்மை நாமே கேள்வி கேட்க வைக்கும் ஒரு மனப்பயணம் அல்லது நல்ல மனமாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பயணமாவே திகழும்.

ஒருமுறையாவது...
நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் வந்து எத்தனையோ மக்கள் புனித பூமியின் காற்றை சுவாசித்துவிட்டு செல்லும்போது இந்தியாவிலேயே வசிக்கும் நாம் இந்த புனித தலத்தை நேரில் சென்று பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் ஒருமுறையாவது சென்று வரலாம். நியூஸ் தமிழ் செய்திகளுக்காக புத்தகயாவிலிருந்து தலைமை செய்தியாளர் ராஜேஷ்குமார்...

Related Link
தங்கங்களுக்கு கிடைத்த தாய்மாமனின் தங்கம், தாய்மார்களின் உடன்பிறப்பாக மாறிய முதல்வர்

தங்கங்களுக்கு கிடைத்த தாய்மாமனின் தங்கம், தாய்மார்களின் உடன்பிறப்பாக மாறிய முதல்வர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாராபுரம் இடைத்தேர்தல் ஆளும் கட்சிக்கு சவாலா? ஆக்‌ஷனில் இறங்கிய முதல்வர்

23
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved