Also Watch
Read this
முதலமைச்சர் விஜய் அரசியல் பிரவேசத்துக்கு பின்னர் நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களது ரசிகர் மன்றங்களை தூசி தட்டி, ரசிகர்களை திரட்டி ஆலோசனை நடத்துவது, அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.

சின்னத்திரையில் இருந்து...
திரையில் ஜொலிக்க வேண்டுமென்ற ஆசையில் திருச்சியிலிருந்து பையை தூக்கி கொண்டு வந்து, விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்து, மிமிக்ரி செய்து, அதன் பின் ஒரு நடிகராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக வளர்ந்தவர் தான் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் காமெடி திரைப்படங்களை தேர்ந்தெடுத்து பலரது மனதில் செல்லப் பிள்ளையாக மாறிய சிவகார்த்திகேயன், பின்னாளில் சீரியஸ் திரைப்படங்களி ல் நடித்து திரையுலகில் நங்கூரமிட்டார். அவரது அபரிமிதமான வளர்ச்சியை கண்டு வியக்காதவர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சிவகார்த்திகேயனின் plus point-ஏ அவரது காமெடி தான் என்பதால் குழந்தைகளை கவர்ந்து தன் கைக்குளே வைத்திருந்தார். அதனை விருது விழா ஒன்றில் விஜயே புகழ்ந்திருப்பார்.

ரசிகர்களுடன் சந்திப்பு
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பதை, சிவகார்த்திகேயன் வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி கடந்த 2024ஆம் ஆண்டு விஜய் ஸ்டைலில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் சிவகார்த்திகேயன் சந்திப்பு நடத்துகிறார் என்ற பேச்சு அடிபட்டு வந்தது. இந்நிலையில் இந்தாண்டும் சென்னை போரூர் அருகே பரணிபுத்தூர் பகுதியில் சிவகார்க்கேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கென பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலரும், வேன்கள், கார்கள், பேருந்துகள் என சென்னைக்கு படையெடுத்தனர்.

அரசியல் மாநாடு போல்...
சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் 2000த்திற்கும் மேற்பட்டோர் இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றதாக சொல்லப்படுகிறது. இதில் உரையாற்றிய சிவகார்த்திகேயன் பேச்சில் அரசியல் குறித்த வாடை எதுவும் இல்லை என கூறப்பட்டாலும், விழா மேடை, முகப்பு, கட்அவுட் உள்ளிட்ட விஷயங்கள் அரசியல் மாநாடு போல பிரம்மாண்டமாக இருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற நிர்வாகிகளும் வெள்ளை சட்டை அணிந்து, கட்சி தொண்டர்கள் போல பங்கேற்றனர்.

அரசியலுக்கு ஆயத்தம்?
நற்பணி இயக்கத்தை பெரிதளவில் வளர்க்க வேண்டும், செல்போன்கள் பயன்படுத்துவதை குறைத்துக் கொண்டு புத்தக வாசிப்பு திறன்களை பெருக்கிக் கொள்ள வேண்டும் என நிர்வாகிகளுக்கு சிவகார்த்திகேயன் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் தனது ரசிகர்களை அரசியலுக்கு ஆயத்தமாக்குகிறா? என சமூக வலைதளங்களில் பேச்சு அடிபடுகிறது. மேலும், தனுஷ் ரசிகர்களை போன்று சிறு மக்கள் பணியை செய்ய சிவகார்த்திகேயனும் அவரது ரசிகர்களுக்கு அறிவுறுத்தியது கவனம் பெற்றுள்ளது.

வருங்கால முதல்வரே...
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்ட போது, ’வருங்கால முதல்வரே,’ என ரசிகர்கள் முழக்கமிட்ட நிகழ்வும் தற்போது கவனத்தை பெற்றுள்ளது.
சினிமாவிலிருந்து அடுத்தடுத்து முக்கிய பிரபலங்கள் அரசியலுக்குள் எண்ட்ரி கொடுப்பார்களோ? என்ற கருத்து சமூக வலைத்தளங்களில் வட்டமடிக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved