Also Watch
Read this

தேர்தல் ஆணையத்தை நோக்கி, ’இந்தியா கூட்டணி’ சார்பில் முற்றுகை பேரணியாக செல்ல முயன்ற ராகுல் காந்தி, பிரியங்கா, அகிலேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தேர்தல் ஆணைய விவகாரம்
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ராஜினாமா செய்ய வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சிகள் இன்று அக்டோபர் 6ஆம் தேதி, தேர்தல் ஆணையத்தை முற்றுகையிடும் பேரணி அறிவிக்கப்பட்டது. இந்த பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தியதால், சாலையில் அமர்ந்து, போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

எஸ்ஐஆர் முறைகேடு என குற்றச்சாட்டு
எஸ்ஐஆர் எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் முறைகேடு நடைபெற்றதாக கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது.

தேர்தல் ஆணையம் நோக்கி...
இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் திரண்டனர். அங்கிருந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமையகமான நிர்வாசன் சதன் நோக்கி பேரணியாக சென்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பேரணியில் பங்கேற்றனர்.

ராகுல்காந்தி கைது
இந்த நிலையில், இந்த பேரணியை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் டெல்லி நிதி ஆயோக் அலுவலகம் முன்பாக சாலையில் அமர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக கோரி முழக்கமிட்டனர். அப்போது, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு
இந்த போராட்டத்தை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகம், இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தைச் சுற்றிலும் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதுடன், டெல்லி போலீசார், மத்திய ஆயுதப் படையினர் என சுமார் 4,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நாடாளுமன்ற சாலை, படேல் சவுக் உள்ளிட்ட மத்திய டெல்லியின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை முன்னிட்டு, தேர்தல் ஆணைய அலுவலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved