news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

குலசை தசராவில் குத்தாட்டம், பக்தி நடுவே டபுள் மீனிங் பாடல்கள்

ஆபாச நடனங்களுக்கு தீர்வு எப்போது?

27

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் இரட்டை அர்த்தப் பாடல்களுடன் கூடிய ஆபாச நடனங்கள் இடம்பெறுவது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதனை தடுக்க நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும் அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் அதனை துளியளவும் கண்டு கொள்ளவில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. அதிகாரிகளின் அலட்சியப்போக்கு ஏன்? ஆபாச நடனங்களுக்கு தீர்வு எப்போது? என்பது குறித்த செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

உலகப்புகழ் பெற்ற...
ஆன்மீகமும், கடுமையான விரதமும், அம்மன் வேடங்களும் நிறைந்த உலகப்புகழ் பெற்ற தசரா திருவிழாவில் கடந்த சில ஆண்டுகளாக இரட்டை அர்த்தப் பாடல்களும், டிஸ்கோ நடனங்களும் இடம் பெறுவது காண்போரை முகம்சுளிக்க வைத்துள்ளது.

மைசூர் தசராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தனித்துவம் பெற்ற தசரா திருவிழா என்றால், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் சமேத ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா தான்.

வீடு வீடாக சென்று...
இங்கு நடைபெறும் 12 நாள் திருவிழாவுக்காக மாலை அணிந்து, விரதம் இருந்து, பல்வேறு அம்மன் வேடங்களை ஏற்று, வீடு வீடாகச் சென்று காணிக்கை பெற்று, தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

ஆனால், இந்த ஆன்மீகத் திருவிழாவின் பாரம்பரியம் தற்போது திசை மாறிச் செல்கிறதா? என்ற கேள்வி பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஒரு காலத்தில் தனித்தனியாக வேடமணிந்து, தாங்கள் பெற்ற காணிக்கையை கோவில் உண்டியலில் செலுத்திய பக்தர்கள், 1990ஆம் ஆண்டுக்கு பிறகு குழுக்களாக இணைந்து பாரம்பரிய நையாண்டி மேளம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் காணிக்கை சேகரிக்கத் தொடங்கினர்.

குழுவாக சேர்ந்ததால் போட்டி
ஆனால், காலப்போக்கில் அங்குள்ள குழுக்களுக்கு இடையேயான போட்டி அதிகரித்து, வெளியூர்களுக்குச் சென்று நிகழ்ச்சி நடத்தும் சில தசரா குழுக்களில், சினிமா நடனக் கலைஞர்கள் இடம்பெறத் தொடங்கியதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இதன் விளைவாக, இரட்டை அர்த்தப் பாடல்கள், ஆபாச நடனங்கள், குத்தாட்டங்கள் இடம்பெறுவதாகக் கூறப்படுகிறது.

பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடனாகச் செலுத்தும் காணிக்கை, ஆன்மீக நோக்கத்திற்குப் பதிலாக இத்தகைய நிகழ்ச்சிகளுக்குச் செலவிடப்படுகிறதா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

மெய் சிலிர்க்கும் நிகழ்வில்...
காளி வேடம் அணிந்த பக்தர்களின் ஆக்ரோஷமான தோற்றமும், அம்மன் மீதான பக்தியும் மெய்சிலிர்க்க வைக்கும் இந்தத் திருவிழாவில், டிஸ்கோ நடனங்கள் இடம்பெறுவது தமிழ் பாரம்பரியத்தைப் பாதிப்பதாகவும் பக்தர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தசரா விழாவுக்கு விரதம் இருக்கும் பக்தர்களின் மன உறுதியைச் சீர்குலைக்கும் விதமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நீதிமன்றத்தில் வழக்கு
இந்த விவகாரத்தில், ஆபாச நடனங்களுக்கு எதிராக வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் கடந்த 2017ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றமும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், அந்தக் கட்டுப்பாடுகள் முறையாக அமல்படுத்தப்படுகின்றனவா? விதிமீறல்கள் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளன. இதற்கிடையே, டிஸ்கோ நடனம் ஆடும் தசரா குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் அறங்காவலர் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

விளக்கம் என்ன?
ஆனால், அறங்காவலர் குழுத் தலைவர் கண்ணன் தொடர்புடைய ஆண்டங்காடு தசரா குழுவிலும் இதுபோன்ற நடனங்கள் இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்டவர்களின் விளக்கமும், அதிகாரிகளின் நடவடிக்கை விவரங்களும் தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது.

காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் ஏன் இதனை தடுக்கவில்லை?

இதில் என்ன தயக்கம் உள்ளது, பாரம்பரியத்தை சிதைக்கும் வகையில் இடம்பெறும் இதுபோன்ற நடனக் குழுக்கள் மீது நடவடிக்கை எடுப்பது எப்போது? என கேள்விகளும் தற்போது குவியத் தொடங்கியுள்ளன.

Related Link
குலசை சூரசம்ஹாரம் கோலாகலம், அரக்கனை வதம் செய்த அம்மன்

குலசை சூரசம்ஹாரம் கோலாகலம், அரக்கனை வதம் செய்த அம்மன்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குடும்ப சொத்து ஒருவருக்கு மட்டுமா?

25
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved