Also Watch
Read this
By: Manigandan Raja
இன்று (20-09-2026), திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் மகள் திருமிகு சாந்தி அவர்கள் மறைவெய்தியதையடுத்து, காவேரி மருத்துவமனையில் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.
அதுபோது, கழகத் தலவர் அவர்களது மனைவி திருமிகு. துர்கா ஸ்டாலின், தலைமை நிலையச் செயலாளர் திரு. பூச்சி முருகன், முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து கழகத் தலைவர் அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி பின்வருமாறு:
“தலைவர் கலைஞர் அவர்களும் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் நட்புக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்கள். காலத்தால் கரையாத அவர்களது நட்பின் பாசம், இரு குடும்பங்களையும் தலைமுறைகள் கடந்த உறவாகப் பிணைத்திருக்கிறது. அந்தப் பாசப் பிணைப்பில் எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே அன்பு பாராட்டி வந்த சகோதரி திருமிகு சாந்தி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புச் சகோதரியை இழந்து ஆற்றொணாத் துயரில் வாடும் அவரது கணவர் திரு. நாராயணசாமி, மகள்கள் திருமிகு. விஜி லட்சுமி, திருமிகு. சத்யவதி, சகோதரர்கள் திரு. ராம்குமார், திரு. பிரபு உள்ளிட்ட குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved