Also Watch
Read this
ராஜபாளையம் அருகே சிமெண்ட் கடைக்குள் புகுந்து ஒரு இளைஞரை 2 இளைஞர்கள் சேர்ந்து, கத்தியால் குத்தியும், தலையில் கல்லைப்போட்டும் கொ* செய்த அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கஞ்சா கும்பலின் அட்டூழியத்தை அடக்கக்கோரி, புகார் அளித்தும் தளவாய்புரம் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் அலட்சியாக இருந்ததால் தான் இளைஞரின் உயிரே பறிபோய் உள்ளதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் அந்த இன்ஸ்பெக்டரையும் வழக்கில் சேர்த்து கையில் காப்பு மாட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிசிடிவி காட்சிக்கு பின்னால்...
ஒரு இளைஞரை 2 இளைஞர்கள் சேர்ந்து காட்டுமிராண்டித்தனமாக அடித்துக் கொ* செய்யும் இந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிக்கு பின்னால் கஞ்சா போதையும், அதனால் ஏற்பட்ட பிரச்சனையும்தான் காரணமாக உள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துமாரி. இவரது வீட்டின் அருகே சில இளைஞர்கள் கஞ்சா மற்றும் மது போதையில் ஆபாச வார்த்தைகளில் பேசியபடியே சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். அதனை தட்டிக்கேட்ட முத்துமாரியையும் அந்த இளைஞர்கள் காது கூசும் வார்த்தைகளால் திட்ட, அவர் தளவாய்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 2 காவலர்கள் முத்துமாரியின் வீட்டருகே வந்து அந்த இளைஞர்களை லேசாக திட்டி அங்கிருந்து அனுப்பி வைத்ததாக தெரிகிறது.

கதவை உடைத்து அட்டூழியத்தில்...
தங்கள் மீதே புகார் அளிப்பதா? என ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் அதிகாலை 3 மணிக்கு முத்துமாரி வீட்டுக்கதவை தட்டியும், கல்லால் எறிந்தும், அரிவாளால் கதவை உடைத்தும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போதே, காவல் நிலையத்திற்கு போன் செய்து தகவல் கொடுத்துள்ளார் முத்துமாரி. மேலும், விடிந்ததும் தனது சகோதரனின் மகன் மணிசெல்வாவை அழைத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கும் சென்று புகாரும் கொடுத்துள்ளார் முத்துமாரி. ஆனால், மதியம் 2 மணிவரை முத்துமாரியை காவல் ஆய்வாளர் குருவத்தாய் காத்திருக்க வைத்ததாகவும், புகாரை கண்டுகொள்ளவே இல்லையெனவும் கூறப்படுகிறது.

தீர்த்துக்கட்ட திட்டம்...
இதனிடையே, புளியங்குடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு தனது தந்தை காமராஜ் செல்ல இருப்பதாகவும், அதனால் சிமெண்ட் கடையை கவனித்துக்கொள்ள தன்னை அழைப்பதாகவும் அத்தை முத்துமாரியிடம் கூறிவிட்டு காவல் நிலையத்திலிருந்து கிளம்பி சென்றார் மணிசெல்வா. இதனை நோட்டமிட்ட கஞ்சா இளைஞர்கள், மணிசெல்வாதான் முத்துமாரி புகார் அளிப்பதற்கே காரணம் என, நினைத்ததோடு அவரை தீர்த்துக்கட்ட திட்டமும் தீட்டி உள்ளனர்.

பொதுமக்கள் கத்தி கூச்சலிட...
தந்தையின் சிமெண்ட் கடையில் மணிசெல்வா தனியாக அமர்ந்திருந்தபோது உள்ளே நுழைந்த இளைஞர்கள் மாணிக்கம் மற்றும் ஈஸ்வரன் ஆயுதத்தால் பயங்கரமாக தாக்கி உள்ளனர். மேலும், மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிறு மற்றும் முதுகில் குத்தி கடைக்குள் இருந்து இழுத்து வெளியே கொண்டு வந்து தலையில் கல்லை போட்டுள்ளனர். அதனை பார்த்து பொதுமக்கள் கத்தி கூச்சலிட அங்கிருந்து இருவரும் ஓட்டம் பிடித்தனர். மணிசெல்வாவை கண்மூடித்தனமாக ஆயுதத்தால் அடிக்கும் சிசிடிவி காட்சியும் வெளியாகி உள்ளது.

கைது செய்ய வேண்டும்
இதனிடையே, தகவல் அறிந்து ஓடிவந்த முத்துமாரி காலை 8 மணிக்கே புகார் அளித்தபோதே காவல் ஆய்வாளர் குருவத்தாய் கண்டுகொள்ளவில்லை எனவும் அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் கொ* அளவுக்கு சென்றிருக்காது எனவும் கூற, மணிசெல்வாவின் உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர். காவல் ஆய்வாளர் குருவத்தாயையும் வழக்கில் சேர்த்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்த அவர்கள், இளைஞரின் உடலை வாங்க மறுத்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுஒருபுறமிருக்க, தப்பி ஓடிய இளைஞர்களையும் போலீசார் தென்காசியில் மடக்கி பிடித்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved