Also Watch
Read this
யூடியூபர் மதுமிதாவின் வீட்டில் 118 சவரன் நகைகளை கொள்ளையடித்த திருடர்கள் சிக்கவே கூடாது என மொட்டையடிக்காமல், காவடி எடுக்காமல் கமெண்டுகளிலேயே பிரார்த்தனை செய்துவந்த பலரது வேண்டுதல் பொய்த்துப்போய் தென்மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் கொத்தாக பிடிபட்டனர். சம்பவம் நடந்த 4 நாட்களிலேயே கொள்ளையர்களை கைது செய்த காவல்துறையை வழக்கமாக பாராட்டிவரும் பொதுமக்கள், மதுமிதா விவகாரத்தில் நீதியை கொன்றுவிட்டதாகவும், அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் அடிஅடியென அடித்து வருகின்றனர்.

பேசுபொருளான சம்பவம்
போலீசில் பிடிபட்டது என்னவோ வருத்தம்தான். ஆனாலும், திமிர்பேச்சு பேசிய, கன்னியாகுமரி யூடியூபர் மதுமிதாவின் வாய்சவடாலை அடக்கிய நீங்கள் என்றுமே வீரர்கள்தான் என 3 திருடர்களையும் தேறுதல்படுத்தி தங்களை ஆறுதல்படுத்திக் கொள்கிறார்களாம் வலைதளவாசிகள்.

வீடியோவை காட்டி...
விற்கிற விலைக்கு ஒரு குண்டுமணி தங்கம்கூட வாங்க முடியலையே? என ஏக்கப்பெருமூச்சுவிடும் பெண்களுக்கு மத்தியில் நகைக்கடை விளம்பரங்களில் வருவதுபோன்று விதவிதமான வேலைப்பாடுகளுடன் கூடிய நகைகளை அணிந்து அவர்களை வெறுப்பேற்றி வந்தவர்தான் யூடியூபர் மதுமிதா. அதேபோல், மாடாய் உழைத்து ஓடாய் தேய்கிறோம், ஆனாலும் கையில் கால்காசுகூட மிஞ்சுவதில்லையே என கவலைப்படும் ஆண்களையும் பணக்கட்டு அபிஷேக வீடியோவைகாட்டி சீண்டி வந்தார்.

சவால் விட்டார்
கணவர் என்னதான் ஏலக்காய் வியாபாரம் செய்தாலுமே வாராவாரம் எப்படிதான் நகைகள் வாங்குகிறாரோ? நம் பக்கமும் அந்த அதிர்ஷ்டகாற்று வீசினால் என்ன? என கமெண்டுகளில் சிலர் தங்கள் ஆதங்கத்தை கொட்ட, இப்படியே பெருமை பீத்திக்கொண்டிருந்தால் ஒன்றுவிடாமல் கையோடு அள்ளிக்கொண்டு போய்விடுவோம் என சிலர் வெளிப்படையாகவே பொறாமையை பதிவிட்டனர். அந்த பதிவுக்கு பதிலடி கொடுத்த மதுமிதா, தன் வீட்டுக்குள் நுழைவதெல்லாம் அவ்வளவு ஈசியில்லை என சவால்விட்டார். அதுதான், தென்மாவட்ட திருடர்களை உசுப்பேற்றிவிட்டது.

118 சவரன் நகைகள்
மகளின் பிறந்த நாளுக்கான பர்சேஸிற்காக குடும்பத்துடன் ஜவுளிக்கடைக்கு சென்ற கேப்பில் மதுமிதா வீட்டில் தங்கள் கைவண்ணத்தை காட்டினர் திருடர்கள். கேஸ் கட்டிங் மெஷின் மூலம் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 118 சவரன் நகைகளை அலேக்காக அள்ளிக்கொண்டு எஸ்கேப் ஆகினர்.

திருடர்களுக்காக பிரார்த்தனை
அவர்களை தேடும் பணியில் ஒருபக்கம் போலீசார் இறங்க, அந்த திருடர்குல சிங்கங்களை கைது செய்யவே வேண்டாம், அவர்கள் நூறாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ வேண்டும் என பலரும் சமூகவலைதளத்தில் பெரும் பிரார்த்தனையே நிகழ்த்திக் கொண்டிருந்தனர்.

கொள்ளை போன பிறகும்...
அதேநேரம், திருடர்களை கண்டும்காணாமல் விட்டுவிடுங்கள் என காவல்துறைக்கும் கோரிக்கைள் குவிந்தது. அதுமட்டுமல்லாது, தலைகால் புரியாமல் ஆடினால் இப்படிதான் நடக்கும் என மதுமிதாவையும் கமெண்டில் கழுவி ஊற்றினர். அதனால், கமெண்ட் பாக்ஸையே கட்டிப்போட்டார் மதுமிதா. ஆனால், கொள்ளை சம்பவத்திற்கும் பிறகும் ரீல்ஸ் வீடியோக்கள் பதிவிடுவதை நிறுத்தவில்லை. அது பலரையும் எரிச்சலடையவே வைத்தது.

சிசிடிவி கேமராவில்...
இதனிடையே, 500க்கும் மேற்பட்ட சிவிடிவி கேமரா பதிவுகளை அலசிய காவல்துறையினரின் கண்ணில், இருவர் ஹெல்மெட் அணிந்தும், முகமூடி அணிந்தும் டெலிவரி பையுடன் பைக்கில் வந்து சென்ற காட்சி தென்பட்டது. அதனை வைத்து விசாரணையை முடுக்கிவிட, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த 30 வயதான ஆட்டோ டிரைவர் இசக்கி பாண்டிதான் தனது நண்பர்களான முக்கூடல் பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் ஆலங்குளத்தை சேர்ந்த முருகேசன், திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்த தங்கப்பாண்டி ஆகிய இருவருடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றினார் என்பது தெரியவந்தது.

கூட்டு சேர்ந்து கொள்ளை
மதுமிதாவின் இன்ஸ்டா ஃபாலோயர்தான் இசக்கி பாண்டி. கட்டுக்கட்டான பணமும் நகைகளும் ஒருபக்கம் கண்ணை உறுத்த மதுமிதாவின் சவால் வீடியோவும் உரசி பார்த்ததால் சக ஆட்டோ டிரைவர் மற்றும் கொத்தனாரை கூட்டு சேர்த்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றினாராம் இசக்கிப்பாண்டி.

அதிருப்தியை கொட்டிய...
பம்பரமாய் சுழன்று 4 நாட்களிலேயே திருடர்களை கைது செய்துள்ள காவல்துறைக்கு வழக்கமாக பாராட்டுகள்தான் குவியும். ஆனால், மதுமிதாவின் வழக்கில் நடக்கும் விவகாரமே விநோதம்தான். ஏழைகள் வீட்டில் திருடுபோனால் வழக்கு ஜவ்வாக இழுக்கும்.

ஆனால், பணம் கொழிக்கும் வீடாக இருந்தால் மட்டும் பலஅடி தூரம் பாய்ந்து வேலை பார்ப்பதா? உங்கள் வேகத்தை ஏன் மதுமிதா வழக்கில் காட்ட வேண்டும்? மதுமிதாவிற்கு தக்க பாடம் புகட்டிய வீரர்கள் 3 பேரையும் பிடித்தது நியாயமே இல்லை. அவர்கள் என்ன இல்லாத வீட்டிலா திருடினார்கள்? காவல்துறையே நீதியை கொல்வதா? உங்களை வன்மையாக கண்டிக்கிறோம் என காவல்துறை மீது தங்கள் அதிருப்தியை காட்டி வருகின்றனர்.

98 சவரன் மீட்பு
ஆனாலும், தன் கடமையில் இருந்து தவறாத காவல்துறையினர் திருடர்கள் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்ததோடு அவர்களிடமிருந்த 98 சவரன் நகைகளையும் மீட்டனர். மேலும், திருடர்கள் பிடிபட்ட விதம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்சுல் நாகரும் விளக்கமளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved