Also Watch
Read this
By: Manigandan Raja

பேருந்து நிலைய கட்டடம் சிதிலம் :
செங்கல்பட்டு அருகே மலையடி வேண்பாக்கத்தில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் (CMDA) பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து நிலையத்தின் கட்டுமானத் தரம் தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
இன்னும் சில வாரங்களில் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட வேண்டிய நிலையில், பேருந்து நிலையத்தின் தற்போதைய நிலை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, பேருந்து நிலையத்தின் மேல் தளத்தில் டைல்ஸ் ஒட்டும் பணிகளுக்காக தண்ணீர் ஊற்றப்பட்டபோது.
அந்தத் தண்ணீர் கசிந்து கீழ் தளத்தில் உள்ள பீம்கள் (Beams) வழியாக அருவி போலக் கொட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முறையான நீர் கசிவு தடுப்பு நடவடிக்கைகள் (Waterproofing) மேற்கொள்ளப்படாமல் அவசர கதியில் பணிகள் நடைபெறுவதையே இது காட்டுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இது ஒருபுறமிருக்க, பேருந்து முனையத்தின் பல பகுதிகளில் சுவர்கள் மற்றும் தூண்களில் ஆங்காங்கே விரிசல்கள் (Cracks) தென்படுவது, சுற்றுச்சூழலில் உள்ள பெயிண்ட் பூச்சிகளும் உறிந்து வருவதால் கட்டுமானத்தின் உறுதித்தன்மை குறித்த பெரும் கேள்விக்குறியை எழுப்பியுள்ளது.
திறப்பு விழாவுக்கான காலக்கெடு நெருங்குவதால், தரத்தைப் பொருட்படுத்தாமல் பணிகளை விரைந்து முடிப்பதில் மட்டுமே ஒப்பந்ததாரர்கள் ஆர்வம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கட்டிடம் பயன்பாட்டிற்கு வரும் முன்பே இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவது, எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இடத்தில் பெரிய விபத்துகளுக்கு வழிவகுத்துவிடுமோ என்ற பீதி மக்களிடையே நிலவுகிறது.
கோடிக்கணக்கான ரூபாய் அரசு நிதியில் கட்டப்படும் இந்தப் புதிய முனையத்தில் ஏற்பட்டுள்ள இந்தக் குளறுபடிகள் குறித்து மாவட்ட நிர்வாகமும், சி.எம்.டி.ஏ (CMDA) உயர் அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பணிகளைச் சரிவரச் செய்யாத ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, கட்டிடத்தின் உறுதித்தன்மையை ஐ.ஐ.டி (IIT) போன்ற தன்னாட்சி அமைப்புகளின் மூலம் ஆய்வு செய்த பிறகே இதனைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்க வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved