Also Watch
Read this
தமிழர்களை திருடர்களாக சித்தரித்த கட்சி பாஜக என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளே இல்லாத கடைக்கு டீ ஆற்றுவது போல ஆக்ராவுக்கு மெட்ரோ அனுமதி கொடுத்த பாஜக அரசு, கோவைக்கும், மதுரைக்கும் மெட்ரோ சேவையை மறுத்து வருகிறது என்று, குற்றம்சாட்டினார்.

தமிழ்நாட்டுக்கு வந்தால் மட்டும் தமிழ் பாசம் என பிரதமர் மோடியும், அமித்ஷாவும் நடிக்கிறார்கள் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் உரிமைத் தொகை, விடியல் பயணம் என திமுக வாக்குறுதியை தான் அதிமுக காப்பி அடித்திருக்கிறது என்றும் சாடினார்.

கோவையில் மு.க.ஸ்டாலின்
கோவை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின், கோவை கொடீசியா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். பிரச்சார மேடைக்கு வருவதற்கு முன்னர், சின்னயம்பாளையத்திலிருந்து பிரச்சார மேடை வரை திறந்த வேனில் நின்றவாறு முதல்வர் ஸ்டாலின் ‘ரோடு ஷோ’ நடத்தினார்.

ஒன்று விடாமல் காப்பி
பொதுக்கூட்டத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு மாபெரும் வெற்றியை கோவை மக்கள் தந்தீர்கள். அது 2026 தேர்தலிலும் முழு வெற்றியாக தொடர வேண்டும். 2021 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் மட்டுமின்றி, கொடுக்காத பல்வேறு திட்டங்களையும் நிறைவேற்றிவிட்டு உங்கள் முன்பு வந்துள்ளேன். இவ்வாறு நான் கூறியதை போல், அதிமுக ஆட்சியில் பழனிசாமி செய்த சாதனைகளை அவரால் கூற முடியுமா? மகளிர் உரிமைத் தொகை திட்டம், விடியல் பயணம் என்று நம் திட்டங்களை ஒன்று விடாமல் காப்பி அடித்து அறிக்கையாக இபிஎஸ் வெளியிட்டுள்ளார்.

வாக்களிக்காதது பாவச் செயலா?
தமிழ்நாட்டில் பல்வேறு இனம், மொழி, மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அமைதியாக, நிம்மதியாக வாழ்கின்றனர். வந்தாரை வாழ வைக்கும் நம்மைப் பார்த்து அபாண்டமாக பழி போட்டவர் பிரதமர் மோடி. குடியரசு தின விழாவில் நம் அலங்கார ஊர்திக்கு இடமில்லை என மறுத்தனர். இதனால் தான் தமிழ்நாட்டில் உங்களுக்கு இடம் இல்லை என மக்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டின் மீது வெறுப்பு ஊறிப்போய் உள்ள குணம் அவர்களுக்கு. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்த அரசு தான் பாஜக அரசு. 20 லட்சம் மக்கள் தொகை இல்லை என காரணம் தெரிவிக்கின்றனர்.

கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி மறுக்க வேண்டிய அவசியம் என்ன? அந்த 2 நகரங்களும் தமிழ்நாட்டில் இருப்பது தான் காரணம். தமிழ்நாட்டை பார்த்தால் பாஜகவுக்கு எப்படித் தெரிகிறது. பாஜகவுக்கு வாக்களிக்காதது என்ன பாவச் செயலா?

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழங்கும் வாக்கு
மத்திய பட்ஜெட் தயாரிக்கும் போது, இயற்கை பேரிடருக்கு நிவாரண நிதி தரும் போது, தமிழ்நாட்டை பாஜக மறந்துவிடும். தேர்தல் வந்தால் இவர்களுக்கு தமிழ்நாடு நினைவுக்கு வரும்.

இப்படியெல்லாம் நீங்கள் தமிழ்நாட்டை பழி வாங்குவதால் தான், எங்கள் மக்களுக்கும் வாக்குச்சாவடிக்கு செல்லும் போது பாஜக நினைவுக்கு வராது. இனியும் வரக்கூடாது.

நீங்கள் என்ன திட்டம் போட்டு எங்கள் வளர்ச்சியை தடுத்தாலும், எங்கள் மக்களுக்கான திட்டத்தை தொடர்ந்து கொடுப்போம். திராவிட மாடல் சாதனைகளை நாங்கள் தொடர்ந்து வெற்றியாக படைத்துக் கொண்டே இருப்போம்.

இதன் தொடர்ச்சியாக அடுத்த 5 ஆண்டுகளி்ல் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் என்னென்ன செய்யப்போகிறோம் என தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளோம்.

இந்த தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கை தான் சூப்பர் ஸ்டார். நாங்கள் சொன்னால், செய்வதை தான் சொல்வோம். கோவை மக்கள் இம்முறை 10க்கு 10 வெற்றியை திமுகவுக்கு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வழங்க வேண்டும். நீங்கள் வழங்கும் வாக்கு ஒரு கூட்டணிக்காக மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழங்கும் வாக்கு.

தக்க பதிலடி தந்தாக வேண்டும்
பொருளாதார வளர்ச்சி, ஆடைகள், காலணிகள், மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் நம்பர்-1 என, இந்தியளவில் சாதித்துவிட்டு நாங்கள் வாக்குகேட்க வந்துள்ளோம். ஆனால், கலவரம் செய்தால் ஜெயித்து விடலாம் என நினைக்கும் கட்சிக்கு தமிழ்நாடு தக்கபதிலடி தந்தாக வேண்டும். நீங்கள் தருவீர்கள்.

தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்ற ஜனநாயக போரில் அரசியல் விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்டு, தமிழ்நாட்டை காக்க கோவையில் உள்ள அனைவரும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved